Published:Updated:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட விழா; விழிப்புணர்வு தந்த ஆவணப்படங்கள்!

திரைப்பட விழா தொடக்க நிகழ்வு

`Girls Are Not Brides' ஆவணப்படம், வங்கதேச நாட்டில் பொருளாதார பிரச்னைகளால் குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் சூழல், அக்குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பேசியது. தங்களுக்கு நடக்கவிருந்த குழந்தை மணத்தை எதிர்த்த நான்கு பெண்களைப் பற்றியும் அது ஆவணப்படுத்தியிருந்தது.

Published:Updated:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட விழா; விழிப்புணர்வு தந்த ஆவணப்படங்கள்!

`Girls Are Not Brides' ஆவணப்படம், வங்கதேச நாட்டில் பொருளாதார பிரச்னைகளால் குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் சூழல், அக்குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பேசியது. தங்களுக்கு நடக்கவிருந்த குழந்தை மணத்தை எதிர்த்த நான்கு பெண்களைப் பற்றியும் அது ஆவணப்படுத்தியிருந்தது.

திரைப்பட விழா தொடக்க நிகழ்வு

மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தில், 14-வது சர்வதேச ஆவண திரைப்படத் திருவிழாவான ப்ராக்ருதி, மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில், மனித உரிமை மீறல்கள், குழந்தைத் திருமணப் பிரச்னைகள் உள்ளிட்டவற்றைப் பற்றி பேசும் படங்கள் திரையிடப்பட்டன.

டெல்லியில் உள்ள தேசிய கல்வி தொடர்புக்கான கூட்டமைப்பு (சி.இ.சி) மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்வி பல்ஊடக ஆய்வு மையம் (இ.எம்.ஆர்.சி) இணைந்து நடத்திய 14-வது சர்வதேச ஆவண திரைப்பட விழாவான `ப்ராக்ருதி', கடந்த மார்ச்-1 அன்று தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெற்றது.

ப்ராக்ருதி ஆவணத் திரைப்பட விழா
ப்ராக்ருதி ஆவணத் திரைப்பட விழா

முதல் நாள் நிகழ்வில், பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜா.குமார் , சி.இ.சி-யின் இயக்குநர் ஜகத் பூஷன் நட்டா, இணை இயக்குநர் சுனில் மெஹ்ரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய ஜகத் பூஷன் நட்டா, ``இந்த அமைப்பு 1997-ல் படைப்பாளர்களை ஊக்குவிப்பதற்காகத் தொடங்கப்பட்டது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு திரைப்படவிழாவில் மேம்பாடு, சுற்றுச்சூழல், தூய்மை இந்தியா, மனித உரிமைகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன" என்றார்.

பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பேசும்போது, ``அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. 2014-ல் நான் கோவா சட்டமன்ற சபாநாயகராக இருந்தபோது, சட்டசபை நடவடிக்கைகள் காகிதப் பயன்பாடின்றி, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. இதனால் காகித பயன்பாட்டுக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறையும்" என்றார். திரைப்பட விழாவின் முதல் நாளில், நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வோர் ஆவணப்படமும் திரையிடப்பட்டு பின்னர், அதுகுறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இரண்டாம் நாளான மார்ச் 2-ம் தேதி நடந்த சர்வதேச அளவிலான ஆவணப்படத் திரையிடலின் இரண்டாம் பகுதியில் மனித உரிமைகள் சார்ந்த ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் நோவேரா ஹசான் நிக்கோனின் `The Girls Are Not Brides' எனும் ஆவணப்படம், வங்கதேச நாட்டில் பொருளாதார பிரச்னைகளால் குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் சூழல், அதனால் அங்குள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பேசியது. குழந்தை மணத்தை எதிர்த்து, பின்னாளில் தங்களுக்கென சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்ட நான்கு பெண்களைப் பற்றியும் அது ஆவணப்படுத்தியிருந்தது.

