சினிமா ஆர்வலர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கோலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் ஸ்டூடியோஸின் ஒரு பகுதி தற்போது `ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்' ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ்.எஸ்.வாசன் (நிறுவனர், ஜெமினி ஸ்டூடியோஸ், ஆனந்த விகடன்) மற்றும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏவி மெய்யப்பன் போன்ற பல்வேறு கலைஞர்கள் பயன்படுத்திய 40+ பழங்கால கிளாசிக் கார்கள் மற்றும் 20+ பைக்குகள் உள்ளன.

முரட்டுக் காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி போன்ற முக்கிய தமிழ்த் திரைப்படங்களைப் படமாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் உட்பட ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களின் வகைப்படுத்தலை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி-தி பாஸ் படத்தில் பிரபலமான ‘வாஜி வாஜி’ பாடலில் பயன்படுத்தப்பட்ட பல்லக்குகளும், அதே படத்தில் வரும் ‘அதிரடி’ பாடலில் பயன்படுத்தப்பட்ட 1939 மாடல் எம்ஜி டிபி காரும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் ' சகலகலா வல்லவன் ' , ' அன்பே வா ' , ' சேதுபதி IPS ' போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தின ஆடைகள், படப்பிடிப்பு கருவிகள் இடம்பெற உள்ளன.