Published:Updated:

ஆந்திர முதல்வர் ரோசய்யா ராஜினாமா அறிவிப்பு

Vikatan

ஹைதராபாத், நவ.24,2010

ஆந்திர முதல்வர் ரோசய்யா ராஜினாமா அறிவிப்பு

ஆந்திர முதல்வர் ரோசய்யா தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார்.

ஹைதரபாத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது பதவி விலகல் குறித்த முடிவை அறிவித்த அவர், தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் மேலிடத்திடமும் தாம் பேசியதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மேலிடத்திடம் இருந்து புதன்கிழமை அனுமதி கிடைத்த நிலையில், தற்போது ராஜினாமா அறிவிப்பை ரோசய்யா வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி, ஆந்திர ஆளுனர் இ.எஸ்.எல்.நரசிம்மனிடம் இன்று மாலை அளிப்பார்.

ஆந்திராவின் புதிய முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக, காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

பின்னணி...

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் குறித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜகன்மோகன் ரெட்டியின் தொலைக்காட்சி ஆட்சேபகரமாக விமர்சித்தது.

இதுபற்றி மேலிடத் தலைவர்களுடன் டெல்லியில் புதன்கிழமை ரோசய்யா விவாதித்தார். இந்த தொலைக்காட்சி தெரிவித்த கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியதாக தெரிகிறது.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவரான ஏ.கே.அந்தோனி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், எம்.பி.யுமான ஜகன்மோகன் ரெட்டியின் தொலைக்காட்சியின் விமர்சன விவகாரம், ஆந்திர காங்கிரஸ்சில் அண்மைக்காலமாக நிலவி வரும் கோஷ்டி மோதல்கள் போன்றவற்றின் பின்னணியில் ரோசய்யா தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

Vikatan