மெல்லிசை மன்னரும், கவியரசரும்... எம்.எஸ்.விஸ்வநாதன் - கண்ணதாசன் காம்போவின் எவர்கிரீன் பாடல்கள்!

மு.பூபாலன் & வினி சர்பனா

தமிழர்கள் இதயத்தில் இசையாலும் பாடல்களாலும் நீங்காமல் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவியரசர் கண்ணதாசன் - இருவரின் பிறந்தநாள் இன்று.

இருவரும் ஜூன் 24 ஒரே தேதியில் பிறந்துள்ளார்கள். கண்ணதாசன் 1927-ம் ஆண்டும், எம்.எஸ்.வி 1928-ம் ஆண்டும் பிறந்துள்ளார்கள்.

காரைக்குடியிலும் பாலக்காட்டிலும் பிறந்தவர்களை ஒன்றிணைத்தது சினிமாதான். இருவரின் எவர்கிரீன் பாடல்கள் சில...

'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம்’ தமிழர்களின் உள்ளத்தில் இன்றும் உறங்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பாடல். அரை நூற்றாண்டுக்கு மேலாகியும்கூட அனைவரது உள்ளத்திலும் மேலோங்கி நிற்கிறது.

'பாசமலர்' படத்தில் இடம்பெற்ற 'மலர்ந்தும் மலராத', தமிழகம் முழுக்க இருக்கின்ற அண்ணன் - தங்கை, அக்கா - தம்பிகள் என சகோதரர்களுக்கிடையே தினமும் மலர்ந்துகொண்டிருக்கும் அன்புக்கு, கண்ணதாசனின் இப்பாடல் வரிகள் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

'புதிய பறவை' படத்தின் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலில் "அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம், நான் பாடி வந்தேன் ஒரு ராகம்... நாம் பழகி வந்தோம் சில காலம்" வரிகளும் அதற்குப் பின்னே ஒலிக்கும் இசையும் ஒருவித பரவச ரகம்.

அதே படத்தில் இடம்பெற்ற 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடல் 60ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸிடமும் பிரபலம்.

'பாலும் பழமும்' படத்தில் இடம்பெற்ற 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்' பாடல் மட்டுமல்ல, அதற்குப்பின்னே வரும் ஹம்மிங்கும் இப்போதும் ரிப்பீட் மோடில் கேட்க வைப்பவை.

எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம்தான் விஸ்வநாதன் - ராமமூர்த்தி கடைசியாக இணைந்து இசையமைத்திருந்த படம். அதில், இடம்பெற்ற 'அதோ அந்த பறவை', 'நாணமோ' பாடல்கள் இப்போதும் நம்மை உற்சாகப்படுத்துபவை. இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார்.

அதேபோல, 'சொன்னது நீதானா' இப்போதும் தமிழர்களின் நெஞ்சங்களில் சூப் சாங்காக ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்.

'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா... தா' பாடல் நெஞ்சத்தை வாரி சுருட்டும் பாடல்.