Published:Updated:

`அஜித் வீட்டில் வனத்துறை சோதனை நடத்தியது உண்மையா?' -மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

வனத்துறையினரின் சோதனை குறித்து வெளியான தகவல்களுக்கு நடிகர் அஜித்தின் மேலாளர் விளக்கம் அளித்திருக்கிறார்.

அஜித்
அஜித்

நடிகர் அஜித் குமாரின் மேனேஜரும் சினிமா மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா, ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளோடு மூன்று அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்றையும் வளர்க்கிறார். அதற்கு தினமும் வெள்ளை எலிகளை உணவாக அளிக்கிறார் என்ற செய்தி அண்மையில் வெளியானது. இதையடுத்து, அவர் வீட்டிலும் நடிகர் அஜித் வீட்டிலும் வனத்துறையினர் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுரேஷ் சந்திரா
சுரேஷ் சந்திரா

இது தொடர்பாக, சுரேஷ் சந்திராவை தொடர்புகொண்டு பேசினோம். ``தனிப்பட்ட விரோதம் காரணமாக இப்படி ஒரு செய்தி வெளியானது என நினைக்கிறேன். நான் எந்த மலைப்பாம்பையும் வீட்டில் வளர்க்கவில்லை. என் வீட்டிலோ நடிகர் அஜித் வீட்டிலோ வனத்துறையினரின் சோதனை நடக்கவில்லை. அனைத்துமே தவறான தகவல். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும்விதமாக இப்படியொரு வதந்தி பரவுகிறது" என்றார்.

இதற்கிடையே, `நடிகர் அஜித் வீட்டில் சோதனை என வெளியான செய்தி தவறானது' என்று சென்னை வனத்துறை தலைமையிட வனச்சரகர் மோகன் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் `வலிமை' படத்துக்காக ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.