Published:Updated:

2ஜி ஸ்பெக்ட்ரம்: 7-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

Vikatan

புதுடெல்லி, நவ.22,2010: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தால், தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முற்றிலும் முடக்கப்பட்டது.

இந்த முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு (JPC) விசாரணை நடத்த வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் தீவிரமாக உள்ளனர்.

மக்களவை இன்று கூடியவுடன், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை கோரி பிஜேபி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவையில் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நிலவியதால் மக்களவையை பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பின்னர், அவை மீண்டும் கூடியதும், இதே விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட, மக்களவை இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்னைகளின் எதிரொலியாக, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்கட்சிகள் உறுதி..

2ஜி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அறிவிக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என்று எதிர்கட்சிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.

எடியூரப்பா விவகாரம்...

நாடாளுமன்றத்தில் ஸ்பெட்கரம் பிரச்னைக்கு மாற்றாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதான நில ஊழல் விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் கையிலெடுத்தனர்.

இந்த விவகாரத்தில், எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
 

Vikatan