Published:Updated:

ஏஜெண்ட் கண்ணாயிரம் விமர்சனம்: ரீமேக்கில் ரிஸ்க் எடுக்கும் சந்தானம்; துப்பறிவாளனாக ஸ்கோர் செய்கிறாரா?

ஏஜெண்ட் கண்ணாயிரம்
News
ஏஜெண்ட் கண்ணாயிரம்

உடல்மொழியில் படம் முழுவதும் கொஞ்சம் 'துப்பறிவாளன்' விஷாலின் சாயலில் வளைய வருகிறார் சந்தானம். ஒரிஜினலில் நவீன் பொலிஷெட்டியிடம் இருக்கும் துறுதுறு குறும்பு, இந்த கண்ணாயிரம் சந்தானத்திடம் மிஸ்ஸிங்.

Published:Updated:

ஏஜெண்ட் கண்ணாயிரம் விமர்சனம்: ரீமேக்கில் ரிஸ்க் எடுக்கும் சந்தானம்; துப்பறிவாளனாக ஸ்கோர் செய்கிறாரா?

உடல்மொழியில் படம் முழுவதும் கொஞ்சம் 'துப்பறிவாளன்' விஷாலின் சாயலில் வளைய வருகிறார் சந்தானம். ஒரிஜினலில் நவீன் பொலிஷெட்டியிடம் இருக்கும் துறுதுறு குறும்பு, இந்த கண்ணாயிரம் சந்தானத்திடம் மிஸ்ஸிங்.

ஏஜெண்ட் கண்ணாயிரம்
News
ஏஜெண்ட் கண்ணாயிரம்
லோக்கல் போலீஸிடம் பல்பு வாங்கும் பிரைவேட் டிடெக்டிவ் கண்ணாயிரம், லோ-பட்ஜெட் ஷெர்லாக் ஹோம்ஸாக வீறுகொண்டெழுந்து ஜெயித்தால் அதுதான் ஏஜெண்ட் கண்ணாயிரம்!  
2019-ல் டோலிவுட்டில் கம்மியான பட்ஜெட்டில் வெளியாகி ஹிட்டடித்த `ஏஜெண்ட் சாய்ஶ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் ரீமேக்தான் கதை. ஆயிரம் கண்கொண்ட சந்தானத்துக்கு கதவுகளைத் திறந்துவிட்டு கம்-பேக் சொல்கிறதா இந்தப் படம்?

ஊருக்குள் பெட்டி கேஸ்களைக் கண்டுபிடித்துக் கொடுத்து வீட்டு வாடகைகூட கட்ட முடியாமல் வாழும் டிடெக்டிவ் கண்ணாயிரம்தான் சந்தானம். அவருக்கும் லோக்கல் போலீஸுக்கும் ஆகவே ஆகாது. குற்றங்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் போலீஸ் வருவதற்கு முன்பாகவே சென்று 'துப்பு துலக்குகிறேன்' என்று போலீஸுக்குக் குடைச்சல் கொடுக்கிறார் சந்தானம். இதனால் அவரை சந்தேக கேஸில் கைது செய்து லாக்-அப்பில் வைக்கிறது போலீஸ். அவர் வெளியில் வந்ததும் ரயில் தண்டவாளம் ஓரம் பிணம் கிடப்பதாக ஒரு போன் வர ஸ்பாட்டுக்குப் போகிறார். மீண்டும் சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறது போலீஸ். லாக்-அப்புக்குள் இருக்கும்போது, கூட இருக்கும் பெரியவர் முனீஸ்காந்த், தன் மகளைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லிக் கதறி அழுகிறார். 

ஏஜெண்ட் கண்ணாயிரம்
ஏஜெண்ட் கண்ணாயிரம்

'நான் உங்கள் மகளைக் கண்டுபிடித்துக் கொடுக்கிறேன்!' என்று வாக்குக் கொடுத்து துப்பு துலக்கக் களமிறங்குகிறார் சந்தானம். ரயில்வே தண்டவாளங்கள் அருகே கிடக்கும் பிணங்கள், திடீர் திடீரென நிகழும் கொலைகள் என இடியாப்பச் சிக்கலாய் நீள்கிறது கேஸ். தன் புத்திசாலித்தனத்தால் மெல்ல மெல்ல மர்ம முடிச்சுகளை சந்தானம் எப்படி அவிழ்க்கிறார் என்பதே படத்தின் கதை!

