`அக்குதே அக்குதே' தொடங்கி `யாரது' வரை; விஜய் - வித்யாசாகர் காம்போவின் அசத்தலான ப்ளே லிஸ்ட் இதோ!

மு.பூபாலன்

இன்று தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக பரிணமிக்கத் தொடங்கிய காலக்கட்டம் அது. அப்போது விஜய் காட்டிய மாஸான ஹீரோயிஸத்துக்கு, இணையாக இசையமைத்ததில் வித்யாசாகருக்கு ஒரு பெரிய பங்குண்டு.

விஜய்யின் எவர் கிரீன் பாடல்கள் பட்டியலைத் திருப்பிப் பார்த்தால் அதில் வித்யாசாகர் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அப்படி விஜய்- வித்யாசாகர் காம்போவில் வெளிவந்த எவர் கிரீன் படங்களின் பட்டியல் இதோ.

கோயமுத்தூர் மாப்பிளை: விஜய்- வித்யாசாகர் காம்போ இங்கிருந்துதான் தொடங்கியது என்று சொல்லலாம். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அன்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். குறிப்பாக 'கோயமுத்தூர் மாப்பிளைக்கு' பாடல் விஜயின் நடனத்திற்கு வலுசேர்த்த பாடலாகும்.

நிலாவே வா... 1998-ல் வெளியான இப்படத்தின் எல்லா பாடல்களும் வைரமுத்து வரிகளால் வித்யாசாகர் இசையில் உருவானவை. இப்படத்தில் 'நீ காற்று...நான் மரம்' என்று எவர் கிரீன் மெலடி, அதற்கு நேர் மாறாக 'அக்குதே அக்குதே' என்று பெப்பியான பாடல் என பல வெரைட்டியில் கலக்கியிருப்பார் வித்யாசாகர்.

கில்லி: இப்படத்தின் வெற்றிக்குக் காரணம் தரணியின் திரைக்கதை மற்றும் விஜயின் நடிப்பு என்றால் மற்றோரு முக்கியக் காரணம் வித்தியாசாகரின் பின்னணி இசையும் பாடல்களும். காதல்... கபடி... ஆக்சன் என எல்லா வெரைட்டியிலும் இசையில் அசத்தியிருப்பார்.

மதுர: இப்படத்தில் இடம் பெற்ற 'மச்சான் பேரு மதுரே' பாடலில் விஜயின் வித்தியாசமான ஸ்டைலும் வித்தியாசாகரின் பெப்பி குத்து இசையும் 90'ஸ் கிட்ஸ்களின் பேவரட் பாடலாக வீடெங்கும் ஒலித்த பாடல்.

திருமலை: சென்னை ஸ்லாங்கில் மாஸ் ஹீரோவாகவும், ரொமான்டிக் காதலனாகவும் விஜய் இப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் காதல் காட்சிகளிலும், மாஸ் ஆக்க்ஷன் காட்சிகளிலும் வித்யாசாகர் பின்னணி இசை அசத்தலாக இருக்கும். 'நீயா பேசியது', 'திம்சு கட்ட', 'தாம் தக்க' போன்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.

ஆதி: இப்படத்தில் இடம்பெற்ற 'ஒல்லி ஒல்லி இடுப்பே', 'அத்தி அத்திக்கா', `என்னைக் கொஞ்ச கொஞ்ச', 'ஏ டுர்ரா' போன்ற பாடல்கள் அனைத்தும் எவர் கிரீன் ரகம்.

குருவி: மாஸ் ஹீரோயிசம் நிறைந்த இப்படத்தில் விஜயின் மாஸான ஹீரோயிஸத்துக்கு, அஸ்திவாரமாக இருந்தது வித்யாசாகரின் பின்னணி இசையும் பாடல்களும்தான்.

காவலன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகருடன் விஜய் இணைந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் அடித்து படத்திற்கு பலம் சேர்த்திருந்தது.

வித்யாசாகர்.... 2000 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களுக்கு இசை அமைத்து உச்சத்தில் இருந்தவர். இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் ஆரம்ப காலத்தில் அவர்களின் படத்திற்கு இசை அமைத்து நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்.

இன்று நீங்கள் ஏதேனும் ஒரு 2000's பாடலை யார் இசை அமைத்தது என்று தெரியாமல் கேட்டு ரசிக்கிறீர்கள் என்றால் அது வித்யாசாகர் படலாகவும் இருக்கும் தேடிப் பாருங்கள்...