அவள் விருதுகள்: `ஆன்மிக மேடையில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது கடினம்' - தேசமங்கையர்க்கரசி!

இ.நிவேதா, ஆ.சாந்தி கணேஷ், பா.காளிமுத்து & வி.சதிஷ்குமார்

அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணைவேந்தரான கீதாலட்சுமிக்கு ‘பசுமைப் பெண்’ விருது வழங்கினார், குன்றக்குடி அடிகளார். 

கீதாலட்சுமி - குன்றக்குடி அடிகளார்

விருதைப் பெற்றுக் கொண்ட கீதாலட்சுமி, ``விவசாயிகளை தொழிலதிபர்களாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு இயற்கை விவசாயத்துடன் நவீன தொ ழில்நட்பமும் கைகோக்க வேண்டும்’’ என்றார்.

கீதாலட்சுமி

`லிட்டில் சாம்பியன்’ விருது பெற மேடையேறினார் பூஜிதா. அவருக்கு விருது வழங்க மேடையேறிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி, ``ஆன்மிக மேடையில் பெண்களுக்கு இடம் கிடைப்பது மிக மிகக் கடினம். அதைவிடக் கடினம் அங்கீகாரம் கிடைப்பது. 

பூஜிதா - தேசமங்கையர்க்கரசி

என்னுடைய இளவயதில் என்னை இந்தச் சமூகம் எப்படிக் கொண்டாட வேண்டுமென்று நினைத்தேனோ, அது இன்று பூஜிதாவுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி’’ என்றார். 

பூஜிதா

நாடோடி சமூகத்திலிருந்து அரசுப் பணிக்குச் சென்ற முதல் நபர் இந்திரா காந்திக்கும், இரண்டாவது நபர் சுனிதாவுக்கும் ‘சூப்பர் வுமன்’ விருது வழங்குவதற்காக மேடையேறினார் நடிகர் விஜய் சேதுபதி.

இந்திரா காந்தி - சுனிதா - விஜய் சேதுபதி.

`எனக்கு 7 வயசா இருக்கிறப்போ 47 வயசு ஆளுக்கு என்னைக் கல்யாணம் செய்யப் பார்த்தாங்க. படிப்பு கத்துக் கொடுத்த வாத்தியார் கண்ணுல எங்க  ஆளுங்க மொளகாத்தூளைப் போட்டுட்டாங்க. இதையெல்லாம் தாண்டித்தான் படிச்சு, வேலைக்குப் போனோம்’’ என்றார் இந்திரா காந்தி. 

இந்திரா காந்தி

அடுத்து பேசிய சுனிதா, ‘`எங்க சமுதாயத்துல 10 லட்சம் பேர் இருக்காங்க. அதுல ரெண்டு பேரு தான் அரசு வேலையில இருக்கோம். அரசாங்கம் தான் வேலைவாய்ப்புல எங்களுக்கு உதவி செய்யணும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.

சுனிதா

விஜய் சேதுபதி பேசுகையில், ``படிப்போட அருமை இது தாங்க. ஒருத்தர் வனத்துறையில கண்காணிப்பாளர். இன்னொருத்தர் இன்ஜினீயர். சுனிதா கேட்டமாதிரி, அவங்க மக்கள்ல படிச்சவங்களுக்கு வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யணும். அரசாங்கம்தான் சட்டம் போட்டு சாதிய பாகுபாட்டை ஒடுக்க வேண்டும்’’ என்றார்.

விஜய் சேதுபதி

`பெண்ணென்று கொட்டு முரசே’ என்ற முழக்கத்துடன், சாதனைப் பெண்களின் சங்கமம் நிறைவோடும், நினைவுகளோடும் இனிதே முடிவுற்றது.

அவள் விருது