சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தேவை கருணை அல்ல; நீதி! - ARTICLE 15

ஆர்ட்டிக்கிள் 15
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்ட்டிக்கிள் 15

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பது சாத்தியமான நடைமுறையா, சம்பிரதாய வார்த்தைகளா என்ற கேள்வியை நம் மனசாட்சி முன் எழுப்புகிறது ‘ஆர்ட்டிக்கிள் 15’ - இந்திப்படம்.

ண்ணல் அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தின் ஆன்மா ‘சட்டப்பிரிவு 15.’ ‘மதம், சாதி, இனம், நிறம், பிறப்பிடம், பால் ஆகியவற்றின் காரணமாக ஒருவர்மீது பாகுபாடு காட்டப்படக் கூடாது. குறிப்பாக அரசு இத்தகைய வேறுபாடுகளின் அடிப்படையில் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது’ என்கிறது சட்டப்பிரிவு 15. ஆனால் இந்த விதியைப் புறந்தள்ளிவிட்டே அரசும் அதிகார வர்க்கமும் செயற்படுகின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகத் தோலுரித்திருக்கிறது ‘ஆர்ட்டிக்கிள் 15.’

மேலைநாட்டில் படித்து டெல்லியில் பணிபுரிந்துவிட்டு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் பணிபுரிய வருகிறார் காவல்துறைத் துணை ஆய்வாளர் அயன் ரஞ்சன். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிழல்கூட தங்கள்மீது படுவது பாவம் என்ற ஆதிக்கசாதி மனப்பான்மை அவரை ஆச்சர்யப்படுத்துகிறது. தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று தலித் சிறுமிகள் காணாமல்போகிறார்கள். அதில் இருவர் மரங்களில் தூக்குமாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளார்கள். ‘இருவரும் லெஸ்பியன்கள். அதனால் அவர்கள் தந்தைகளே ஆணவக்கொலை செய்தார்கள்’ என்று வழக்கை முடிக்கப்பார்க்கும் உள்ளூர்க் காவல்துறை, மூன்றாவது சிறுமியைத் தேடுவதற்கு எந்த அக்கறையும் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்தச் சிறுமியின் புகைப்படம்கூடக் காவல்துறையிடமில்லை. இந்த வழக்கின் உள்ளேபோய் அயன் விசாரிக்கத் தொடங்கும்போதுதான் காவல்துறையின் உள்ளேயும் ஊடுருவியுள்ள சாதியக் கொடூர மனநிலை, கிராமங்களில் தலித் மக்கள் நடத்தப்படும் அவலம், ஆதிக்கசாதி மனோபாவமும் அதிகார மனநிலையும் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது என்று பல உண்மைகள் இருளிலிருந்து கசிகின்றன. அந்த வழக்கை மூடிமறைப்பதற்காகப் பல்வேறு மட்டங்களில் நடத்தப்படும் முயற்சிகளும், அதைத்தாண்டி அயனின் சமூகநீதிக்கான போராட்டமுமே படம்.

தேவை கருணை அல்ல; நீதி! - ARTICLE 15

வெறும் 25 ரூபாய் தினக்கூலியில் பணிசெய்து கொண்டிருக்கும் தலித் சிறுமிகள், மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்படுவதும், கோயிலில் நுழைந்ததற்காக தலித் மக்கள் ஆதிக்கசாதியினரால் கட்டிவைக்கப்பட்டு அடிக்கப்படுவதும், நமது எத்தனையோ ‘புதிய இந்தியா’க்களுக்கு மத்தியில் எப்போதும் மாறாத ‘பழைய இந்தியா.’

