Published:Updated:

`முதல் பாடல் பதிவு; இன்ஸ்பிரேஷன்!' - ரசிகர்களிடம் நாஸ்டால்ஜியா பகிர்ந்த அனிருத்

அனிருத்
அனிருத்

``உங்களை அதிகம் இன்ஸ்பைர் செய்தது யார்?” என்ற கேள்விக்கு ``சூப்பர் ஸ்டார் மற்றும் எம்.எஸ்.தோனி” என்று அனிருத் பதிலளித்தார்.

சினிமா பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது ரசிகர்களுடன் கலகலப்பாகப் பேசுவது வழக்கம். குறிப்பிட்ட ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் தங்களது கேள்விகளைப் பதிவு செய்ய.. .பிரபலங்கள் அதைப் பகிர்ந்து தங்களது பதில்களைப் பதிவு செய்வார்கள்.

அனிருத்
அனிருத்

தர்பார், இந்தியன் 2, தளபதி 64 போன்ற பெரிய படங்களில் கமிட்டாகி பிஸியான இசையமைப்பாளராக வலம்வரும்அனிருத் இன்று தனது ரசிகர்களுடன் ஜாலியாக ட்விட்டரில் கலந்துரையாடினார். #AskAnirudh என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ரசிகர்கள் தங்களது கேள்விகளைப் பதிவு செய்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

``உங்களுடைய முதல்படத்தில் முதல் பாடலைப் பதிவு செய்து முடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?” என்ற ரசிகரின் கேள்விக்கு, ``3 படத்தில் `நீ பார்த்த விழிகள்’ பாடலைதான் முதலில் பதிவு செய்தேன். மறக்க முடியாதது” என்று நாஸ்டால்ஜியா மோடில் ட்வீட் செய்திருந்தார்.

தர்பார்
தர்பார்

தர்பார் படம் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் அதிகமான கேள்விகளை ரசிகர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் ``தலைவரோட பிடிச்ச டயலாக் எது ப்ரோ?” என்ற கேள்விக்கு, நிறைய இருக்கு! ஆனால், என்னை எப்போதும் இன்ஸ்பைர் செய்வது அண்ணாமலை படத்தின் வசனங்கள்தான்” என்றும் ``உங்களை அதிகம் இன்ஸ்பைர் செய்தது யார்?” என்ற கேள்விக்கு ``சூப்பர் ஸ்டார் மற்றும் எம்.எஸ்.தோனி” என்றும் பதிலளித்தார்.

``தேவா சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறந்த அனுபவம். ட்ரீட் தியேட்டரில் காத்திருக்கிறது” என்று தர்பார் சர்ப்ரைஸ் ஒன்றையும் கூறியுள்ளார்.

அனிருத் மற்றும் தேவா
அனிருத் மற்றும் தேவா

தளபதி 64 மற்றும் இந்தியன் 2 படங்கள் குறித்த கேள்விகளுக்கு ``இசையமைத்துக்கொண்டிருக்கிறோம். பாடல்கள் நன்றாக வருகிறது. நாங்களும் எக்ஸைட்டடா இருக்கோம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். விஜயின் புகைப்படத்துடன் ``வெயிட்டிங்” என்று ரிப்ளை செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

``கொலவெறி முதல் சும்மாகிழி வரை அனைத்தும் ஹிட். ரசிகர்களின் இதயத்துடிப்பை எப்படிப் பிடிக்கிறீர்கள்? எல்லாம் உங்களுடைய அன்பினால்தான்” என்று சென்டிமென்டையும் டச் செய்தார். டி.என்.ஏ காம்போ எப்போ ப்ரோ? என்ற கேள்விக்கு `கம்மிங் சூன்’ என்றார். அப்போ, எதோ தரமான சம்பவம் இருக்கு என்று டி.என்.ஏ ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

அனிருத்
அனிருத்

இசையமைப்பாளர்கள் பலரும் ஹீரோக்களாக தமிழ் சினிமாவைக் கலக்கி வரும் நிலையில் அனிருத்திடமும், `ஹீரோவா நடிக்க ஆசையிருக்கிறதா?' என்ற கேள்வி வைக்கப்பட்டது. ``நான் என்ன பண்றேனோ, அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஹீரோ கேள்வியில் சிக்காமல் நழுவிவிட்டார். ``தரமான சிங்கிள்தானா?” என்று ரசிகர் கேட்க, அதற்கு சிரிப்பு ஸ்மைலியைப் பதிலாகப் பதிவிட்டிருந்தார்.

``ஒவ்வொருமுறை படம் வெளியாகும்போதும் ரசிகர்கள் கொண்டாடுவதைப் பார்க்க ஆச்சர்யமாக உள்ளது. இசையமைப்பாளராக இருந்து இதுபோன்ற அன்பு கிடைப்பதை ஆசீர்வாதமாக உணர்கிறேன். உங்களுடன் கலந்துரையாடிய இந்த நேரம் சிறப்பாக இருந்தது. உங்கள் அன்பிற்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார். ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து தர்பார் படத்தின்`தரமான சிங்கிள்’ பாடலைப் பாடி, அதையும் ட்வீட்டினார் அனிருத்.

அடுத்த கட்டுரைக்கு