`ஐ ஆம் ஏஜெண்ட் கண்ணாயிரம்... ஃபீஸ் ரெண்டாயிரம்!' என கோட்-சூட், தொப்பியோடு அறிமுகமாகும் சந்தானம் ஏஜெண்ட் கண்ணாயிரமாக டிடெக்டிவ் பாத்திரத்தில் வித்தியாசமாய் தோன்றுகிறார். உடல்மொழியில் படம் முழுவதும் கொஞ்சம் `துப்பறிவாளன்' விஷாலின் சாயலில் வளைய வருகிறார். இன்னும் `குலு குலு' ஃபீவரில் இருக்கிறார் போல. ஒரிஜினலில் நவீன் பொலிஷெட்டியிடம் இருக்கும் துறுதுறு குறும்பு, இந்த கண்ணாயிரம் சந்தானத்திடம் மிஸ்ஸிங்.

மாறுபட்ட காமெடி, இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் கதையில் காமெடிக்கு இடம் கொடுக்காமல் அவர் சீரியஸாகத் துப்பறிந்து நடித்திருப்பது படத்திற்கு மைனஸ்தான். பல இடங்களில் அண்டர்ப்ளே செய்திருப்பது ஆரம்பத்தில் வித்தியாசமான சந்தானமாகத் தோன்றினாலும் ஒரு கட்டத்தில் அந்த கேரக்டர்மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. ஆரம்பத்தில் புலனாய்வுக் காட்சிகளில் சந்தானம் சீரியஸாகச் செய்யும் விஷயங்கள் காமெடியாவதாகக் காட்டுகிறார்கள். அதுவும் கூட 'அதுக்கென்ன இப்போ' என்பதைப்போலவே கடக்கின்றன. நல்லவேளையாக இரண்டாம் பாதியில் புத்திசாலித்தனமாக அவர் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் இடங்களில் ஸ்கோர் செய்து விடுகிறார். 

ஏஜெண்ட் கண்ணாயிரம்
ஏஜெண்ட் கண்ணாயிரம்

அம்மா சென்டிமென்ட், மெதுவான திரைக்கதை எனப் படம் முதல் பாதியில் அலைபாய்ந்தாலும் இரண்டாம் பாதியில் வேகமெடுத்து படத்தைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா. ஏற்கெனவே கவன ஈர்ப்பைப் பெற்ற படத்தை அப்படியே அதே கதையமைப்போடு எடுத்திருந்தாலே படம் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும். திரைக்கதையைக் கொஞ்சம் மாற்றியிருப்பது ஏனோ?

படத்தின் ஹீரோயின் ரியா சுமன், படம் முழுவதும் சந்தானத்துக்கு உதவும் பாத்திரத்தில் இயல்பாக வந்து போகிறார். லவ் போர்ஷன் எதுவும் இல்லாமல், டூயட் எதுவும் இல்லாமல் துப்பு துலக்குவதில் உதவி செய்யும் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். 

முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, குரு சோமசுந்தரம் போன்ற நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவே! 'குக்கு வித் கோமாளி' புகழ், சந்தானத்துக்கு உதவியாளராக காமெடி என்ற பெயரில் ராவடி பண்ணுகிறார். அவர் போலீஸிடம் நிஜ அறை வாங்கும் காட்சியைத்தவிர எதுவும் சிரிப்பைத் தரவில்லை.

படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தேனி ஈஸ்வர் - சரவணன் ராமசாமி இரவையும் பகலையும் வித்தியாசமன கலர் டோன்களில் காட்டி ஈர்க்கிறார்கள். 

ஏஜெண்ட் கண்ணாயிரம்
ஏஜெண்ட் கண்ணாயிரம்

இசை யுவன் ஷங்கர் ராஜா. ஒரு ஒப்பாரி ராப் படத்தில் சடுதியில் வந்து மறைகிறது. ஒரு காமெடி டிடெக்டிவ் கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையை படம் முழுவதும் படரவிட்டிருப்பது பாராட்டத்தக்கது. 

லோக்கல் போலீஸிடம் மாட்டிக் கொள்ளும் பிரைவேட் டிடெக்டிவ் கண்ணாயிரம், எப்படி வீறுகொண்டு எழுந்து புத்திசாலித்தனமாக ஒரு பெரிய மெடிக்கல் மாஃபியா கும்பலைப் பிடிக்கிறார் என்ற ஒன்லைனில் இருக்கும் சுவாரஸ்யத்தை இன்னும்கூட காமெடி கலந்து சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாம்!