படத்தின் தொடக்கக்காட்சியில் இருந்து இறுதிவரை ஓர் இந்திய கிராமம் எப்படி சாதியக் கொட்டடியாக இருக்கிறது என்பது பார்வையாளர்களுக்கு அழுத்தமாக உணர்த்தப்படுகிறது. ஆதிக்கசாதியில் பிறந்தாலும் சாதிக்கு வெளியிலிருந்து அணுகும் அதிகாரி அயன் ரஞ்சனாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஆயுஷ்மான் குரானா. இஷா தல்வார் நடித்திருக்கும் அதிதி பாத்திரம், கதைக்கு ஒட்டாமல் வெளியில் நிற்கிறது. என்றாலும் கிட்டத்தட்ட மனசாட்சியுடனான உரையாடல்களாகவே இருக்கின்றன இருவரின் உரையாடல்களும். எளிய மக்களிடம் அதிகாரம் காட்டுவதும் மேலதிகாரியிடம் பணிவு காட்டுவதும், சட்டமும் காவல்துறையும் சாதியத்தை அசைத்துவிட முடியாது என்பதைத் தன் உடல்மொழி வழியாகவே உணர்த்துவதும் என, சாதியத்தின் இருப்பைச் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறார் பிரம்மதத் பாத்திரத்தில் நடித்திருக்கும் மனோஜ் பாஹ்வா. தலைமறைவு தலித் இயக்கப்போராளி ‘நீஷத்’தாக நடித்திருக்கும் மொஹமது ஜீசன் அயூப், பணிப்பெண் அம்லியாக நடித்திருக்கும் சும்புல் தவ்ஹீர், நீதிக்காய்ப் போராடும் தலித் பெண் கௌராவாக நடித்திருக்கும் சயானி குப்தா, மனசாட்சியுள்ள மருத்துவர் மால்ட்டி ராமாக நடித்திருக்கும் ரோஞ்சினி, சி.பி.ஐ அதிகாரி பணிக்கராக நடித்திருக்கும் நம் தமிழ்க்கலைஞர் நாசர் எனச் சிறப்பான பாத்திரப்படைப்புகளில் சிறப்பான கலைஞர்கள்.

தேவை கருணை அல்ல; நீதி! - ARTICLE 15

வசனங்கள் நெருப்புத்துண்டங்களாக வந்து விழுகின்றன. ஒரு காட்சியில் வர்ணாசிரமத்தை விளக்கும் காவல்துறை வாகன ஓட்டுநர், ‘`எல்லோரும் சமம்னா யார் ராஜாவா இருக்கிறது?” என்று கேட்பார். இதைத் தன் தோழி அதிதிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்புவார் அயன். அதிதியின் பதில் செய்தி இது, “ஏன் நமக்கு எப்போதும் ஒரு ராஜா இருக்க வேண்டும்?” மலையாள அதிகாரி பணிக்கர், இந்தியில் பேச முற்படும்போது, “உங்களுக்கு இரண்டாவது மொழியாகக்கூட இல்லாத இந்தியில் ஏன் பேச விரும்புகிறீர்கள்?” என்று அயன் கேட்கும் காட்சி, மொழி அதிகாரத்துக்கு எதிரான குரல். அதைத் தெற்கு பேசுவதைவிட வடக்கு கேட்பது கூடுதல் சிறப்பு. ஆதிக்க சாதியில் இருப்பவர்களுக்கு அம்பேத்கரின் இந்தச் சட்டங்கள் எவ்வளவு எரிச்சலைக் கொடுக்கின்றன என்பதை உணர்த்தும் ஒரு காட்சி: “உன்னையெல்லாம் குப்பை அள்ள விட்டுருக்கணும்” என இன்ஸ்பெக்டர் பிரம்மதத் சொல்ல, ‘`இன்னும் எத்தனை நாள்களுக்கு நாங்களே குப்பை அள்ளணும்?’’ என தலித் காவல்காரர் ஒருவர் திருப்பி அடிக்கிறார். இப்படி நிறைய காட்சிகள்.

