மு.பூபாலன்
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துத் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வருபவர்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டத்தை முடித்தவருக்கு படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம்.
பின்னர், சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியவர், 2010-ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட 'விண்னைத் தாண்டி வருவாயா' படத்தில் கடைசி காட்சிகளில் தோன்றி கவனத்தை ஈர்த்தார்.
அதேசமயம் 'விண்னைத் தாண்டி வருவாயா' தெலுங்கு வெர்ஷனான 'ஏமாயா சேஸாவே' திரைப்படம் மூலம் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யா-விற்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதே வருடம் தமிழில் 'மாஸ்கோவின் காவிரி' எனும் திரைப்படம் மூலம் ராகுல் ரவீந்திரனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார் சமந்தா.
அதைத்தொடர்ந்து 'பாணா காத்தாடி', 'நீ தானே என் பொன்வசந்தம்', 'நான் ஈ', 'கத்தி' , '24', 'அஞ்சான்', 'தெறி', 'சீதம்மா வாகிட்லோ செரி மல்லே செட்டு', ' டோகுடூ', 'அட்டரேன்டிக்கி டாரேதி', 'சூப்பர் டீலக்ஸ்' என தமிழ் மற்றும் தெலுங்கில் வரிசையாகப் பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.
மசாலா படங்கள் மற்றும் ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என இவரின் படத் தேர்வுகள் சரி விகிதமாக இருந்ததால் பேன்-இந்திய நட்சத்திரமாக மிளிர ஆரம்பித்தார்.
தமிழில் விஜய்யுடன் மட்டும் 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' என மூன்று திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.
நாக சைத்தன்யா, சமந்தா இருவரும் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017-ஆண்டு அக்டோப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அக்டோபர் -2, 2021-ல் தங்கள் பிரிவை அறிவித்தனர்.
'விண்னைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனில் த்ரிஷாவின் காதப்பாத்திரத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு தமிழில் த்ரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஜானுவாக நடித்தார்.
இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான 'ஊ சொல்றியா' பாடல் இவரை உலகளவில் டிரெண்டாக்கியது. இதன் மூலம் மீண்டும் இந்திய சினிமா மார்க்கெட்டின் பிஸியான நடிகையாக மாறினார்.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயந்தாரவுடன் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் 'யசோதா', 'சகுந்தலம்' படங்களில் நடித்தார்.
தனது சமகால உச்ச நட்சத்திரங்களான த்ரிஷா, நயன்தாரா இருவருடனும் எந்தவித ஈகோவுமில்லாமல் நடித்து வருபவர் சமந்தா.
நடிப்பு தவிர சில சமூக நலன் சார்ந்த பணிகளையும் செய்து வருகிறார் சமந்தா. குறிப்பாக, அதிகம் வளர்ச்சி இல்லாத பகுதிகளில் இருக்கும் பெண்களிற்காக ஒரு வளர்ச்சி மன்றத்தை நடத்தி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் (தசை அலர்ஜி) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெற்றி, தோல்வி, விவாகரத்து, மயோசிடிஸ் பாதிப்பு என பல சோதனைகள் வந்தாலும் எதையும் தனது சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு வெற்றி நடைபோட்டு வருபவர் சமந்தா. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.