ஆவணப் படவிழாவில்
ஆவணப் படவிழாவில்

பின்னர், மகேஷ் கலாசயாவின் `The Call Of The Malekudiya' என்னும் படம் திரையிடப்பட்டது. மலைக்குடியாஸ் பழங்குடியின மக்கள் எப்படி புதுப்புது கலாசாரங்களையும் காலத்துக்கேற்ப கடைப்பிடித்து பழகிக்கொண்டனர் என்பது பற்றியும், ஆனால் மாசு இல்லாத இடங்களில் வாழும் அம்மக்களுக்கு இந்த மாற்றம் தேவையானதா என்ற கேள்வியையும் இந்த ஆவணப்படம் முன்வைத்திருந்தது.

அடுத்து, அரிந்தம் கோனார் மற்றும் ஷாம் சுந்தர் பௌலின் பெங்காலி ஆவணப்படமான `Master Moshai', காஷ்மீரின் ஸ்ரீ நகரில் ஒரு கோடைக்காலத்தில் பள்ளி முகாம் ஒன்றுக்காக வரும் 25 வெவ்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பற்றியது. பல்லுயிர் பாதுகாப்பின் தேவை பற்றி தேசிய அளவில் இளையோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவணப்படமாக இது அமைந்திருந்தது.

கைலாஷ் புதானியின் ஆவணப்படமான `Support For All, Trust For All'... இந்திய அரசு 60 - 79 வயதான முதியோர் நலனுக்காக மாதம் வழங்கும் ரூ.200 மற்றும் கணவரை இழந்தவர்களின் நலனுக்காக வழங்கும் உதவித்தொகை 3.09 கோடியானது ஏழை மக்களுக்கு எப்படி உதவியாய் அமைகிறது என்பதை விளக்கியது. சஞ்சய் பர்னேலாவின் காடுகள் பாதுகாப்பு பற்றிய `Forest Rights Act,2006' திரைப்படம் மனித உரிமைகள் சார்ந்த ஆவணப்படங்களின் சாராம்சத்தைத் திரையில் கொண்டுவந்தது. மதுரை காமராசர் பல்கைக்கழகப் பேராசிரியர் இளம்பரிதி, நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சாமிநாதன்
விழாவில் அமைச்சர் சாமிநாதன்

விழாவின் மூன்றாம் நாளில் `தூய்மை இந்தியா' என்னும் தலைப்பின் கீழ் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. கொல்கத்தாவின் குடிசைப்பகுதி குழந்தைகளுக்குக் கழிவறை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதனால் அந்தக் குழந்தைகளின் வீடுகளில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய மிருதுல் குப்தாவின் `ரஹோ ஸ்வச் ஜியோ மஸ்த்' என்னும் ஆவணப்படம், சிறப்பான அனுபவம்.

அடுத்து, மக்களுக்கு குடிநீர் மற்றும் தூய்மை சார்ந்து கிராம ஊராட்சிகளின் கடமை பற்றிய தேவேந்திர சோப்ராவின் `சர்பஞ்ச் கீ பூமிகா அவுர் கரி' எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. முகம்மது கௌசின், காய்கறி கழிவுகளைப் பயன்படுத்தி குர்நூல் வாசிகள் எப்படி சோனா மன்சூரி அரிசி பயிரிடுகிறார்கள், அதற்கு குர்நூல் மாநகராட்சியின் பங்கு பற்றிய `படால்டா பாரத்' எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நிறைவாக, குஷால்சாரில் 30 ஆண்டுகளாகக் கழிவுகளைக் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மைதானம் எப்படி ஓர் அரசு மற்றும் தனியார் கூட்டால் தூய்மையாக்கப்பட்டது என்பது பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.

விழாவில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன்
விழாவில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன்

கடைசி நாளில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், திரையிடப்பட்ட ஆவணப்படங்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணப்படங்களுக்கு ரூ.50,000 பரிசுத்தொகையை வழங்கினார்.

திரைப்படத் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், ``ஆவணத் திரைப்பட விழாவில் பல மொழிகளில் இருந்தும் படங்கள் திரையிடப்பட்டன. இதன் மூலம் பல்வேறு தரப்பு மக்களின் நிலப்பரப்பு, வாழ்வியல் முறைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தந்தப் பட இயக்குநர்களும் இருந்ததால், கலந்துரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது” என்றனர்.