
எந்த அகங்காரமும், கவலையும், பெருமிதமும் இல்லாத பெரியவரின் இளைப்பாறல் மிகவும் அழகாக இருந்தது.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
புகைப்படங்கள் மூலம் பல்வகை உணர்வுகளை நமக்குள் கடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் இளம் புகைப்படக் கலைஞர்களிடம், அவர்களது மனதுக்கு நெருக்கமான புகைப்படங்களைக் கேட்டிருந்தோம். கூடவே, அந்தப் புகைப்படம் பற்றிய சுவாரஸ்யத் தகவலையும் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

பிரபு காளிதாஸ்
`` `திராவிடர்களின் வாழ்வியல்' ஆவணத் தொகுப்பின் ஒரு பகுதியாக, திராவிட முகங்களைப் பதிவுசெய்ய `வீதி விருது விழா'வுக்குச் சென்றபோது எடுத்த படம். இந்தப் புகைப்படத்திலிருக்கும் கலைஞரின் உடல்மொழி என்னை வெகுவாகக் கவர்ந்தது. கேட்டவுடனேயே எவ்விதத் தயக்கமுமின்றி புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார். எப்போதும் நான் எடுக்கும் புகைப்படங்களை, அந்தப் படத்திலிருப்பவர்களுக்கு அனுப்புவதற்காக அவர்களது அலைபேசி எண்களை வாங்கிக்கொள்வேன். அன்று அவசரத்தில் அவரிடம் எண் வாங்க மறந்துவிட்டேன். அடுத்த ஆண்டு `வீதி விருது விழா’வில் எப்படியாவது தேடிப்பிடித்து அவரிடம் இந்தப் புகைப்படத்தைக் கொடுத்துவிட வேண்டும்.''

இரா.சசிகுமார்
``மயிலாப்பூரில் நடந்த ஒரு ஈவன்ட்டுக்காக, அட்டையில் ஒரு நாய் வடிவத்தைச் செதுக்கி எடுத்துக்கொண்டிருந்தார்கள். நாய் வடிவத்தில் வெட்டியெடுக்கப்பட்ட அட்டையை எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனால், அங்கே கீழே கிடந்த அட்டையிலும் ஒரு நாய் வடிவம் இருந்தது. எந்த அட்டையிலிருந்து நாய் வடிவம் வந்ததோ, அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். வாழ்க்கையிலும் நமக்கு நடக்கும் நல்லவற்றுக்குக் காரணமாக இருந்த சில விஷயங்களை, நாம் மேலே வந்ததும் புறக்கணித்துவிடுகிறோம். அந்தப் புறக்கணிப்பின் வலியை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது!''

சுரேஷ் பாபு
``ஈரோடு பக்கத்திலிருக்கும் மாம்பாளையம் கிராமத்தில் எடுத்த புகைப்படம் இது. கோவணத்துடன் மரத்தடி நிழலில், கால் மேல் கால் போட்டபடி ரிலாக்ஸாக இளைப்பாறிக்கொண்டிருந்தார் இந்தப் பெரியவர். எந்த அகங்காரமும், கவலையும், பெருமிதமும் இல்லாத பெரியவரின் இளைப்பாறல் மிகவும் அழகாக இருந்தது. இந்தப் புகைப்படத்தை எப்போது பார்த்தாலும், ஒருவித மன அமைதி கிடைக்கும்."

தீரன்
``ரஜினி, கமல்னு பல பிரபலங்களை போட்டோ எடுத்துருக்கேன். ஆனா, நம்ம கூடவே இருக்கறவங்களை எடுத்ததே இல்லையேன்னு தோணுச்சு. அம்மாவைக்கூட எடுத்தது இல்லைன்னு மண்டைல யாரோ குட்டுன மாதிரி இருந்துச்சு. அந்த நேரத்துலதான் `Lumix S1R' என்ற புது அறிமுக கேமரா கைக்குக் கிடைச்சுது. அதுல எடுத்த முதல் க்ளிக், இந்தப் படம். அப்பா எங்களை விட்டுப்போய் ஒரு வருஷம் ஆகியிருக்கும். வெளியில சகஜமாவும், சாதாரணமாவும் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தாலும், அப்பாவோட இழப்புல இருந்து அம்மா வெளிய வரவேயில்லைன்னு இந்தப் படம் எனக்கு சொல்லிக்கிட்டே இருக்கு!''

