Published:Updated:

``நாளைக்கு என் கணவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா இந்த ரெண்டு பேர்தான் பொறுப்பு!'' - நடிகை வினோதினி

வினோதினி
வினோதினி

"நாளைக்கு என் கணவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, இந்த ரெண்டு பேர்தான் பொறுப்புங்கிறதை இந்த இடத்துல நான் பதிவுபண்ண விரும்புறேன்."

நடிகை வினோதினியை நினைவிருக்கிறதா? 'வண்ண வண்ணப் பூக்கள்', 'ஆத்தா உன் கோவிலிலே' என 90'களில் வெளியான சில படங்களின் ஹீரோயின். சினிமாவைத் தொடர்ந்து சிலகாலம் சீரியல்களிலும் நடித்தவர், வெங்கட் ஶ்ரீதர் என்கிற தொழிலதிபரைக் கரம்பிடித்ததும் நடிப்பதைக் கைவிட்டார்.

10 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சில மாதங்களுக்கு முன்புதான் மறுபடியும் சீரியல் பக்கம் வந்தார். சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் 'அக்னி நட்சத்திரம்' தொடரில் கமிட்டானவர், இரண்டே மாதங்களில் தொடரிலிருந்து வெளியேறினார்.

வினோதினி
வினோதினி

'என்ன ஆச்சு? விரும்பி வந்த ரீ என்ட்ரி தானே...' என்ற கேள்வியுடன் வினோதினியைச் சந்தித்தோம்.

''மகேஷ், சரண்யா மற்றும் பலர்' படத்துல கடைசியா நடிச்சிருந்தேன். கணவரோட பிசினஸ் நல்லபடியா போயிட்டிருந்ததால, ஃபேமிலியை மிஸ் பண்ணிட்டு நடிச்சாகணும்கிற கட்டாயம் இல்லாம இருந்தது. ரெண்டு குழந்தைகளையும் ஸ்கூல் கூட்டிட்டுப் போய் வர்றது, டியூஷன் கூட்டிட்டுப் போறதுன்னு சராசரி அம்மாவுடைய பொறுப்புகளை சந்தோஷமா செய்துட்டிருந்தேன். இடையில், நிறைய சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தபடிதான் இருந்தன. 'பிள்ளைகள் வளரத் தொடங்கிட்டாங்க. விருப்பம்னா சீரியல், சினிமா பண்ண வேண்டியதுதானே'னு கணவரே சொன்ன பிறகுதான், 'அக்னி நட்சத்திரம்' தொடர்ல கமிட் ஆனேன்.

ஆனா, சீரியல் தொடங்கிய ரெண்டே மாசத்துல என் கணவர் ஒரு விபத்தைச் சந்திச்சார். அந்த விபத்துதான் 'திரும்பவும் நடிக்கலாம்'னு வந்த என்னை மறுபடியும் வீட்டுக்குள் முடக்கிப் போட்டுடுச்சு. 'நடிக்க முடியலை'ங்கிறதுகூட எனக்கு பெரிசாப் படலை. ஆனா அந்த விபத்து, நல்லா இருந்த என் கணவரையும் நடக்க முடியாதபடி வீல் சேரில் உட்கார வெச்சிடுச்சு'' என்றவர், 'இது தொடர்பா சில விஷயங்களை நான் பேசியே ஆகணும்' என்றபடி தொடர்ந்தார்...

''நான் நடிக்க முடியாம, கணவர் நடக்க முடியாமப் போன நிலைல, நாங்க எந்தத் தப்புமே செய்யலைங்கிறதுதான் கொடுமை. ராங் ரூட்ல வந்த சில பசங்க உண்டாக்கின விபத்து அது. அந்தப் பசங்க அபராதம் கட்டிட்டுப் போயிட்டாங்க. ஆனா, மூணு மாசம் ஐ.சி.யு-விலேயே இருந்த கணவர் பிழைப்பாரா, மாட்டாரானு ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்னு நகர்ந்த வேதனையை அனுபவிச்சேன். மருத்துவச் செலவு ஒருபக்கம், பிசினஸ் பாதிப்பு ஒருபக்கம்னு கடந்த சில மாதங்களாவே வாழ்க்கை ரொம்பப் படுத்தி எடுக்குது. விபத்துக்கு காரணமானவங்ககிட்டே நஷ்ட ஈடு கேக்கலாம். ஆனா, அதுக்குக் கூட வழக்குப் போட்டு நடத்த நேரமில்லை. கணவர் கூடவே இருக்க வேண்டிய சூழல்.

