Published:Updated:

அரசு விழாவில் குத்தாட்டம் போட ரூ. 1.40 கோடி பெற்ற கரீனா கபூர்!

Vikatan
அரசு விழாவில் குத்தாட்டம் போட ரூ. 1.40 கோடி பெற்ற கரீனா கபூர்!
அரசு விழாவில் குத்தாட்டம் போட ரூ. 1.40 கோடி பெற்ற கரீனா கபூர்!

வழக்கமாக ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில்தான் ஐந்து  நிமிடம் அல்லது பத்து நிமிட ஆட்டத்துக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்து நடிகைகளை  அழைத்து வருவார்கள்.

இப்படி போடும் 'ஸ்பெஷல்' குத்தாட்டத்துக்கு கவர்ச்சி நடிகைகள்தான்  என்றில்லை...முன்னணி ஹீரோயின்களே வந்து, குறைச்சலான ஆடையுடன் ஒரே ஒரு  குத்தா(கெட்டா)ட்டத்தை போட்டுவிட்டு, கோடிகளை சுருட்டிக்கொண்டு  போய்விடுவார்கள்.

அரசு விழாவில் குத்தாட்டம் போட ரூ. 1.40 கோடி பெற்ற கரீனா கபூர்!

சில நிமிட ஆட்டத்துக்கு கோடியில் பணமா...? என சிலர்  அங்கலாய்த்தாலும்,"இருக்கிறவன் கொடுக்கிறான்...கொடுக்கிறவன்   கொண்டாடுகிறான்..!" என்ற ரீதியில் அந்த பரபரப்பு அப்போது அடங்கிப்போகும்.

ஆனால் இத்தகைய குத்தாட்ட கொண்டாட்டத்தை அரசு செலவில் நடத்தி,செமத்தியாக  வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளது சட்டீஸ்கர் அரசு!

சட்டீஸ்கர் மாநிலம் உருவான ஆண்டு விழா கொண்டாட்டம் அண்மையில் சட்டீஸ்கர்  அரசு சார்பில் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்,ஒரு வார காலம் நடைபெற்ற இந்த  விழாவுக்குத்தான் ஏறக்குறைய சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து, பிரபல பாலிவுட்  நடிகை கரீனா கபூரை அழைத்து வந்து ஆட வைத்து ரசித்திருக்கிறார்கள் சட்டீஸ்கர்  அமைச்சர்களும்,அதிகாரிகளும்.

இந்த விழாவுக்கு மட்டும் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக  செலவானதாக செய்தி  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சட்டீஸ்கர் சட்டசபையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்த அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரிஜ்மோகன்,  இந்த விழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு கரீனா கபூர் உள்ளிட்ட 245 கலைஞர்கள்  கலந்துகொண்டதாகவும், இதற்காக ரூ. 5 கோடியே 21 லட்சத்து 22,500 ரூபாய்  செலவிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த 245 கலைஞர்களில் 42 பேர் வெளிமாநிலத்திலிருந்து அழைத்து  வரப்பட்டதாகவும்,இதில் கரீனா கபூருக்குத்தான் மிக அதிகமாக ரூ.1 கோடியே 40  லட்சத்து 71,000 அன்பளிப்பாக வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கரீனா கபூரின் நடன நிகழ்ச்சி, நயா ராய்ப்பூர் நகரில், நவம்பர் 1 ஆம் தேதியன்று  நடைபெற்றது.இதில் கரீனா ஆடியது வெறும் எட்டு நிமிடங்கள் மட்டுமே.

கரீனாவுக்கு அடுத்தபடியாக  மேலும் 5 நட்சத்திரங்களுக்கும் அதிக தொகை  கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர நடன கலைஞர்களுக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவு 54  லட்சத்து 62,461 ரூபாயும், தங்குமிடம் மற்றும் உணவுக்காக 11 லடசத்து 67,956  ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

நல்லாத்தான் சொல்றாங்கய்யா...டீடெய்லு...!



 



 

Vikatan