முரளி
``இந்தப் பசங்ககிட்ட இருக்குற சிரிப்பை, மகிழ்ச்சியை யாராலயும் விலைகொடுத்து வாங்க முடியாது. சிரிப்புங்குறது ஒரு மோசமான தொற்றுநோய். உடனே நமக்கும் ஒட்டிக்கும். இந்தப் பசங்களைப் போட்டோ எடுத்ததும், என் கவலையெல்லாம் மறந்துபோச்சு. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான போட்டோ இது. இதைப் பார்க்கும்போதெல்லாம், திரும்பவும் குழந்தைப்பருவத்துக்குப் போகணும், மனசார சிரிக்கணும்னு தோணும். கவலையை மறக்குற மருந்து, சிரிப்புதான் இல்லையா?''

நவீன்ராஜ்
``சென்னை பாரிஸ் கார்னர்ல எல்லாரும் ஜாலியாக ஹோலி கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க. எங்க பார்த்தாலும் கூட்டமும், கலர்ப் பொடி புகையும்தான். அந்தப் புகை மூட்டத்திலிருந்து ஒரு பொண்ணு வண்டியில வந்தாங்க. கேமராவை வெச்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்த என்கிட்ட, `போட்டோ எடுக்குறதுன்னா எடுத்துக்கோங்க'னு சொன்னாங்க. போட்டோ எடுத்துட்டு அவங்ககிட்ட காட்டுனப்போ, முகத்துல சிரிப்பைப் பார்க்கணுமே... செம ஹேப்பியா பாராட்டுனாங்க. பண்டிகையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துற படம். எனக்கும் மனநிறைவா இருந்துச்சு!’’

மஹி தங்கம்
``தஞ்சாவூரிலிருந்து 12 கி.மீ தூரத்திலிருக்கும் ஆலங்குடி நெடார் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோயில். 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது தஞ்சை பெரிய கோயிலுக்கு முன்பாகவே இந்தக் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ராஜராஜ சோழன் இங்கு வந்து வழிபட்டிருப்பதாகவும் வரலாறு சொல்கிறது. எத்தனையோ கோயில்களைப் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அங்கெல்லாம் கிடைக்காத மன நிம்மதியும், அமைதியும் இங்கு எனக்குக் கிடைத்தன. இந்தக் கோயில் எனக்குள் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியது. இங்கு எடுத்த அனைத்துப் புகைப்படங்களுமே என் மனதுக்கு நெருக்கமானவை.''

அசோக் குமார்
``விநாயகர் சதுர்த்தி முடிஞ்சு சிலைகளைக் கரைக்குற நிகழ்வு நடந்தப்போ சென்னை, பட்டினப்பாக்கத்துல எடுத்த படம். எப்பவும் இந்த நிகழ்வுல சிலைகள்ல இருந்து உடைந்த பாகங்களை சிறுவர்கள் எடுத்து விளையாடுவாங்க. அது மாதிரிதான் அன்னைக்கு ஒரு பையன் விநாயகர் தலையை எடுத்து மாஸ்க் மாதிரி வெச்சுக்கிட்டான். எப்பவுமே போட்டோல ஃபிரேமுக்குள்ள இல்லாதவங்க கை வந்தா எடுக்கச் சொல்லுவோம். ஆனா, பக்கத்துல இருந்த என் நண்பர் கையை நீட்டி அந்தப் பையன்கிட்ட ஏதோ சொல்லிக்கிட்டிருந்தார். அது கேமரா வழியா பார்க்க நல்லாயிருந்ததால அப்படியே `க்ளிக்’ பண்ணிட்டேன். அதுதான் இந்தப் படத்தை நார்மல் போர்ட்ரெய்ட்டா இல்லாம டிராமாட்டிக்கா மாத்தியிருக்கு!''