பாலிவுட் பிரபலமான ஆலியா பட், ஓடிடி தளத்தில் ஒரு சில தினங்களில் வெளிவர இருக்கும் ’டார்லிங்ஸ்’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, ’பாலிவுட் பிரபலங்கள் பலர் உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் குறித்து பேச மறுக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் நடைபெற்ற 'Black Lives Matters' போன்ற சர்வதேச பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள், ஏன்?’ என சர்வதேச ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆலியா பட் பதிலளித்தார்.

’’ 'Black Lives Matters' போன்றவற்றை மிகவும் சென்சிட்டிவ்வான சம்பவங்களாக நான் கருதுகிறேன். நடிகர்கள் கடந்த காலங்களில் கூறிய கருத்துகள், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, புகாரளிக்கும் அளவுக்கு பல சம்பவங்கள் தவறான வகையில் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளன. நபருக்கு நபர் கருத்துகள் மாறுபடும். அவரவர் கருத்துகளை அவரவர் வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களுக்காக நம் கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. இந்த உலகத்தில் யாரோ ஒருவரின் கருத்து குறைவதில் பிரச்னை இல்லை என்று நினைக்கிறேன். ஒருவரின் செயல்பாடுகள் மூலம் அவர்களது அரசியல் மற்றும் மதிப்புகள் வெளிப்படும். ஒரு விசயத்தில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் வார்த்தைகளில், எந்த பொறுப்பும் இல்லை. இது மாதிரியான சந்தர்ப்பங்கள் எனக்குப் பல வருடங்களாக நடந்திருக்கிறது’’ என்று ஆலியா பட் பதிலளித்துள்ளார்.
வரும் 5-ம் தேதி வெளியாக இருக்கும் `டார்லிங்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லரில், கணவரை சட்டியால் அடிப்பது, முகத்தில் தண்ணீரை வீசி எறிவது, தண்ணீர் நிரம்பிய தொட்டிக்குள் கணவரின் முகத்தை திணிப்பது, சரமாரியாக கணவரை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தனது திருமணத்திற்கு பிறகு, கணவர் செய்த கொடுமைகளுக்கு பழி தீர்க்கும் விதமாக, அவரைக் கொல்லாமல் கொடுமைப்படுத்த திட்டமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் அகி வருவதோடு நெட்டிசன்களின் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. ’ஆலியா பட் நடித்துள்ள காட்சிகள், ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை நியாயப்படுத்தும் விதமாக உள்ளன. குடும்பங்களில் பாலின வன்முறை என்பது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அவற்றை நியாயமான முறையில் காட்சிப்படுத்த வேண்டும்’ என #BoycottAliaBhatt என்ற ஹேஷ்டேகில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, ஆலியா பட், கால் கடோட் நடித்த ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். மேலும், அயன் முகர்ஜியின் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று, ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த ‘ஷிவா’, மற்றும் ரன்வீர் சிங், கரண் ஜோஹருடன் நடிக்கும் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.