Published:Updated:

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு விமர்சனம்: எடுத்துக் கொண்ட கதை பேசப்படவேண்டியது, ஆனால் சொன்ன விதம்?

'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' அக்‌ஷரா ஹாசன்
News
'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' அக்‌ஷரா ஹாசன்

தமிழ் சினிமாவில் நாயகிகள் தோன்றிட தயங்கும் காட்சிகள் இதில் அக்‌ஷராவுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.

Published:Updated:

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு விமர்சனம்: எடுத்துக் கொண்ட கதை பேசப்படவேண்டியது, ஆனால் சொன்ன விதம்?

தமிழ் சினிமாவில் நாயகிகள் தோன்றிட தயங்கும் காட்சிகள் இதில் அக்‌ஷராவுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.

'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' அக்‌ஷரா ஹாசன்
News
'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' அக்‌ஷரா ஹாசன்
ஒரு பெண் தான் நினைத்த விஷயத்தை நினைத்த மாத்திரத்தில் செய்ய இந்தச் சமூகமும், அவளின் ஆழ்மனதும் சம்மதிக்கின்றனவா என்பதைச் சொல்கிறது 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. 80 நிமிடங்கள் கொண்ட இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது.
அக்‌ஷரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசன்

கர்னாடக சங்கீதத்தில் திளைத்து விளங்கும் ஆச்சாரமானதொரு குடும்பத்தில் வளர்கிறார் அக்‌ஷரா ஹாஸன். அக்‌ஷராவின் தாயாரான மால்குடி சுபாவுக்கோ அக்‌ஷராவின் பாட்டி உஷா உதுப் போலவே, அக்‌ஷராவையும் பிரபலமான பாடகியாக்கிவிட வேண்டும் என்பது பெருங்கனவு. அதற்கு எல்லா குட்டிக்கரணங்களையும் செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே அக்‌ஷராவின் பதின்பருவ ஆசைகளும் எட்டிப் பார்க்க அக்‌ஷரா அதைத் துணிந்து செய்கிறாரா அல்லது 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என முடங்கிவிடுகிறாரா என்பதை coming of age டிராமா பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜா ராமமூர்த்தி.

80 நிமிடப்படம் என்றாலும், படத்தின் கதை வரும் நேரம் என்பது அதைவிடவும் குறைவுதான். அக்‌ஷராவுக்கும், அக்‌ஷராவின் தோழியாக வரும் அஞ்சனா ஜெயப்பிரகாஷுக்கும் ('குயின்' வெப் சிரீஸ் புகழ்) படத்தில் நிறைய போல்டான காட்சிகள் இருக்கின்றன. அஞ்சனா பேசும் நிறைய வசனங்கள் செம்ம ஷார்ப். தமிழ் சினிமாவில் நாயகிகள் தோன்றிட தயங்கும் காட்சிகள் இதில் அக்‌ஷராவுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், துணிச்சலுடன் நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

அக்‌ஷராவும், உஷா உதுப்பு இறுதியில் பேசிக்கொள்ளும் காட்சி நல்லதொரு ஆரோக்கியமான உரையாடல். உஷா உதுப்பும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜார்ஜ் மரியம், ஜானகி சபேஷ், கலைராணி, சுரேஷ் மேனன் என இந்த நீண்ட குறும்படம் முழுக்கவே நிறைய பார்த்துப் பழகிய முகங்கள்.

அக்‌ஷரா ஹாசன், உஷா உதுப்
அக்‌ஷரா ஹாசன், உஷா உதுப்
சுஷாவின் பின்னணி இசையும், கீர்த்தனா முரளியின் படத்தொகுப்பும், ஸ்ரேயா தேவ் துபேயின் ஒளிப்பதிவும் இந்த சின்ன படத்தில் நம் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன.

ஒரு பெண் ஏன் எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களின் அனுமதியைப் பெற காத்திருக்க வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அவளை இந்தச் சமூகம் இப்படி ஒடுக்கி வைத்திருக்கும் போன்ற கேள்விகளைக் கேட்க நினைத்திருக்கிறார் ராஜா ராமமூர்த்தி. அதே போல், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு பெண் சில விஷயங்களுக்காக அடுத்தவர்களின் கையை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் என்பதையும் கேட்கிறது படம். ஆனால், சுவாரஸ்யமற்ற காட்சி அமைப்புகளாலும், வழக்கொழிந்த வசனங்களாலும், படம் பேச வரும் விஷயங்கள் நீர்த்துப் போய் விடுகின்றன.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

அக்‌ஷராவுக்கு பிரச்னையாய் இருக்கும் எல்லா விஷயங்களும், அஞ்சனாவுக்கு இயல்பாகக் கிடைக்கிற போது 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்னும் போலி வேலிக்குள் பெண்ணை முடக்கி வைப்பது குறிப்பிட்ட சில வீடுகளுக்கான பிரச்னையாக மட்டும் அல்லவா சுருங்கிவிடுகிறது. மால்குடி சுபாவின் ஒரே மாதிரியான நடிப்பும்; வீட்டுக்கு வெளியே நிர்பந்தக் காதலுக்குக் காத்திருக்கும் நபரின் மேனரிஸமும் படு எரிச்சல். பிக்ஸார் சினிமாக்களைப் போல இதையொரு அனிமேசன் சினிமாவாக எடுத்திருந்தால்கூட இதைவிடவும் சிறப்பாக இருந்திருக்கும் என தோன்றுகிறது.

எடுத்துக்கொண்ட கதைக்கு இன்னும் தேர்ந்த நடிப்புடன், அழுத்தமான காட்சி அமைப்புகளைக் எடுத்திருந்தால், 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' இன்னும் வீரியமாய் பேசப்பட்டிருக்கும்.