Published:Updated:

திருவண்ணாமலையில் 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்!

விகடன் விமர்சனக்குழு
திருவண்ணாமலையில் 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்!
திருவண்ணாமலையில் 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்!
திருவண்ணாமலையில் 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில்  நேற்று மாலை ஏற்றப்பட்ட மகா தீபத்தை 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 23ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 24ம் தேதி மகா தேரோட்டமும் நடந்தது.

தீபத்திருவிழாவின் உச்சகட்டமாக 10ம் நாளான நேற்று, மகா தீபப்பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன் ஒருவனே பலவாக காட்சியளிக்கிறான் என்ற ‘ஏகன் அனேகன் தத்துவத்தை விளக்கும் வகையில் இந்த பரணி தீப விழா நடைபெற்றது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து, மாலை மகா தீபப்பெருவிழா நடந்தது. இதையொட்டி, பிற்பகல் 2.30 மணியில் இருந்து பே கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

##~~##
முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் ஆகியோர், அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்களை சோதித்து அனுப்பினர்.
மாலை 5.30 மணியளவில், அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.
பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய சிவபெருமான், ‘அர்த்தநாரீஸ்வரர்‘ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவமாடியபடி மாலை 5.57 மணிக்கு கோயிலுக்குள் இருந்து அங்கு வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை, மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் அர்த்தநாரீஸ்வர் காட்சியளிப்பது வழக்கம். அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டி, கோயில் தங்க கொடிமரம் அருகே அகண்டத்தில் தீபம் ஏற்றினர்.
இதையடுத்து சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.அப்போது அண்ணாமலையாரை போற்றும் பாமாலைகளும், சங்கொலியும் முழங்கின. மலை மீது ஜோதி வடிவாக அண்ணாமலையார் தோன்றியதைக் கண்டு, திரண்டிருந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர்.
காணும் திசையெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.இதையடுத்து வீடுகள், கடைகள், வர்த்த நிறுவனங்களில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதனால் திருவண்னாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது.கோயில் முழுவதும் தீப ஒளியால் பிரகாசித்தது.