பல ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெற்று சிறப்பாக நடைப்பெற்ற 10-ம் ஆண்டு வீதி விருது விழாவில், இந்த முறை முதல் முறையாக பால் புதுமையினரை சிறப்பிக்கும் விதத்தில் சொல்லரங்கம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
லயோலா கல்லூரியுடன் சேர்ந்து மாற்று ஊடக மையம் ஒவ்வொரு ஆண்டும் வீதி விருது விழாவை நடத்தி வருகிறது. அதில் திருநர் சமூகத்தைச் சேர்ந்த பல கலைஞர்களும், பார்வையாளர்களும் பங்குபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, பால் புதுமையினருக்கான ஒரு சிறப்பு அமர்வை ஏற்பாடு செய்து அதில் தங்கள் சமூகத்திற்காகத் தொடர்ந்து உழைத்து வரும் பல பால் புதுமையினரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தனர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.
லயோலா கல்லூரியின் பேராசிரியரும், இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளருமான காளீஸ்வரன்:
”லயோலா கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் திருநர் சமூகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் இலவசமாக படிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. பாலினம் ரீதியான எந்த பாகுபாடும் வேறுபாடும் இங்கு கிடையாது. இது தவிர, திருநங்கைகள், திருநம்பிகள் பால் புதுமையினரின் ஆண்டாக இந்த 2023 அறிவிக்கப்பட்டது. அதனால் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியான வீதி விழாவில் அவர்களுக்கான சிறப்பு மேடையை உருவாக்கத் திட்டமிட்டோம். அதன்படி, `கலையும் வாழ்வும்' என்ற தலைப்பில் இந்த அமர்வு நடந்தது. கலையால் அவர்களுடைய வாழ்க்கை மேம்பட்டதால், `கலையும் வாழ்வும்' என்ற தலைமையில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம். பொருளாதார விடுதலையை அவர்களுக்கு முதலில் கொடுத்துவிட்டால், உடல் சார்ந்த விடுதலையை அதிக போராட்டங்கள் இன்றி கையாளலாம்.
திருநர் சமூகத்தில் பாலியல் தொழில், பிச்சை கேட்பதில் இருந்து திருநர்கள் விலக வேண்டும் என்ற நினைத்தவர்களால் பல கலைக்குழுக்கள் உருவானது. அந்த கலைக் குழுக்கள், தொடர்ந்து பால் புதுமையினர் இந்த சமூகத்தில் ஒரு கண்ணியமான ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாடுபட்டனர். கலையில் சாதனைபுரிபவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் அங்கு திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும், பல போராட்டங்களுக்குப் பின் கலைமாமணி, கலைமுதுமணி விருதுகளை வென்ற திருநர்களை இந்த நிகழ்ச்சியைத் தலைமைதாங்க அழைத்தோம்” என்றார்.
இந்த சிறப்பு நிகழ்வை ஒருங்கினைத்த கலை இலக்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர் பூங்கொடி மதியரசு, “கலையில் புரட்சி செய்துவரும் பால்புதுமையினரை கண்டுபிடித்து அவர்களை அழைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதிலும், பால் புதுமையினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், சமத்துவத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களையும் இந்த நிகழ்வில் பங்குப் பெறச் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது” என்றார்.
திருநங்கைகளுக்கான நாடகத்தை உருவாக்கிய பேராசிரியர் மங்கை, நாடகம் வாயிலாக பால் சமுத்துவத்தை உருவாக்க வேண்டும் என்று சுமார் 15 வருடங்களாக உழைத்து வரும் ஸ்ரீஜித் சுந்தரம், திரைப்படங்கள் வாயிலாக பால் புதுமையினரின் மேம்பாட்டுக்கான புரட்சியை செய்து வரும் இயக்குனர் மாலினி ஜீவரத்தினம், மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் போது இறக்கும் மக்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, தீண்டாமைக்கு எதிராகவும் பால் புதுமையினருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வரும் சுசீந்திரா போன்றோர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
இவர்களுடன், சமுத்துவ நடை என்ற பெயரில் ப்ரைட் வாக் போலவே, இரவில் பெண்கள், திருநர்களுக்கான பாதுகாப்பை முன்னிலைப்படும் விதமாக சமத்துவ நடையை நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை ஒருங்கினைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, கொரோனா சமயத்தில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட திருநர் சமூகத்திற்காக தன்னுடைய சமூக வளைத்தளம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்த மார்கழி மக்களிசையின் ஒருங்கினைப்பாளர் ஆவல் பிரியங்கா, தமிழ்நாட்டு அரசு சட்டக்கல்லூரியில் படித்த முதல் திருநங்கை, கண்மணியும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
காம்ரேட் கேங்ஸ்டாவின் பாலின சமத்துவப் புரட்சி பாடலுடன் தொடங்கிய இந்த அமர்வில், பொது நூலகத்துறை இயக்குநர், இளம்பகவத், “நாட்டுப்புற கலைஞர்கள் தான், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை கலை வடிவில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர்” என்றார்.
நாடகவியாளர் அழகு ஜெகன் தன்னை பாலினத் தேர்வற்றவர் என்று அறிமுகம் செய்துக் கொண்டு, ”பால் புதுமையினரின் விடுதலைக்கு கலை தான் முக்கிய காரணம். கலை தான் என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கும். அந்த அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்கத்தான் நான் பறை இசைக்கிறேன். பறை என் அடையாளத்தையும் தாண்டி, ஆயுதமாகவும் இருக்கிறது” என்றார்.
வழக்கறிஞர் மதிவதனி, ”இயற்கைக்கு ஜாதி, மதம், பாலினம் கிடையாது. இந்த மண்ணும் காடும் மலையும் அனைவருக்கும் பொதுவானது. ஒருவரின் மானம் அவரது உடல் உறுப்பில் இல்லை. அவருடைய படிப்பிலும், பகுத்தறிவிலும் தான் இருக்கிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்ட புதுகோட்டை கலெக்டர் கவிதா ராமு, இதே போல ஒரு சொல்லரங்கத்தை புதுக்கோட்டையிலும் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.