'நேரம்', 'பிரேமம்' திரைப்படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'GOLD'. இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், ஜோஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.
இத்திரைப்டம் மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் கடந்த டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இத்திரைப்படம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த 'நேரம்', 'பிரேமம்' படங்களின் இரண்டாம் பாகம் என்றும் படம் மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் சமூகவலைதளங்களிலும், சில சினிமா விமர்சகர்களிடையேயும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருகின்றன.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், " 'கோல்டு' திரைப்படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை அனைவரும் படிக்க வேண்டும். நிறைய பொறாமைகளையும், அவமதிப்பு மற்றும் கேலிகளை என் மீதும் என் திரைப்படத்தின் மீதும் கூறப்படுகிறது. இதையெல்லாம் கேட்கும் போது, இவ்வாறு நெகட்டிவான விமர்சனங்களைக் கூறுபவர்களுக்கு நான் ஸ்பெஷலாக நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
டீ நன்றாக இல்லை என்று உடனே சொல்லிவிடலாம். அது நல்ல ஸ்ட்ராங்கா இல்லை, தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதா இல்லையா?, பால் அதிகமாக இருக்கிறதா இல்லையா? பால் புளித்துப் போய்விட்டதா இல்லையா? சர்க்கரை அதிகமாக இருக்கிறதா இல்லையா? என்ற விமர்சனங்கள் எல்லாம், நல்ல டீ போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், வெறுப்புடன் மோசமான தேநீர், அருவருப்பான தேநீர் என்று கூறிவதால், யாருக்கும் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.
இப்படத்தை நான் 'நேரம் 2' என்றோ, 'பிரேமம் 2' என்றோ சொல்லவில்லை. தெளிவாக இத்திரைப்படத்திற்கு 'Gold' என்று பெயரிட்டுள்ளேன். அதுமட்டுமின்றி உங்களைக் கோபப்படுத்தவோ, தொந்தரவு செய்யவோ அல்லது உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கவோ இத்திரைப்படத்தை நானும், என் குழுவினரும் எடுக்கவில்லை. குறிப்பாக, .ஒருவேளை இதற்குமுன் இதுபோன்ற படங்களை நான் எடுத்திருந்தால், நீங்கள் இவ்வாறு கூறுவது சரியாக இருக்கும். ஆனால், Gold போன்ற திரைப்படத்தை நான் முதன்முறையாக இயக்கியுள்ளேன். அதனால் நீங்கள் இதை இப்படி எடுத்திருக்கலாம், அப்படி எடுத்திருக்கலாம் என்று சொல்லாதீர்கள்" என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.