சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“எதையும் உங்களை வாங்கத் தூண்டறதுதான் என் வேலை!” - ரேணுகா ரத்னசாமி

ரேணுகா ரத்னசாமி போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
News
ரேணுகா ரத்னசாமி போட்டோகிராபி

ஆரம்பத்துல என்னோட ஆர்வம் புராடக்ட் போட்டோகிராபியா இருந்தது. புரூக்ஸ்ல படிச்சபோது எனக்கு மாடலிங் போட்டோகிராபி அறிமுகமாச்சு.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

ஆண்களால் ஆளப்படும் பல துறைகளில் போட்டோகிராபியும் ஒன்று. பேபி போட்டோகிராபி, ஃபுட் போட்டோகிராபி, வெட்டிங் போட்டோகிராபி என மென்மையான ஏரியாக்களில் மட்டுமே பெண்களைப் பார்க்க முடிகிறது.

இவர்களுக்கு மத்தியில் `நான் வேற மாதிரி...' என கெத்து காட்டுகிறார் ரேணுகா ரத்னசாமி. சென்னையைச் சேர்ந்த ரேணுகா, ஆண்களின் உலகமாக அறியப்படும் ஃபேஷன் மற்றும் கமர்ஷியல் போட்டோகிராபியில் கவனம் ஈர்க்கும் `ஒத்த ரோசா.’ சர்வதேச மாடல்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள்வரை தன் லென்ஸுக்கு அடிமையாக்கும் மந்திரக்காரி... சுந்தரி சில்க்ஸ், ஹிமாலயா ஸ்கின் கேர், கோகுல் சான்டல், வாய் ஜீன்ஸ் என இவரது திறமையைப் பேசும் விளம்பர லிஸ்ட் கொஞ்சம் நீ... ளம்.

சென்னை, ஈசிஆரில் இருக்கும் ரேணுகாவின் வில்லா வாசலில் வரவேற்கும் பெயர்ப்பலகையிலிருந்தே ஆரம்பமாகிறது அவரது கலையார்வம்.

``நேம் போர்டுல நீங்க பார்க்குற கிருஷ்ணா என் ஹஸ்பண்ட். இமை என் மகன், அலை என் மகள்.... கிருஷ்ணாவும் நானும் லயோலாவுல ஒண்ணா படிச்சோம். காலேஜ்ல சேர்ந்ததும் ஆரம்பிச்ச லவ்... கல்யாணத்துல முடிஞ்சுது. நடிகரா, டான்ஸரா இருந்தவர், இப்போ டைரக்டர் விஷ்ணுவர்தன்கிட்ட அசிஸ்டன்ட்டா வொர்க் பண்ணிக்கிட்டிருக்கார். குழந்தைங்களுக்கு தமிழ்லதான் பேருவெக்கணும்னு ஆசைப்பட்டோம். வாழ்க்கையில நான் எடுத்த பெஸ்ட் முடிவுகள்ல என் குழந்தைகளோட பெயர் செலக்‌ஷனும் ஒண்ணு...'' கணவரையும் குழந்தைகளையும் அறிமுகப்படுத்தியபடி பேச ஆரம்பிக்கிறார் ரேணுகா.

ரேணுகா ரத்னசாமி
ரேணுகா ரத்னசாமி

``கன்னியாகுமரியில பிறந்து, சென்னையில வளர்ந்த பொண்ணு நான். சயின்ட்டிஸ்ட் ஆகணும், நாசாவுல வேலை பார்க்கணும்கிறதுதான் சின்ன வயசு லட்சியமா இருந்தது. ஆனா, எனக்கு சயின்ஸ் வரலை. ப்ளஸ் ஒன் படிச்சுக்கிட்டிருந்தபோது எங்கப்பா எனக்கொரு கேமரா வாங்கிக் கொடுத்தார். பொழுதுபோக்கா போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல அது ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சுது. ஒரு தருணத்தை மறக்க முடியாத சித்திரமா உறையவெச்சு, நம்மை தினம் தினம் பார்க்க வெக்கிறதுதான் போட்டோகிராபி. அதை என்னால சிறப்பா பண்ண முடியும்னு தோணுச்சு. அது எனக்கான சூப்பர் பவர் மாதிரி இருந்தது. முறைப்படி போட்டோகிராபி படிக்கத் தோணுச்சு. லயோலா காலேஜ்ல விஸ்காம் படிச்சேன். அதுல போட்டோகிராபியும் ஒரு சப்ஜெக்ட். இன்னும் ஸ்பெஷலைஸ் பண்ணணும்னு தோணவே, ஊட்டியில முகமது இக்பால் என்பவர் நடத்துற `லைட் அண்ட் லைஃப் அகடமி'யில ஒரு வருஷம் படிச்சேன். ஃபைன் ஆர்ட்ஸ், புராடக்ட்ஸ், போர்ட்ரெயிட்ஸ்னு போட்டோகிராபியோட பல பிரிவுகளையும் அங்கே கத்துக்கிட்டேன். ஆனா, அதுலயும் எனக்கு திருப்தி கிடைக்கலை. நான் ஸ்பெஷலா என்ன பண்ணப்போறேங்கிற கேள்வி துரத்திக்கிட்டே இருந்தது. சான்டா பார்பராவுல இருக்குற புரூக்ஸ் இன்ஸ்டிட்யூட்ல மூணு வருஷ கோர்ஸ் படிச்சேன். அப்புறம் லாஸ் ஏஞ்சல்ஸ்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு மறுபடி இந்தியாவுக்கு வந்தேன்.''- குட்டி ஸ்டோரி சொல்லும் ரேணுகா, ஃபேஷன் போட்டோகிராபிக்குள் நுழைந்தது யதேச்சை நிகழ்வு.

