Jackie Chan: கட்டடத் தொழிலாளர் டு உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்; நம்பிக்கை நாயகனின் கதை!

பிரபாகரன் சண்முகநாதன்

உலகம் முழுவதும் ஜாக்கி சானுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் பறந்து பறந்து சண்டை போட்டாலும் நம்மை சிரிக்க வைக்கத் தவறுவதே இல்லை. ஜாக்கி சானின் 68-வது பிறந்தநாள் இன்று.

ஜாக்கி பிறந்தது ஹாங்காங்கில். சீன உள்நாட்டுப் போரால் அங்கிருந்து ஹாங்காக் வந்த அவரின் பெற்றோர்கள், கூலித் தொழிலாளர்கள். மருந்துவாங்கக்கூட சிரமப்பட்ட நாட்கள் உண்டாம்.

ஜாக்கி சிறுவயது போல துறுதுறுன்னு இருக்கிறதால அவரது பெற்றோர் Pao-pao என்று செல்லமாக கூப்பிடுவார்கள், அந்த வார்த்தைக்கு உருள்கிற குண்டு என அர்த்தம்.

பள்ளி முதல் பருவத்திலே ஜாக்கி ஃபெயில் ஆக அவரைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு கூட்டி வந்தனர் அவரது பெற்றோர். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லையெனினும் மார்ஷியல் கலை, நாடகங்களில் விருப்பம் உண்டு.

ஆஸ்திரேலியா நாட்டுக்கு சமையல் பணிக்கு அப்பா மாற்றலாகவே ஜாக்கி சான் அங்கு செல்ல நேர்கிறது. நாடகப் பள்ளியில் படிக்கிறார். மார்ஷியல் கலைகளை முறையாகக் கற்றுக்கொள்கிறார். படிப்பு முடிந்தபிறகு கட்டட தொழிலாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Seven little Fortunes என்கிற சீனாவைச் சேர்ந்த நாடக அகாதமியில் பங்கேற்கிறார். அங்குதான் Sammo Hung, Yuen Biao என்கிற நண்பர்கள் கிடைக்கிறார்கள், பின்னர் இவர்கள் மூவரும் 'மூன்று டிராகன்கள்' என்று அழைக்கப்பட்டனர்.

சில படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் வழியாகத் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடங்கியவர் புரூஸ் லீ உடன் ஸ்டண்ட் மேனாகப் பணியாற்றினார்.

கழை கூத்து என தமிழில் சொல்லப்படுகிற acrobatics வித்தையில் உடலை காற்றுபோல வளைக்கக்கூடிய பொறுமையும் நிதானமும் வேகமும் வேண்டும். இவையெல்லாம் ஜாக்கியிடம் உண்டு.

கதாநாயகனாக நடித்த ஒன்றிரண்டு படங்கள் சரியாகப் போகவில்லை எனினும் ஜாக்கிக்கு தான் எந்த வழியில் போக வேண்டும் என்கிற ஐடியா கிடைக்க உதவியது. Snake in the Eagle's Shadow படம் ஜாக்கி யாரென ரசிகர்களுக்கு உணர்த்தியது.

குங்ஃபூ கலையோடு நகைச்சுவையும் சேர Drunken Master படம் பயங்கர ஹிட். கிழக்கு ஆசியா முழுவதும் ஜாக்கி பெயர் உச்சரிக்கப்பட ஹாலிவுட் கதவுகள் திறக்க காலம் எடுத்தது.

ஹாலிவுட்டில் வில்லன் ரோல் ஆரம்பத்தில் வந்தாலும் ஜாக்கி தெளிவாக இருந்தார் அவற்றில் நடிக்கக் கூடாதென்று. Rumble in the Bronx படம் உலகளவில் ஹிட்டானது. Rush Hour ஹாலிவுட்டில் அவருக்கு நிரந்தர இடத்தை அளித்தது.

குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஜாக்கி சான் என்கிற கலைஞரைப் பிடிக்காத குழந்தைகள் கடந்த இரண்டு தலைமுறைகளில் இல்லையென்று சொல்லிவிடலாம்.

மனித நேயம் கொண்டவர், ஏராளமான உதவிகளைச் செய்து வருபவர், பிரபலமான பிறகும் வானத்தில் இருந்து குதித்து கால்களை உடைத்துக் கொள்பவர் இப்படி பல பரிணாமங்கள் கொண்ட ஜாக்கிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!