Published:Updated:

மார்கழியில் மக்களிசை: ``தமிழக அரசின் மேடைகளில் இடம் மறுக்கப்பட்டது" - பா.ரஞ்சித்

மார்கழியில் மக்களிசை 2023

”நான் 31 வருடங்களாக அநீதியை சுமந்தவன். அதனால், அநீதியை சுமந்தவர்களின் வலி எனக்கு தெரியும்” - பேரறிவாளன்

மார்கழியில் மக்களிசை: ``தமிழக அரசின் மேடைகளில் இடம் மறுக்கப்பட்டது" - பா.ரஞ்சித்

”நான் 31 வருடங்களாக அநீதியை சுமந்தவன். அதனால், அநீதியை சுமந்தவர்களின் வலி எனக்கு தெரியும்” - பேரறிவாளன்

Published:Updated:
மார்கழியில் மக்களிசை 2023

மேடைகள் மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கெளரவிக்கும் நிகழ்ச்சியாக மூன்று ஆண்டுகளாக மார்கழியில் மக்கள் இசையை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் `மார்கழியில் மக்களிசை' என்ற பெயரில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மக்கள் இசையை நடத்தி வரும் ரஞ்சித், ”இனி ஒவ்வொரு ஆண்டும் இன்னும் அதிகமான கலைஞர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். இசையுடன் அரசியலையும் கொண்டு சேர்க்கும் இந்த மக்கள் இசை மூலம், சாதியை வேறோடு அழிப்போம். இன்று யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்கள் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியின் மேடையில் ஏறியுள்ளனர். இதுவே இன்று யாரும் யாரையும் தடுத்துவிட முடியாது என்பதற்கான உதாரணமாகவும், ஒடுக்கப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு நம்பிக்கையும் கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.

சுமார் 400க்கும் அதிகமான கலைஞர்கள் பங்குபெற்ற இந்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி, சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் அரங்கில், முதல் நாள் நாட்டுப்புறம் மற்றும் பழங்குடி இசைக் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. இரண்டாம் நாள் முழுக்க கானா பாடல்களும், ராப் இசையிலும் அரங்கமே அதிர, மூன்றாம் நாள் ஒப்பாரி, விடுதலை பாடல்களுடன் நிகழ்ச்சியின் இறுதியாக மூத்த கலைஞர்கள் ஏ.பி. அய்யாவு, கானா புண்ணியர், வேலு ஆசான் ஆகியோருக்கு மக்களிசை மாமணி விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ஆதவன் தீட்சண்யா விருது கொடுத்து கெளரவித்தனர்.

பேரறிவாளனின் முதல் மக்கள் இசை:

இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே மிகவும் ரசித்த பேரறிவாளனும், அவர் தாய் அற்புதம்மாளும், ”இது நாங்க சேர்ந்து பார்க்கும் முதல் மக்கள் இசை திருவிழா. ரொம்ப பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாவும் இருக்கு. ரசிகர்களோட ஆரவாரத்தையும், ஆட்டத்தையும் நாங்களும் ரொம்ப ரசிச்சோம். ஒடுக்கப்பட்டவர்களின் இசையை முதல் முறையாக நேரில் கேட்டு ரசிச்சேன். நான் 31 வருடங்களாக அநீதியை சுமந்தவன். அதனால், அநீதியை சுமந்தவர்களின் வலி எனக்கு தெரியும். 

மார்கழியில் மக்களிசை 2023
மார்கழியில் மக்களிசை 2023

தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்கும் இந்த இசைதான், உண்மையான கலை. கலை என்றைக்குமே இந்த மனிதகுலத்துக்கானது. எப்போதுமே ஒரு பிரச்சனைக்கு இரண்டு தரப்பு இருக்க முடியாது. யார் ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள் பக்கம் நிற்பது மட்டுமே உண்மையான நடுநிலை.

இது தான் தமிழர்களுடைய இசை. அதை மீட்டுருவாக்கம் செய்த தம்பி ரஞ்சித்துக்கு நன்றியும், பாராட்டும்” என்றார். கடைசியாக மேடையில் ரசிகர்களுக்காக ஜெய் பீம் படத்திலிருந்து சூர்யாவின் ’தலை கோதும் இளங்காத்து’ பாடலை பாடினார். 

யுவன் சங்கர் ராஜா: 

இசைதான் நம் எல்லோரையும் இணைக்கிறது. இசைக்கு ஜாதி, நிறம், மொழி என எந்த பாகுபாடும் கிடையாது. இசை மீது பா. ரஞ்சித்திற்கு இருக்கும் காதல் என்னை வியக்க வைக்கிறது. இசைக் கலைஞர்களுக்கு பல வாய்ப்புகள் அளித்து, பல சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிடுகிறார். இந்த கலைஞர்களுக்கு இருக்கும் எனர்ஜியை பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்த கலைஞர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்” என்றார். 

மார்கழியில் மக்களிசை 2023
மார்கழியில் மக்களிசை 2023

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜங்கம், “பலரும், இவ்வளவு பிரமாண்ட மேடையில் இவ்வளவு பணத்தை செலவு செய்து இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டுமா என்று கேட்கிறார்கள். ரஞ்சித் தன்னுடைய பலத்தையும் மீறிய செலவுகள் செய்துதான் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இது பண பலத்தை காட்டுவதற்காக இல்லை. இது ஒரு பொலிடிக்கல் ஸ்டேட்மென்ட். அன்று, தெருக்களில் பாடியவர்கள், இன்று மேடை ஏறி பாடுகிறார்கள் என்பதை இந்த உலகத்திற்கு இன்னும் வெளிச்சமூட்டி காட்டத்தான்” என்றார். 

எஞ்சாய் எஞ்சாமி புகழ், தெருக்குரல் அறிவு, “சாதி, மதம் போன்ற பிரிவினையும், ஒடுக்குமுறையும் ஒருவனின் உரிமை, அடையாளம், கல்வி போன்றவற்றை பாதிப்பதை தாண்டி, அவன் மகிழ்ச்சியை பாதிக்கிறது” என்றார். இவருடைய அம்பாசா குழுவினரின் இசையில் அரங்கமே அதிர்ந்தது. 

மார்கழியில் மக்களிசை 2023
மார்கழியில் மக்களிசை 2023

கடைசியாக ஒப்பாரி இசைக் கலைஞர்களுடன் நடனமாடிய ரஞ்சித், “இந்த ஆண்டு மிகவும் குறுகிய காலத்தில்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். ஆனால், பலரும் முன் வந்து எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். தமிழக அரசால் நடத்தப்படும் பல அரங்குகளிலும் மேடைகளிலும் நமக்கு இடம் மறுக்கப்பட்டது. இருந்தாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய பல நல்லுள்ளங்களால் இந்த நிகழ்ச்சி வெற்றியடைந்துள்ளது" என்ற பா. ரஞ்சித்தின் ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் இந்தாண்டு மார்கழி மக்களிசை திருவிழா இனிதே நிறைவடைந்தது.