“எதையும் உங்களை வாங்கத் தூண்டறதுதான் என் வேலை!” - ரேணுகா ரத்னசாமி

``ஆரம்பத்துல என்னோட ஆர்வம் புராடக்ட் போட்டோகிராபியா இருந்தது. புரூக்ஸ்ல படிச்சபோது எனக்கு மாடலிங் போட்டோகிராபி அறிமுகமாச்சு. அதுல எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கிறதா சொன்னாங்க. ஒரு கட்டத்துல ஃபேஷன் போட்டோகிராபி என் ஃபேவரைட் ஆகிடுச்சு. நீங்க போடுற டிரெஸ், உங்க அக்சஸரீஸ் எல்லாம் சேர்ந்ததுதான் ஃபேஷன். அதோட விலை 50 ரூபாயோ, 50 ஆயிரம் ரூபாயோ... அதை வாங்கத் தூண்டுற மாதிரி ஷூட் பண்றதுதான் என் வேலை'' என்பவர், அந்தத் துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் பின்னணியையும் சொல்கிறார்.

``மீட்டிங்ல ஆரம்பிச்சு வேலைவரை இந்தத் துறையில நிறைய ஆண்களோட சேர்ந்து வொர்க் பண்ண வேண்டி யிருக்கும். அசாத்தியமான தன்னம் பிக்கை இருக்கணும். `இவங்ககிட்ட வேலையைக் கொடுத்தா நல்லா பண்ணுவாங்க'ங்கற நம்பிக்கையை க்ளையன்ட்டுக்கு ஏற்படுத்தணும். போட்டோகிராபர் ஆணா, பெண்ணா, வயசு என்னங்கிறதையெல்லாம் க்ளையன்ட் பார்க்க மாட்டாங்க. நம்ம வேலையைத்தான் பார்ப்பாங்க. நாம எடுத்த படங்கள்தான் அவங்களுக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும். தவிர, ஃபேஷன் போட்டோகிராபியைப் பொறுத்தவரை அதுல செலவு அதிகம். பெரிய தொகையைச் செலவழிச்சு ஷூட் பண்ணும்போது அதுக்கான பொறுப்பு போட்டோகிராபருக்கு இருக்கணும். அது சூப்பரா வந்தாலும் சரி, சொதப்பினாலும் சரி... போட்டோகிராபர்தான் முழுப் பொறுப்பு. இதுக்கெல்லாம் தயாரா இருக்கிறவங்கதான் வர்றாங்க...'' பொறுப்புகளை உணர்ந்தவர், ஒவ்வொரு ஷூட்டுக்கு முன்பும் ஹோம்வொர்க் செய்யத் தவறுவதில்லை.

“எதையும் உங்களை வாங்கத் தூண்டறதுதான் என் வேலை!” - ரேணுகா ரத்னசாமி

``சில வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் மாடல்கள் ஒரே ஸ்கின் டோன், உடல்வாகு, ஹேர்ஸ்டைல்னு இருந்தாங்க. எனக்கு அதை பிரேக் பண்ணணும்னு தோணுச்சு. ஒருத்தரைப்போல இன்னொருத்தர் இருக்கக் கூடாது, ஃப்ரெஷ்ஷா இருக்கணும். மினிமம் மேக்கப்ல இருக்குற முகங்கள் என்னை ஈர்க்கும். சில பேர் கேமரா முன்னாடி வந்து நின்னா, மேஜிக் பண்ணுவாங்க. அத்தனை எக்ஸ்பிரஷன்ஸ் கொடுப் பாங்க. அவங்க கண்கள் பேசும். அதனால ஒவ்வொரு ஷூட்டுக்கு முன்னாடியும் நான் வொர்க் பண்ணப்போற மாடல்ஸ்கூட ஒரு நாள் செலவழிப்பேன். அவங்ககிட்ட பேசி, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டுதான் ஷூட்டுக்குப் போவேன். ஒரு ஷூட்டுல மட்டும் அப்படி மாடலை முன்கூட்டியே சந்திச்சுப் பேச முடியலை. அவங்க போட்டோஸை மட்டும் பார்த்துட்டு நேரா ஷூட்டுக்கு போயிட்டோம். அந்த மாடல் ஏதோ ஸ்கின் ட்ரீட்மென்ட் பண்ணியிருந்தாங்க. அதனால ஸ்கின் உறிஞ்சு வந்துக்கிட்டே இருந்துச்சு. வேற வழியில்லாம ஷூட்டையே கேன்சல் பண்ண வேண்டியதாயிடுச்சு. இப்படி என்ன நடந்தாலும் கோபப்பட்டு ரியாக்ட் பண்ணிடக் கூடாது. அந்த இடத்துல எல்லாரோட கவனமும் போட்டோகி ராபர்மேல இருக்கும். அங்கே அவங்க டென்ஷனாயிட்டா மொத்த ஷூட்டும் பாதிக்கப்படும். லேடி போட்டோகிராபர்ஸுக்கு இதுவும் ஒரு முக்கியத் தகுதி.'' புதியவர்களுக்கான மெசேஜ் சொல்லும் ரேணுகா, மாடல்களின் ஃபேவரைட் மட்டுமல்ல, கல்கி கோச்லின், புல்கிட், த்ரிஷா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்களின் பிரியத்துக்கும் உரியவர்.

