வெற்றி விழாவில் கமலின் அதிரடிக்குக் காரணம் ஆங்கில நாவல் தான் - 28 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறக்கும் பிரதாப் போத்தன்

சனா
Tamil Cinema

ஷார்ப்பா... ஸ்வீட்டா...

இப்போ செய்திகளை
ஷார்ட்டா படிக்க...

பிரதாப் போத்தன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வெற்றி விழா'. கமல், பிரபு, குஷ்பூ, அமலா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் திரைப்படம் 1989-ம் ஆண்டு வெளியாகி 175 நாள்கள் வெற்றிகரமாக ஓடி படத்தின் பெயருக்கு ஏற்ப வெற்றி வாகை சூடியது.

படம் ரிலீஸாகி 25 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்று இந்தப் படம் டிஜிட்டல் வெர்ஷனில் ரீலிஸாகியிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியான இந்தப் படத்தின் பற்றி நினைவலைகளுக்காக இயக்குநர் பிரதாப் போத்தனைத் தொடர்புகொண்டோம்.

''இன்று இருக்கும் டிஜிட்டல் உலகில் இந்தப் படத்தைத் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை. எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்தப் படம் இன்று ரிலீஸாகி உள்ளது. இதுவே, மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம், பெருமையான விஷயமும்கூட. கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எந்தக் கதையும் கிடைக்கவில்லை. அப்போது ஓர் ஆங்கிலப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். இந்தப் படத்தின் கதையை அந்தப் புத்தகத்திலிருந்துதான் தழுவி எடுத்தேன். நல்லவேளை அப்போது யாரும் உரிமை கேட்டு வரவில்லை. புத்தகத்தில் நான் படித்த அந்த ஸ்டோரி எனக்குப் பிடித்திருந்தது. அதனால், இந்தக் கதையை இயக்க வேண்டும் என்று நினைத்தேன். படத்தில் பிரபு கேரக்டர் எல்லாம் நானாக ஸ்க்ரிப்ட் எழுதி சேர்த்ததுதான். 

இந்தப் படத்தில் நடிக்க கதை சொன்னவுடன் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் படத்துக்காக இளையராஜா இசையமைத்தது என் லக்குதான் என்று சொல்ல வேண்டும். படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் ஹிட் அடித்தது. இந்தப் படத்துக்காகதான் தமிழ்நாட்டில் பிளாட்டினம் டிஸ்க் வந்தது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்தான் படத்தைத் தயாரித்தது. கமல் தவிர, அவர்கள் புதுமுகத்தை எல்லாம் வைத்து படத்தைத் தயாரிக்கவே மாட்டார்கள். 

இந்தப் படத்தை எடுக்கும்போது எங்களுக்கு தெரியவில்லை. இந்தப் படம் வெள்ளி விழா தாண்டி ஓடும் என்று. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சலீம் நடித்திருப்பார். அவரைத் தமிழில் அறிமுகப்படுத்தியது நான்தான். 'தி மெட்ராஸ் பிளேயர்ஸ்' கம்பெனியின் நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். அப்போது இவரும் அந்த கம்பெனிக்காகச் சில நாடகங்களில் நடிப்பார். அப்போது சலீமின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். இவரை நாம் படம் இயக்கினால் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். 

அப்போதுதான் 'வெற்றி விழா' படத்தில் இவரை அறிமுகப்படுத்தினேன். ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் அவரை அறிமுகப்படுத்தியதுக்கு யாரும் எதுவும் சொல்லவில்லை. ரொம்ப என்ஜாய் பண்ணி எடுத்த படம் இது. இப்போது பிரமிப்பாக உள்ளது''. என நெகிழ்ந்தார் பிரதாப் போத்தன்.

SCROLL FOR NEXT