சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சுஷ்மிதா எனக்கு ஸ்பெஷல் ஃபிரெண்ட்!

ரன்வீர் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ரன்வீர் சிங்

படங்கள் உதவி: மென்ஸ் ஹெல்த்

பிரபலங்கள் ஒரு பிரிவினர் என்றால் பிரபலங்களால் பிரபலமானவர்கள் இன்னொரு பிரிவினர். அவர்களில் ஒருவர் சுபி சாமுவேல். பாலிவுட் பிரபலங்களின் நேசத்துக்குரியவர். பச்சன் குடும்பம், ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன், ரன்வீர் சிங், சுஷ்மிதா சென், ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்ஸன், லியாண்டர் பயஸ், ராகுல் டிராவிட்... என இவரது கேமரா க்ளிக்கிய செலிப்ரிட்டிகளின் பெயர்களைப் பட்டியலிட இந்தப் பேட்டியில் இடமிருக்காது.
சுபி சாமுவேல்
சுபி சாமுவேல்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டு, மும்பைவாசியாக மாறிவிட்ட சுபி, தீவிர மத ஈடுபாடு கொண்டவரும்கூட. ‘‘அதை மத நம்பிக்கைன்னு சொல்றதைவிட, ஏதோ ஒரு விஷயத்தின் மீதான ஆழமான நம்பிக்கைன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். வாழ்க்கை நிறைய ஏற்ற இறக்கங்கள், சவால்களை உள்ளடக்கியது. ஏதோ ஒரு விஷயத்துல தீவிர நம்பிக்கை இருக்கும்போது, இதுவும் கடந்துபோகும்னு வாழ்க்கையைக் கடக்கப் பழகுவோம் இல்லையா... என் நம்பிக்கை அப்படித்தான் இன்னிவரைக்கும் என்னை வழிநடத்துது’’- அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் சுபி.

சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென்

‘‘சின்ன வயசுலேருந்தே கிரியேட்டிவ்வா யோசிக்கவும் வேலை செய்யவும் பிடிக்கும். மேனேஜ்மென்ட் படிச்சேன். ஆனாலும், ‘அது உன் ஏரியா இல்லை’ன்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. ஒரு நல்ல நாளில் மேனேஜ்மென்ட்டையும் 10 டு 5 வேலையையும் தூக்கிப்போட்டுட்டு எனக்குப் பிடிச்ச கேமராவைக் கையில எடுத்தேன். பிரபல போட்டோகிராபர் ராகேஷ் ஷ்ரேஷ்தாவுக்கு அசிஸ்டன்ட்டா என் கரியரை ஆரம்பிச்சேன்’’ என்பவருக்கு போட்டோகிராபிதான் கனவே தவிர, பிரபலங்களைப் படம்பிடிப்பது கனவிலும் இருக்கவில்லை. எதிர்பாராமல் அமைந்த அப்படியான தொரு போட்டோஷூட் அவரது அடையாளத்தையே மாற்றியது. மாற்றத்துக்குக் காரணமான அந்தப் பிரபலம் ஷாருக் கான்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

‘‘ஷாருக்கின் அந்த போட்டோஷூட்டை வேற ஒரு போட்டோகிராபர்தான் பண்ண வேண்டியது. திடீர்னு அவரால வர முடியலை. லேட் நைட் ஷூட்... அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. அதுவரை சாதாரணமா போட்டோ எடுத்திட்டிருந்த நான், திடீர்னு ஷாருக் முன்னால் நிக்கறேன். ‘என்ன பண்றேன், சுத்தி என்ன நடக்குது’ன்னு புரியாத பதற்றமான மனநிலை. ‘பார்க்காத, பழகாத முகமாச்சே... இவன் நம்மை எப்படி போட்டோ எடுப்பானோ’ன்னு நினைக்காம, ‘நெர்வஸ் ஆகாதீங்க... போட்டோஸ் சரியா வரலைன்னா அது உங்க தப்பில்லை. என் தப்பு’ன்னு சொல்லி முதல் ஷூட்லயே என்னை என்கரேஜ் பண்ணினார். அதுதான் ஷாருக். அந்தப் போட்டோஷூட் பெரிய அளவுல கவனம் பெற்றது. செலிபிரிட்டி போட்டோகிராபரா எனக்கு அஸ்திவாரம் போட்டது...’’ அடக்கமாகச் சொன்னாலும் ஆரம்பக்கால சவால்களைக் கடந்தே இன்றைய நிலையை எட்டியிருக்கிறார் சுபி.

ஷாருக்கான்
ஷாருக்கான்

‘‘புதுசா ஒரு துறைக்குள்ள அடியெடுத்து வைக்கிறவங்க மேல ஆயிரம் கேள்விகள் இருக்கும். அவங்களை ஏத்துக்கிறதுல தயக்கங்கள் இருக்கும். புதுசா ஒரு டாக்டர்கிட்ட போறோம்... அவர் எப்படிப் பார்ப்பாரோ, ட்ரீட்மென்ட் சரியா இருக்குமான்னு யோசிப்போ மில்லையா? அறிமுக போட்டோகிராபரா நானும் இப்படிப்பட்ட சவால்களைச் சந்திச்சிருக்கேன். ஆனா என் வேலை, எனக்காகப் பேசினது. என் திறமையைப் பார்த்து மரியாதை தேடி வந்தது. செலிபிரிட்டி போட்டோகிராபரா ஆன பிறகும் சவால்கள் தொடரும். முதல் முக்கிய சவால், நேரம். பிரபலங்கள் கொடுக்கும் நேரத்துக்குள்ள நாங்க மேஜிக்கை நிகழ்த்திக் காட்டணும். செலிபிரிட்டியா அவங்களுக்குக் கிடைக்கிற அந்தச் சொற்ப நேரத்தை மதிக்கணும், புரிஞ்சுக்கணும்...’’ யதார்த்தம் உணர்த்துபவர், போட்டோகிராபர் என்பதைத் தாண்டி, சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் நட்சத்திரங்களின் நல்ல நண்பர்.

