Oscar Awards: `RRR டு இரவின் நிழல்' - இந்தியா சார்பில் பரிசீலிக்கப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

நந்தினி.ரா

உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அந்தந்த அரசுகளால் தேர்வு செய்யப்பட்டு போட்டிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியா சார்பிலும், 95வது ஆஸ்கர் விருதின் நுழைவுக்கு மொத்தம் 13 படங்கள் இந்தியத் திரைப்பட சங்கத்தின் தேர்வுக் குழுவினர் மூலம் பரிசீலிக்கப்பட்டன.

அப்படி இந்தியா சார்பில் இறுதியாக பரிசீலிக்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ!

இந்தியில் 'பதாய் தோ', 'ராக்கெட்ரி', 'ஜூண்ட்', 'பிரம்மாஸ்திரம்', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'அநேக்' ஆகிய 6 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

அசாமில் 'செம்கோர்' என்ற படம் இறுதி பரிசீலனைப் பட்டியலில் இருந்தது.

தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படமான 'இரவின் நிழல்' படமும் பரிசீலனையில் இருந்தது.

குஜராத்தியில் செலோ ஷோ (Chhello Show). ஆங்கிலத்தில் இதன் பெயர் 'The Last Film Show'.

இயக்குநர் ராஜமௌலியின் 'RRR' மற்றும் 'ஸ்தலம்' எனத் தெலுங்கில் இரண்டு படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

மலையாளத்தில் 'அரியுப்பு' என்ற படம், பெங்காலியில் 'அபராஜிதோ' என்ற படம், என மொத்தம் 13 படங்கள் ஆஸ்கர் விருதின் நுழைவுக்கு இந்தியா சார்பில் பரிசீலிக்கப்பட்டன. கடைசியாக சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியத் திரைப்பட சங்கத்தின் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (Last Film Show) படத்தை பான் நளின் இயக்கியுள்ளார். 2021-ல் டிரிபெகா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், அதன் பிறகு பல்வேறு விருதுகளில் கலந்துகொண்டது.

படச்சுருள்களில் திரையிடப்பட்ட சினிமா பற்றியும் அதைக் கனவாகக் கொண்ட ஒரு சிறுவனின் வாழ்க்கைப் பற்றியும் பேசும் இப்படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி, இந்தியத் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.