Published:Updated:

`` `விஜய் 64’ பத்தி கேட்குறவங்களுக்கு என் பதில் இதுதான்!’’ - `கைதி’ வில்லன் அர்ஜுன் தாஸ்

அர்ஜூன் தாஸ்
அர்ஜூன் தாஸ்

''நான் ஆர்.ஜே-வா வேலை பார்த்தப்போ கூட என் வாய்ஸ் ரகுவரன் சாரோட வாய்ஸ் மாதிரி இருக்குனு யாரும் சொன்னதில்லை. ஆனா, செட்டுல இருந்த எல்லாரும் சொன்னாங்க. படம் ரிலீஸுக்குப் பிறகு ஆடியன்ஸ் சொல்றாங்க.''

`கைதி' படத்தில் வில்லன் அன்புவாக மிரட்டியவர் அர்ஜுன் தாஸ். ஆர்ஜேவாக இருந்தவர் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். அவரிடம் பேசினேன். ``எம்.பி.ஏ முடிச்சிட்டு துபாய்ல வேலை பார்த்துட்டு இருந்த பையன் நான். பேங்க் வேலை. ஆனால், சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்கணும்னு ஆசையிருந்தது. அதனால வேலையைப் பாதியிலேயே விட்டுட்டு சினிமாவுல நடிக்கப் போறேன்னு சொன்னேன். வீட்ல முதல்ல ஓகே சொல்லலை. போராடி அவங்ககிட்ட சம்மதம் வாங்கித்தான் சினிமாவுக்குள் வந்தேன்.

முதலில் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பு கத்துக்கலாம்னு அங்கே சேர்ந்தேன். மூணு மாசம் ஆக்டிங் வொர்க் ஷாப் பண்ணேன். அதுக்கு அப்புறம் எங்கெல்லாம் ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டு அங்கெல்லாம் போட்டோஸ் கொடுத்து காத்துக்கிட்டிருப்பேன். இடையில் சாப்பாட்டுக்கு ஏதாவது பண்ணணுமேன்னு ரேடியோ ஒன் எஃப்.எம்-ல வேலைக்குச் சேர்ந்தேன். ஆர்.ஜே.வா வேலை பார்த்துக்கிட்டு எனக்கான வாய்ப்பையும் தேடிட்டிருந்தேன். அப்போ நடிகர் அபிஷேக் ராஜா மூலமா லோகேஷ் கனகராஜ் சார் அறிமுகமானர். 'லோகேஷ் சார் ஒரு படம் எடுக்கப் போறார் போய் பாரு'னு சொன்னது அபிஷேக்தான். எனக்கு அப்போ 'கைதி' படம் பத்தின எதுவும் தெரியாது. அவரைப் போய் பார்த்து ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் 'கைதி' படத்தோட வாய்ப்பு கிடைச்சது.

அர்ஜூன் தாஸ்
அர்ஜூன் தாஸ்

லோகேஷ் சார் படத்தோட ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி எல்லா கதாபாத்திரங்கள் பத்தியும் சொன்னார். என்னோட கேரக்டர் பத்தி சொன்னப்போ கொஞ்சம் பயமிருந்தது. என் மேலே லோகேஷ் சாருக்கு நம்பிக்கை இருந்தது. அவரோட நம்பிக்கைதான் என்னை நடிக்க வெச்சது. ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த எல்லாரும் இப்போ நெருங்கிய நண்பர்களா ஆகிட்டாங்க. நான் ஆர்.ஜே-வா வேலை பார்த்தப்போ கூட என் வாய்ஸ் ரகுவரன் சாரோட வாய்ஸ் மாதிரி இருக்குனு யாரும் சொன்னதில்லை. ஆனா, செட்டுல இருந்த எல்லாரும் சொன்னாங்க. படம் ரிலீஸுக்குப் பிறகு ஆடியன்ஸ் சொல்றாங்க. எனக்கு இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல. கார்த்தி சார் படங்கள் பார்த்து வந்திருக்கேன். அவர்கூட சேர்ந்து வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.

சினிமா விமர்சனம் - கைதி

இதற்கு இடையில் ரெண்டு படம் நடிச்சி முடிச்சிருக்கேன். பிரபு சாலமன் சாரோட 'கும்கி 2' படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்கேன். தவிர `அந்தகாரம்' படத்துல லீட் ரோலில் நடிச்சேன். இந்த ரெண்டு படங்களுக்கும் முன்னாடியே 'கைதி' ரிலீஸாகி நல்ல பேரை வாங்கிக் கொடுத்திருக்கு. எப்பவும் தீபாவளி அன்னைக்கு பெரிய ஸ்டார் படங்களை தியேட்டரில் போய் பார்த்து என்ஜாய் பண்ணுவேன். இந்த வருஷம் தீபாவளிக்கு நான் நடிச்ச படத்தைப் பார்த்துட்டு சந்தோஷப்பட்டது வேற லெவல் ஃபீல். சினிமாவுக்கு நடிக்க வந்தப்போ வீட்ல பயந்தவங்களுக்கு இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு.

'கைதி' திரைப்படம்
'கைதி' திரைப்படம்

சினிமாவுல எனக்கொரு வழிகாட்டியா லோகேஷ் கனகராஜ், பிரபு சாலமன் மற்றும் விக்னாராஜன் சாரை சொல்லுவேன். 'கைதி' ரிலீஸுக்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருது. அவசரப்பட்டு எந்தவொரு படத்துலயும் கமிட்டாக வேண்டாம்னு தோணுது. எல்லா விதமான கேரக்டரும் பண்ணணும்னு ஆசையிருக்கு'' என்றவரிடம் 'விஜய் 64' மற்றும் 'கைதி 2' படத்தில் இருக்கீங்களா என்றால் ''இந்தக் கேள்வியை நிறைய பேர் கேட்குறாங்க. ஆனா, படத்துல நான் இல்லைங்க. அதே மாதிரி 'கைதி 2' பற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசியிருக்கோம். இந்த வெற்றிக்குப் பிறகு அதுவும் நடந்தா நல்லாயிருக்கும்'' என்கிறார் அர்ஜூன் தாஸ்.

100 kmph... துவம்சம் செய்யும் லாரி... டாப் கியருக்கு முன்..?! - கைதி +/- ரிப்போர்ட்
அடுத்த கட்டுரைக்கு