சுபியுடனான 23 வருட நட்பை, சோஷியல் மீடியாவில் போஸ்ட் மற்றும் புகைப்படம் பகிர்ந்து சுஷ்மிதா சென் கொண்டாடியிருந்தது ஓர் உதாரணம்.

எமி ஜாக்ஸன்
எமி ஜாக்ஸன்

‘‘ரொம்ப ஸ்பெஷலான ஃபிரெண்ட்ஷிப் அது. அவங்களோடு வொர்க் பண்ற ஒவ்வொரு ஷூட்டும் அருமையான அனுபவம். ஷாருக்கை போட்டோஷூட் பண்ணுன உடனே சுஷ்மிதாகூட வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. ஒரு பத்திரிகைக்கான ஷூட் அது. அந்த முதல் ஷூட் ரொம்ப பிரமாதமா வந்தது. போட்டோகிராபி பத்தி நிறைய தெரிஞ்சவங்க சுஷ்மிதா. எக்ஸ்பெரிமென்ட் பண்ணத் தயங்க மாட்டாங்க. சினிமா ஆட்களோடு வொர்க் பண்ற எக்ஸ்பீரியன்ஸ் அலாதியானது. எனக்குக் கிடைக்கிற ஒவ்வோர் அனுபவத்தையும் என்ஜாய் பண்றேன்...’’ அப்படியான அலாதி அனுபவங்களையும் பகிர்கிறார் சுபி.

அமிதாப்ஜிகூட ‘கான்ட்டே’ படத்துலதான் முதல்ல வொர்க் பண்ணினேன். அப்புறம் படங்கள், விளம்பரங்கள்னு நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். தான் பெரிய ஆள் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. திறமையை மதிக்கத் தெரிஞ்சவர்.

அமிதாப்ஜியின் மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய், ஹ்ருத்திக் ரோஷன், சுஷாந்த் சிங், ஆயுஷ்மான் குரானா, தீபிகா படுகோன், ஆலியா பட், கங்கனா ரணாவத்னு பாலிவுட்டின் பல பிரபலங்கள் கூடவும் வொர்க் பண்ணியிருக்கேன். கரியரை ஆரம்பிக்கிற புதுசுல செலிப்ரிட்டீஸின் போட்டோகிராபரா ஒருத்தரை ஏத்துக்கிறதுல அவங்களுக்கொரு தயக்கம் இருக்கும். ஒரு கட்டத்துக்குப் பிறகு நம்ம வேலையை, திறமையைப் பார்த்த பிறகு அவங்க நமக்குக் கொடுக்கும் மரியாதை பெருசா இருக்கும்.

சுஷ்மிதா எனக்கு ஸ்பெஷல் ஃபிரெண்ட்!

சினிமா செலிப்ரிட்டீஸுக்கு இணையான சந்தோஷத்தையும் மன நிறைவையும் கொடுக்கறவங்க ஸ்போர்ட்ஸ் பர்சனாலிட்டீஸ். அவங்களை வெச்சு போட்டோஷூட் பண்றதை ஒரு ட்ரீட்டுன்னே சொல்லலாம். ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், ஷிகர் தவான், ரஹானேன்னு ஒவ்வொருத்தரும் அதீத ஒழுக்கமும் தன்னடக்கமும் உள்ளவங்க. பங்ச்சுவாலிட்டியில மிரள வைப்பாங்க. தினமும் கேமராவுக்கு முன்னாடி நிற்கறதால சினிமா நட்சத்திரங்களை போட்டோ ஷூட் பண்றதுதான் ஈஸினு கொஞ்ச நாளைக்கு முன்னாடிவரை ஓர் அபிப்ராயம் இருந்தது. ஆனா, இன்னிக்கு ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிட்டீஸும் நிறைய விளம்பரங்கள்ல நடிக்கிறாங்க. அவங்களுக்கும் எல்லாம் தெரியுது...’’ பாராட்டுப் பத்திரம் வழங்குப வருக்கு வைல்டு லைஃப் போட்டோகிராபி செய்வதிலும் ஆர்வம் உண்டாம்.

‘‘சௌத் பிலிம் இண்டஸ்ட்ரியில சூர்யா, ஐஸ்வர்யா தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் சாரை போட்டோஸ் எடுத்திருக்கேன். விஜய், அஜித், மகேஷ்பாபு, துல்கர் சல்மான்னு நிறைய முகங்கள் பிடிக்குது. வாய்ப்பு வரட்டும்’’ என்பவர், புதிதாக கேமராவைக் கையில் எடுப்போருக்கும் மெசேஜ் சொல்கிறார்.

‘‘உங்கமேல நம்பிக்கை இருந்தா மட்டும் கேமராவைக் கையில எடுங்க. மத்தவங்க உங்களை ‘குட்’னு சொல்லணும்னு நினைக்காதீங்க. நீங்க அப்படி நம்புங்க. நிச்சயம் ஜெயிப்பீங்க...’’