“எதையும் உங்களை வாங்கத் தூண்டறதுதான் என் வேலை!” - ரேணுகா ரத்னசாமி

``போட்டோகிராபிங்கிறது க்ளையன்ட்டுக்காக ஷூட் பண்றது மட்டுமில்லை. என் வீட்டுப் பூனை அழகா இருக்குனு தோணினா உடனே போட்டோ எடுப்பேன். என் ரெண்டு குழந்தைங்களையும் தினமும் போட்டோஸ் எடுப்பேன். லைட் மேல எனக்கு அப்படியொரு தீரா காதல்... எல்லா இடங்கள்லயும், எந்நேரமும் லைட் எப்படி விழுதுன்னு என் கண்கள் தேடிக்கிட்டே இருக்கும். போட்டோ கிராபியில சர்வதேச அளவுல டிரெண்ட் மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கேத்தபடி ஒவ்வொரு நிமிஷமும் அப்டேட் ஆகணும்'' என்பவர், கடந்த சில வருடங்களாக ஃபேமிலி போட்டோகிராபியிலும் பிஸி. அப்படி அவர் எடுத்ததில் லேட்டஸ்ட் மு.க.அழகிரியின் ஃபேமிலி போர்ட்ரெய்ச்சர்.

``கொரோனா உச்சத்துல இருந்த போது மக்கள் பயத்துல இருந்தாங்க. எல்லாருக்கும் உறவுகளோடு சேர்ந்து ஃபேமிலி போட்டோஸ் எடுத்துவெக்கணும்னு தோணுச்சு. போஸ் கொடுக்கச் சொல்லாம, அவங்களை இயல்பா இருக்கவிட்டு எனக்குப் பிடிச்ச மாதிரி படங்கள் எடுக்கறதுதான் என் ஸ்டைல். கமர்ஷியல் போட்டோ கிராபில இன்னிக்கு நான் ஒரு பிராண்டுக்கு ஷூட் பண்ணலாம், நாளைக்கு வேற ஒருத்தர் அதே பிராண்டை ஷூட் பண்ணலாம். ஆனா குடும்பப் படங்கள் அப்படியில்லை. அது காலத்துக்கும் அவங்க நினைவுல நிற்கும்.'' ரேணுகாவின் பார்வை கணவர், மகன், மகளுடன் நிற்கும் குடும்பப் படத்தை நோக்குகிறது.

“எதையும் உங்களை வாங்கத் தூண்டறதுதான் என் வேலை!” - ரேணுகா ரத்னசாமி
“எதையும் உங்களை வாங்கத் தூண்டறதுதான் என் வேலை!” - ரேணுகா ரத்னசாமி

``குடும்பம்கிறது எவ்ளோ அழகான விஷயம்ல... கர்ப்பமா இருந்தபோது எட்டு மாசம் வரைக்கும் வேலை பார்த்தேன். குழந்தைங்க பிறக்கும்வரை கரியர்தான் வாழ்க்கைனு இருந்தேன். அவங்க வந்த பிறகு அவங்களோட நேரம் செலவழிக்கிறது கரியரைவிட முக்கியம்னு தெரிஞ்சுது. என் வேலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்போ அது ரெண்டாவது இடத்துக்கு நகர்ந்திருக்கு. இந்த அனுபவமும் நல்லாத் தான் இருக்கு.'' மகனையும் மகளையும் சேர்த்தணைத்து முத்தமிடுபவரின் அடுத்த கனவு, சினிமா.

``நிறைய பிளான்ஸ் இருக்கு. சில வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு... சீக்கிரமே குட் நியூஸ் சொல்றேன்.'' - சஸ்பென்ஸுடன் முடிக்கிறார் காந்தக் கண்ணழகி, கறுப்பு நிறத்தழகி.