இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத பாடல்கள்! | PhotoStory

மு.பூபாலன்

இளையராஜா மற்றும் வைரமுத்து காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்துள்ளனர்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான முதல் பாடல், 'நிழல்கள்' படத்தில் இடம்பெற்ற 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...' எனும் பாடல். மெட்டுக்கேற்றப் பாட்டும் பாடலுக்கேற்ற மெட்டும் என இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இப்பாடல்.

அதைத்தொடர்ந்து 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...', 'விழியில் விழுந்து உயிரில் கலந்து...' எனும் இரண்டு பாடல்கள் இருவரின் கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றியது. மேலும் இப்படப் பாடல்களுக்காக தமிழ்நாடு அரசு வைரமுத்துவைப் பாராட்டி விருதும் அளித்தது.

கமல் நடித்த 'ராஜபார்வை' எனும் படத்தில் 'அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...' நல்ல வரவேற்பைப் பெற்ற பாடலாகும்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'புதுக்கவிதை' படத்தில் 'வெள்ளைப் புறா ஒன்று...' எனும் பாடல் ஏசுதாஸ், ஜானகி இருவரின் குரலில் மெல்லிசை மழையைத் தூவியப் பாடலாகும்.

'நினைவெல்லாம் நித்யா' படத்தில் இடம்பெற்ற 'பனிவிழும் மலர் வனம்...', 'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...' ஆகிய இரண்டு பாடல்களும் இன்றும் எதோ ஒரு பேருந்தில் பயணிப்போரை தாலாட்டிக்கொண்டிருக்கும் பாடல்களாகும்.

மோகன் நடிப்பில் வெளியான 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் 'சாலையோரம் சோலையொன்று...' எனும் பாடல் SPB குரலில் பாடப்பட்டு படத்திற்கே வலுசேர்த்த பாடலாகும்.

அதைத்தொடர்ந்து 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி (தூறல் நின்னு போச்சு)...', 'வெள்ளி சலங்கைகள் கொண்ட... (காதல் ஓவியம்)', 'உன்னைத்தானே தஞ்சம் என்று... (நல்லவனுக்கு நல்லவன்) எனப் பல பாடல்கள் இளைராஜாவின் மெட்டில் வைரமுத்து எழுதிய பாடல்களாகும்.

'முதல் மரியாதை' படத்தில் இளையராஜா மெட்டில் வைரமுத்து எழுதிய அனைத்துப்பாடல்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரமுத்துவுக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்த பாடல்களாகும். குறிப்பாக 'பூங்காற்று திரும்புமா...', 'வெட்டிவேரு வாசம்...', 'ராசாவே உன்ன நம்பி...' போன்ற பாடல்கள் கடைக்கோடி கிராமம் வரை இன்றளவும் ஒலிக்கும் பாடல்களாகும்.

ரஜினியின் படிக்காதவன் படத்தில் ஏமாற்றத்தின் துயரமாக ஒலிக்கும் 'ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்..'பாடல் பலருக்கும் பிடித்த பாடல்.

'நானொரு சிந்து', 'பாடியறியேன்', 'தண்ணித்தொட்டி தேடி வந்த (சிந்து பைரவி)', 'என்ன சத்தம் இந்த நேரம்', 'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்', 'வான் மேகம் பூ தூவும் (புன்னகை மன்னன்)' என்று இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் ஹிட் பாடல்களின் பட்டியல் மிக நீளமானது.

இவர்கள் இருவரின் கூட்டணியிலும் உருவானப் பாடல்களில் மெட்டும் பாடல் வரிகளும் ஒன்றாகக் கலந்து ஒரு இலை வெள்ளம் போல பாய்ந்து மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.