`பிரம்மாஸ்திரா முதல் விக்ரம் வரை!' 2022-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்!

நந்தினி.ரா

2022 ஆம் ஆண்டு  கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின்  பட்டியலை கூகுள்  நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் பல மொழிப் படங்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழில் ஒரு படம் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின்  பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கும் படம் பிரம்மாஸ்திரா. அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்திருந்தனர்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் படம் கேஜிஎஃப் 2 .  யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

3 விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். 90 களுக்கு  முன் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சர்சைக்குள்ளானது.

அடுத்த இடத்தில் இருக்கும் படம், RRR.  ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரன், ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வெளியானது இத்திரைப்படம்.

இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கும் படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

புஷ்பா, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இந்த படம் கூகுளில் அதிக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விக்ரம் படம் இந்த ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியானாலும் கூகுளில் அதிக தேடிய திரைப்படங்களில் இடம்பிடித்த ஒரு தமிழ் திரைப்படம் விக்ரம் தான்.

லால் சிங் தத்தா திரைப்படமும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அமீர்கான் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப்  பெற்றது.

மலையாளத்தில் மோகன் லால், தமிழில் கமல் ஹாசன் (பாபநாசம்), இந்தியில் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்த த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தான் த்ரிஷ்யம் 2. இந்த படம் கூகுள் தேடல் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட  படங்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ள படம்  Thor: Love and Thunder. மார்வெல் வரிசையில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது.