Emma Watson : Harry Potter தேவதை; 90's Kids-ன் ஆதர்சம்; உலக அமைதியின் தோழி!|Photo Story

பிரபாகரன் சண்முகநாதன் & ஆ.பி.அர்ஜுன்

90-களின் குழந்தைகளுக்கு ஹெர்மாயின் க்ரெஞ்சரும் ஹாக்வர்டஸ் உலகமும் பேவரைட். முன்நெற்றியில் முடி பரவ புத்திசாலித்தனமும் துறுதுறுவெனவும் இருக்கும் ஹெர்மாயின் கதாபாத்திரத்தில் நடித்த எம்மா வாட்சனுக்கு இன்று பிறந்தநாள்.

ஹாரிபாட்டர் 8 படங்களிலும் ஹெர்மாயின் கதாபாத்திரத்தின் உடன் எம்மாவும் வளர்ந்து வந்தார். 1990 பாரிஸில் பிறந்த எம்மாவின் பெற்றோர் இருவரும் வழக்கறிஞர்கள்.

ஹாரிபாட்டர் கதாபாத்திரம் போலவே நிஜத்திலும் எம்மா படிப்பில் டாப்பர். அவரது நாடக பயிற்சி ஆசிரியர் வழியாகவே எம்மாவுக்கு ஹாரிபாட்டர் வாய்ப்பு வருகிறது.

எட்டுக்கும் மேற்பட்ட ஆடிஷன் சுற்றுகளுக்கு பிறகுதான் எம்மா அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். ஹாரிபாட்டரின் கதையை எழுதிய ஜே.கே.ரௌலிங்குக்கு முதல் சுற்றில் இருந்தே எம்மாவைப் பிடித்துவிட்டது.

1999 ஹாரிபாட்டரின் முதல் பாகம் Harry Potter and the Philosopher's Stone வெளியாகிறது. காற்றில் பொருட்களை இலகுவாக்கி பறக்க செய்யும் Wingardium Leviosa மந்திரத்தை எம்மா வாட்சன் சொல்ல உண்மையில் பறந்தது 90'ஸ் கிட்ஸ் தான்.

ஹாரிபாட்டர் இரண்டாவது பாகத்தில் ஹெர்மாயின் கதாபாத்திரத்திற்கு போதிய இடம் தரப்படவில்லை என இயக்குனரை விமர்சித்தது எல்லாம் நடந்தது.

10 வயதிலேயே உலகப் புகழ் என்ற போதும் எம்மா வாட்சன் அதனை கையாண்ட விதம் பிரமிக்க வைக்கக்கூடியது. பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி பங்களாதேஷ் முதல் ஜாம்பியா வரை பயணம் செய்திருக்கிறார்.

2014-ல் ஐக்கிய நாடுகளின் சபையின் பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்படுகிறார். தன்னை பெண்ணியவாதியாக முன்னிறுத்திக் கொள்பவர் பெண்களுக்கு எதிராக நடைபெறுபவற்றை எதிர்த்து வரும் முதல் குரல் எம்மா உடையது.

பலருக்கு இவர் ஆதர்சமாக இருக்கிறார். இந்த தலைமுறையின் பெண்களிடம் எம்மாவின் தாக்கத்தை பார்க்க முடிவதாக சொல்கிறார்கள். அதற்கு 'எம்மா வாட்ஸன் விளைவு' எனவும் பெயர்.

எம்மா வாட்ஸன் சிறு வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். எம்மா தன்னுடைய தனிப்பட்ட வாழ்வு குறித்து வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை.

எத்தனை உயரம் போனாலும் அமைதியும் அறிவுக்கூர்மையும் எளிமையுமாக நட்புரீதியில் பழகுபவர் என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள் எம்மாவின் நெருங்கிய வட்டத்தினர்.

எம்மாவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. ஹாரிபாட்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் மட்டும் 10 டைரிகளுக்கு மேல் வருமாம். பேஷன் துறை மீது தனிப்பட்ட ஆர்வம். முன்னனி நிறுவனங்களின் முகமாகவும் இருக்கிறார்.

உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகை, இவரது படங்களின் வசூல் பில்லியன் கணக்கில் எகிறும். இத்தனைக்கு பிறகும் தன்னுடைய பெயரை உலகின் பயனுள்ள செயல்களுக்கு பயன்படுத்தும் எம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!