
ஷூட்டிங் ஸ்பாட்ல சுட்டியாதான் இருந்தான் ஆர்னவ். ‘படத்தில் நான்தான் மெயின் கேரக்டர். நீங்களும், அப்பாவும் சப்போர்ட்டிங் கேரக்டர்’னு சொல்லிச் சிரிப்பான்.
தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், பேரன் ஆர்னவ் என மூன்று தலைமுறை நடித்திருக்கும் திரைப்படம் ‘Oh my dog’, அமேசான் பிரைமில் ஏப்ரல் 21 அன்று நேரடி ரிலீஸ். பேரனின் முதல் படம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகும் சந்தோஷத்தில் விஜயகுமார் இருக்கும் அதே வருடம் அவர் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தும் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. ஆகமொத்தம் விஜயகுமார் வீடே இரட்டிப்பு சந்தோஷத்தில்!
“படத்தோட இயக்குநர் சரோவ் சண்முகம் கதை சொன்னப்பவே ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. ஆர்னவ் படத்துக்கு சரியாகப் பொருந்திப்போவான்னு தோணுச்சு. ஏன்னா, இவன் ரியல் லைப் கேரக்டர் இப்படித்தான் இருக்கும். நிறைய சுட்டித்தனங்கள் ஆர்னவ் கிட்ட இருக்கும். நாய்க்குட்டி மேல ரொம்பப் பாசம் வெச்சிருப்பான். பிளான் பண்ணினாக்கூட இப்படிப் பண்ண முடியாது. தாத்தா, அப்பா மற்றும் மகன் கேரக்டர் ரியல் லைஃப்ல இருந்து கிடைச்சிருக்குறது கடவுளின் ஆசீர்வாதம்” என அருண் விஜய் நெகிழ, தாத்தா விஜயகுமார் தொடர்ந்தார்.

“பையன் அருண் கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். ஆனா, பேரன் கூட நடிக்கப் போறேன்னு கேள்விப்பட்டவுடன் ரொம்பவே சந்தோஷமாகிடுச்சு” என்று நெகிழ்கிறார்.
‘‘ஜெயம் ரவி அங்கிள் படங்கள் பிடிக்கும். அவரோட பையன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்ததுல இருந்தே எனக்கும் சினிமாவில நடிக்கணும்னு தோணுச்சு. அப்பாகிட்ட ‘எனக்குக் கதை கேளுங்களேன்’னு சொன்னேன். அப்பா ஆச்சரியமாகிட்டார். அப்பா எவ்வளவு பிஸியா இருந்தாலும் எனக்கு டைம் ஒதுக்குவார். இப்போ எனக்கு அப்பா கதை கேட்டிருக்கார். ரொம்ப ஹேப்பியா இருக்கு. என்னோட பர்ஸ்ட் ஷாட் பண்றப்போ கொஞ்சம் பயம் இருந்தது. டைரக்டர் அங்கிள் மற்றும் ஷாட்ல கூட இருந்தவங்க எல்லாம் என்கரேஜ் பண்ணுனாங்க. அப்புறம் பயப்படாம நடிக்க ஆரம்பிச்சிட்டேன்’’ என்று துள்ளிக் குதிக்கிறார் ஆர்னவ்.

“சூர்யாதான் ஆர்னவ் போட்டோ பார்த்துட்டு செலக்ட் பண்ணியிருக்கார். தயாரிப்பாளரா அவர் ஓகே சொன்னதுக்கு அப்புறம்தான் சரோவ் எங்களை மீட் பண்ண வந்தார். சூர்யா சாருக்கு பெரிய நன்றி சொல்லணும்.
ஷூட்டிங் ஸ்பாட்ல நடிக்கும்போதே ஆர்னவுக்கு ஆன்லைன் கிளாஸ் போயிட்டு இருக்கும். என் மனைவி கூடவே இருந்து படிப்பு கெடாமப் பார்த்துக்கிட்டாங்க. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி, கேமரா முன்னால எப்படி நிக்கணும். மத்த ஆர்ட்டிஸ்ட் நடிக்குறப்போ நாம எந்த மாதிரியான ரியாக்ஷன் கொடுக்கணும்னு எடுத்துச்சொன்னேன்” என்று அருண் விஜய் சொல்ல, தாத்தா விஜயகுமார் தொடர்ந்தார்.

“ஷூட்டிங் ஸ்பாட்ல சுட்டியாதான் இருந்தான் ஆர்னவ். ‘படத்தில் நான்தான் மெயின் கேரக்டர். நீங்களும், அப்பாவும் சப்போர்ட்டிங் கேரக்டர்’னு சொல்லிச் சிரிப்பான். உண்மையா படத்தில் மெயின் ரோல் பேரனுக்குத்தான். படத்தோட ஹீரோ ஆர்னவ் மற்றும் நாய்க்குட்டிகள்தான்” என்று அவர் சொல்ல, ஆமோதித்து சிரிக்கும் அருண்விஜய், “அமேசான் ப்ரைமில் ரிலீஸாகி உலகம் முழுக்க ரசிகர்களைச் சென்றடைவதில் எங்களுக் கெல்லாம் சந்தோஷம். என்னோட முதல் படம் ரிலீசானப்போ எந்த மாதிரி யான உணர்வு இருந்ததோ, அதே உணர்வுதான் என் மகன் படத்தைப் பெரிய திரையில் பார்க்கும்போதும் இருந்தது. பார்வையற்ற நாய்க்கும் ஒரு குட்டிப்பையனுக்குமான உறவும் நெகிழ்வும்தான் படம். கண்டிப்பா அந்த உலகத்தில் நீங்க கரைஞ்சுபோயிடுவீங்க” என்ற அருண் விஜயிடம், “அப்போ இனிமே ஆர்னவ் முழுநேர நடிகர்தானா?” என்றதும் அவசரமாக மறுத்தார்.

“நோ நோ. மூன்றுபேரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புங்கிறதால்தான் ஆர்னவ்வை நடிக்கவெச்சோம். இனிமே படிப்புலதான் அவர் கவனம் செலுத்தப்போறார். வளர்ந்தபிறகு நடிக்கப் பிடிச்சதுன்னா அப்போ வரட்டும். அதுவரைக்கும் ஆர்னவுக்குப் படிப்புதான்” என்று அருண்விஜய் சொல்ல, “தீர்ப்பை மாத்திச் சொல்லமாட்டேன்” என்று விஜயகுமார் டைமிங் கமென்ட் அடிக்க, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உற்சாகம் பற்றிக்கொள்கிறது.