காவல்துறையினர் தங்கள் சாதி அடையாளம் குறித்து விவரிக்கும் காட்சி, சமமான சாதிகள் என்று நம்பப்படுபவற்றிலும் சமத்துவமில்லை என்பதை முகத்தில் அறைந்துசொல்கிறது. இறுதிக்காட்சியில் ரொட்டியும் சப்ஜியும் தரும் மூதாட்டியிடம் “உங்கள் சாதி என்ன?” என்று அயன் கேட்பதும், அந்த மூதாட்டி பதில் சொல்லும்போது லாரியின் ஹாரன் சத்தத்தில் சாதி அமுங்கிப்போவதும் காத்திரமான எதிர்க்கவிதை. அம்லியின் அண்ணன் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததையும், உண்மை தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்டதையும் அம்லியிடம் அயன் விளக்கும் காட்சி மிக நுட்பமானது. “அரசியல் சட்டத்தை அம்பேத்கர்தானே எழுதினார்?” என்று தலித் இயக்க இளைஞனிடம் அயன் சொன்னதும், “ஆமா, ஆனால் அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அரசியல் சட்டத்தை எரிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்னு அதே பாபாசாகேப்தான் சொன்னார்” என்று நீஷத் பதிலளிப்பதும் கலகக்குரல். மதவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதி தன் வீட்டிலிருந்து உணவு கொண்டுவந்து தலித் மக்களுடன் சாப்பிட்டுவிட்டு, சமத்துவ பாவனை காட்டுவதும், சாதிய முரண்களை கார்ப்பரேட் சாமியார் பயன்படுத்திக்கொள்வதும், பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி என எல்லாக் கட்சிகளின் ஆட்சிகளிலும் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை தொடர்வதை உணர்த்தும் ‘எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டீங்க?’ காட்சி என... படம் முழுவதுமே அறத்தின் குரலைத் துணிச்சலாய் ஒலிக்கிறது.

ஷாருக் கான் நடித்த ரா ஒன் போன்ற பொழுதுபோக்குப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்த இயக்குநர் அனுபவ் சின்ஹா, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நிலவும் சமூக, அரசியல் சூழல் காரணமாக முல்க், ஆர்ட்டிக்கிள் 15 போன்ற படங்களை இயக்குவதாகத் தெரிவித்திருக்கிறார். மும்மொழிக் கொள்கைப் பிரச்னை முன்னுக்கு வந்தபோது, மொழித்திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் ஆயுஷ்மான் குரானா. இருவரின் சமூக அக்கறை காட்சிமொழிக்கு அடர்த்தி கூட்டியிருக்கிறது.

கிராமத்து வயல்களையும் தலித் குடியிருப்பையும் அரசு மருத்துவமனையையும் குப்பைகள் நிறைந்த ஏரியையும் சிறப்பாய்ப் படம்பிடித்துப் பதிவு செய்திருக்கிறது இவான் முலிகனின் ஒளிப்பதிவு. மங்கேஷ் தக்டே இசை, படம் சொல்ல விரும்பும் அரசியலையும் அழகியலையும் மிக வீரியமாய்ப் பதிவு செய்திருக்கிறது. இசை எந்த இடத்திலும் நம் உணர்ச்சியைத் தூண்டாமல் காட்சியின் வீரியத்தை உணர்த்துகிறது. அரசியல் சட்டத்தின் விதி 15-ஐ காவல்நிலைய அறிவிப்புப் பலகையில் அயன் ரஞ்சன் ஒட்டும் காட்சியில் ‘வந்தே மாதரம்’ இசை ஒலிக்கும். கழிவுத்தொட்டியில் இறங்கி துப்புரவுத் தொழிலாளி குப்பைகளை எடுக்கும்போது அதே ‘வந்தேமாதரம்’ இசை, வேறொரு தொனியில் ஒலிக்கும். உண்மையில் பார்வையாளர்களிடம் பச்சாதாபத்தை வரவழைக்க இசையமைப்பாளருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அதை உறுதியாகத் தவிர்த்திருக்கிறார். ஏனெனில், சுரண்டப்படும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவை கருணை அல்ல; நீதி.