இறந்துவிட்ட தன் தாயைச் சந்திக்க இரண்டாம் வாய்ப்பு கிடைக்கப்பெறும் ஒருவன் அந்த முயற்சியில் வெற்றி பெற்றானா இல்லையா என்பதே கணம் படத்தின் கதை.
பாடகராகும் முயற்சியில் தனக்கிருக்கும் மனத்தடை காரணமாக சோபிக்கத் தவறுகிறார் ஆதி. சிறு வயதில் தன்னைவிட்டுப் பிரிந்த தாயையும், அதன்வழி அவன் தொலைத்த நம்பிக்கையையும் அவனால் மீண்டும் மீட்டெடுக்கவே முடியவில்லை. வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் நபராக இருக்கும் பாண்டிக்கோ தான் ஒழுங்காகப் படிக்கவில்லை என்னும் குறை ஆறா வடுவாக நெஞ்சினில் இருக்கிறது. கதிருக்கோ திருமணம் நடக்கவில்லை என்பதே பெரும் பிரச்னையாக இருக்கிறது. சிறுவயதில் அவன் புறந்தள்ளிய ஒரு பெண், இப்போது சர்வ லட்சணமும் பொருந்தியவளாக அவனுக்குத் தெரிய, மனம் வருந்தத் தொடங்குகிறான்.

நண்பர்களாகிய இவர்கள் மூவர் கைக்கும் விஞ்ஞானி ரங்கி குட்டப்பால் புண்ணியத்தில் டைம் மெஷின் ஒன்று வந்து சேர்கிறது. அவரின் நிபந்தனைகளுடன் டைம் மெஷினில் தங்கள் கடந்த காலத்தை மாற்றியமைக்க மூவரும் புறப்படுகிறார்கள். கடந்த காலத்தை அவர்களால் மாற்ற முடிந்ததா, இவர்களின் கடந்த கால வெர்ஷன்கள் இவர்களுக்கு வைக்கக் காத்திருக்கும் ஆப்பு என்ன என்பதை எமோசனலாகவும், காமெடியாகவும் அணுகுகிறது தமிழில் வெளியாகியிருக்கும் 'கணம்'. தெலுங்குப் பதிப்பில் வேறு சில துணை நடிகர்களுடன் 'Oke Oka Jeevitham' என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
ஆதியாக சர்வானந்த். 'எங்கேயும் எப்போதும்' படத்துக்குப் பிறகு, மீண்டும் சர்வானந்த்துக்கு நல்லதொரு கதாபாத்திரம். எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தாலும், நண்பர்களுடனான ஜாலி கேலி அரட்டைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கடந்த காலத்தில் மட்டுமே வாழும் நபராக அமலா. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி. படத்தின் ஜீவன் அவர்தான். தாயாக அமலாவின் முகத்தில் அப்படியொரு பாசிட்டிவ் எனெர்ஜி. அழுகைக் காட்சிகளிலும், தன் மகனைக் காணாது தேடும் காட்சிகளிலும் நம்மையும் வருத்தப்பட வைக்கிறார்.
சர்வானந்த்தின் நண்பர்கள் பாண்டி மற்றும் கதிராக தமிழில் ரமேஷ் திலக்கும், சதீஷும் நடித்திருக்கிறார்கள். சதீஷின் காமெடி நிஜமாகவே இந்தப் படத்தில் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இருவரும் இவர்களின் சிறு வயது கதாபாத்திரங்களுடன் முரண்படும் காட்சிகள் ஜாலி கேலி. இவர்களைக் கடந்து படத்தில் ஈர்க்கும் மற்றுமொரு கதாபாத்திரம், சிறு வயது ஆதியாக வரும் மாஸ்டர் ஜெய். எமோஷனல் காட்சிகளாகட்டும், தயங்கிக்கொண்டே பேசுவதாகட்டும், அந்த மன ரீதியிலான பிரச்னை இருக்கக்கூடிய ஒரு நபரை அவ்வளவு எளிதாக, இயல்பாகப் பிரதிபலிக்கிறார். சிறுவர்கள் நித்யா, ஹிதேஷும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

டைம் டிராவல் கதை என்றவுடன் அதிக அளவில் சயின்ஸ் பாடம் எடுக்காமல், 'Paradox' போன்ற சிக்கலான கோட்பாடுகளுக்குள் எல்லாம் போகாமல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை இறுதி வரையில் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக். எமோஷனல் படத்தில் காமெடியை சரியான விகிதத்தில் கலந்ததில் இருக்கிறது அவருடைய வெற்றி. இரண்டு கால கட்டங்களைக் காட்ட சில பழைய காட்சிகள், போஸ்டர்கள் என சாமர்த்தியமாக கதை சொன்னதோடு, சில நாஸ்டால்ஜியா விஷயங்களையும் கொண்டு வந்திருக்கிறார் கலை இயக்குநர் சதீஷ் குமார். இரண்டு டைம்லைன் என்றாலும் பெரிதாகக் குழப்பாமல் கத்தரித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங். ஜேக்ஸ் பிஜாயின் இசையில் 'அம்மா' பாடலும், பின்னணி இசையும் அருமை.
கடந்த கால பிழைகளைச் சரி செய்ய முடியுமா என்னும் கேள்விதான் படம் என்றானபின் எமோஷனல் காட்சிகளை இணைத்த அளவுக்கு, விஞ்ஞானி குறித்த சித்திரிப்புகளிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதற்குத் தேவையான நம்பகத்தன்மை கொஞ்சம் மிஸ்ஸிங். நாசர் ஏற்றிருக்கும் ரங்கி குட்டப்பால் கதாபாத்திரத்தின் தெளிவின்மைதான் படத்தின் குறை. அதேபோல் ஒரு கட்டத்தில் நாயகன் சர்வானந்தின் கதையோடு கனெக்ட்டான அளவிற்கு, சதீஷ் மற்றும் ரமேஷ் திலக்கின் கதையோடு ஒட்ட முடியவில்லை.

இரண்டாம் வாய்ப்பு என்பது நமக்கிருக்கும் அடுத்த `கணம்'தான் என்பதை ஆத்மார்த்தமாகச் சொன்ன வகையில், சயின்ஸ் பிக்சன் படம் என்றாலும், மனிதர்களின் ஆதி வேர் என்னவோ உணர்வுகள்தான் என்பதை நிறுவி அப்ளாஸ் அள்ளுகிறது இந்த `கணம்'.