வினோதினி
வினோதினி
``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு வெறுப்பேத்துவார்!'' -சீரியல் ஜெயஶ்ரீ

''டிரைவ் பண்றப்பகூட, 'மத்தவங்க எப்படி வேண்ணாலும் வரலாம்; நாம கவனமா இருக்கணும்'னு சொல்றவர் அவர். அப்படிப்பட்டவர் விபத்துல சிக்கினார்னா அதுக்குக் காரணம் பிசினஸ்ல சில கோடிகளை ஏமாந்த மன அழுத்தம்தான். அஞ்சாறு வருஷமாவே இந்த அழுத்தத்துல இருந்தார். சஞ்சீவ், விக்ரம்னு அண்ணன் தம்பிங்க ரெண்டு பேர், தங்களோட வீட்டை புதுப்பிச்சுக் கட்டித்தரணும்னு என் கணவர்கிட்ட அக்ரிமென்ட் போட்டு, சில கோடிகள் பணத்தையும் வாங்கினாங்க. அந்த வீட்டுப் பத்திரம் வங்கியில இருந்திருக்கு. பணத்தை வாங்கிட்டுப் போனவங்க, பத்திரத்தையும் மீட்கலை. அதனால அந்த வொர்க்கும் நடக்கலை. 'சரி, பணத்தை திருப்பித் தந்திடுங்க'ன்னு கேட்கும்போது, தர மறுத்துட்டாங்க. விவகாரம் கோர்ட்டுக்குப் போய் எங்களுக்குச் சாதகமா தீர்ப்பு வந்திடுச்சு. அதன்பிறகும் 'அப்பீலுக்குப் போவோம்'னு நிக்கிறாங்க. இந்தப் பிரச்னைதான் அவருக்கு பெரிய அழுத்தமா இருந்தது.

விபத்து நடந்த அன்னைக்குக்கூட, அந்த விவகாரம் தொடர்பா பேசத்தான் போயிட்டிருந்தார். அதனால், அந்த விபத்துக்கு முக்கியக் காரணமானவங்கன்னு இவங்களைத்தான் சொல்வேன். விபத்து நடந்தப்பிறகு கூட, சம்பந்தப்பட்ட அந்த ரெண்டு பேர்கிட்ட நான் பேசினேன். 'அக்ரிமென்ட் போட்டது உங்க கணவர்தானே; உங்களுக்கு இது தொடர்பா பேச உரிமையில்லை'ங்கிற பதிலைச் சொல்றாங்க. கோர்ட்ல தீர்ப்பு வந்த பிறகும் அதை ஏத்துக்காம, தொடர்ந்து என் குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டிருக்காங்க. நாளைக்கு என் கணவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா, அந்த ரெண்டு பேர்தான் பொறுப்புங்கிறதை இந்த இடத்துல நான் பதிவு பண்ண விரும்பறேன். அவர் நடக்க இன்னும் எத்தனை மாசம் ஆகும்னு தெரியாத சூழல்ல வேதனையோட சொல்றேன். இந்த நிலைமைக்கு எங்களை ஆளாக்கினவங்கள தண்டிச்சே ஆகணும்'' என்கிறார் வினோதினி.

வினோதினி
வினோதினி
``சீரியல் ப்ரோமோவுக்கு வர்ற கமென்ட்லாம் பார்க்கவே கஷ்டமா இருக்கும்!'' - `ஆயுத எழுத்து' ஆனந்த்

வினோதினி குறிப்பிடும் சஞ்சீவ் மற்றும் விக்ரம் தரப்பில் சஞ்சீவிடம் பேசியபோது,

''எங்க கம்பெனி பெயர்லதான் வழக்கு நடந்திட்டிருக்கு. கம்பெனிக்கு நாலஞ்சு டைரக்டர்கள் இருக்காங்க. அவங்க எல்லார்கிட்டேயும் கேக்காம இந்த விஷயத்துல நான் எதையும் பேச முடியாது' என மறுத்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு