Published:Updated:

சினம் விமர்சனம்: இது படமல்ல, பாடம் - ஆனா, யாருக்கு?!

சினம் விமர்சனம்
News
சினம் விமர்சனம்

அரசியல் புரிதல், படைப்புகளுக்கு இருக்கவேண்டிய சமூக பொறுப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலுமே படம் எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமலே எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மணி நேரப் படத்தில் அத்தனை லாஜிக் மீறல்கள்.

Published:Updated:

சினம் விமர்சனம்: இது படமல்ல, பாடம் - ஆனா, யாருக்கு?!

அரசியல் புரிதல், படைப்புகளுக்கு இருக்கவேண்டிய சமூக பொறுப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலுமே படம் எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமலே எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மணி நேரப் படத்தில் அத்தனை லாஜிக் மீறல்கள்.

சினம் விமர்சனம்
News
சினம் விமர்சனம்
தன் மனைவிக்கு நேரும் ஒரு பெரும் துயரத்தைக் கணவன் எப்படி தன் சினத்தால் போக்குகிறார் என்பதே 'சினம்' படத்தின் கதை.

காவல்துறையில் உதவி ஆய்வாளரான அருண் விஜய் கடும் கோபக்காரர். காதல் திருமணத்தால் மனைவியின் வீட்டில் சண்டை; அதீத நேர்மையாலும், கோபத்தாலும் தான் பணிபுரியும் காவல் நிலையத்தின் ஆய்வாளருடன் சண்டை என க்ளீன் ஷேவ், ரஃப் & டஃப் நபராக அருண் விஜய். யாராக இருந்தாலும் அடித்துவிட்டுத்தான் கேள்வியே கேட்பார். அவர் எவ்வளவு நேர்மையும், பெருங்கோபமும், காதலும் கொண்டவர் என்பதைச் சொல்லி முடிக்கவும், அவர் மனைவிக்குப் பெரும் துயரம் நடக்கவும் முதல் பாதி முடிந்துவிடுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில், இந்திய சினிமாவில் வந்த காவல்துறை அதிகாரிகளுக்கு என்னென்ன பிரச்னைகள், சவால்கள் இருக்குமோ அதெல்லாம் வைத்தே படத்தின் முதல் பாதியை எழுதிவிட முடியும். இரண்டாம் பாதியில் நம்மைப் போலவே அவரும், யார் இந்தப் பாதக காரியத்தைச் செய்திருப்பார்கள் என யோசித்து யோசித்து, கடைசியில் நம்மையும் சோதித்து முடிப்பதுதான் 'சினம்'.

சினம் விமர்சனம்
சினம் விமர்சனம்

25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார் அருண் விஜய் என்கிற ஸ்லைடுடன் ஆரம்பிக்கிறது 'சினம்'. கிட்டத்தட்ட உடல்வாகு, ஃபிட்னெஸ் என பக்காவாக இன்றுவரை உடலை மெயின்டெய்ன் செய்கிறார். ஒரு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான சினிமாவில்கூட அதற்குத் தேவையான காட்சிகளைத் திரைக்கதையாக்காமல் முதல் பாதி முழுக்கவே சம்பந்தமில்லாத பல விஷயங்களை நமக்குக் காட்டி போங்கு செய்திருக்கிறார் இயக்குநர் GNR.குமரவேல்.

ஒரு கட்டத்துக்கு மேல், நாமும் யார் கொலையாளி என்பதை யூகித்துவிட அதன் பின்னரும், அது எப்படி நடந்தது தெரியுமா என்பதை விளக்கமாக எடுத்து, அதன் பின் அதற்குரிய 'தண்டனை'யும் வழங்கப்படுகிறது. உண்மையில் வெறுமனே கமர்ஷியல் சினிமா என்னும் போர்வையில் ஐந்து பாடல்கள், ஆங்காங்கே சண்டைக் காட்சிகள், காமெடி டிராக் என இருக்கும் படங்களைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால், சமூகத்துக்கான அறத்தைப் போதிக்கிறேன் என்னும் பெயரில் வரும் தவறான சித்திரிப்புகளும், காட்சிகளும்தான் ஆபத்தான விளைவுகளைக் கொடுக்கும். இதுதான் நிகழ்ந்திருக்கும் என்பதை வசனமாகச் சொல்லிய பின்னரும், அதைக் காட்சிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் பாலியல் காட்சிகளை எடுப்பது எல்லாவற்றையும் விட மோசமானது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிய வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தினை இவை மட்டுப்படுத்தவே செய்யும்.

சினம் விமர்சனம்
சினம் விமர்சனம்

இன்னும் எத்தனை நாள்களுக்கு ஆட்டோ ஓட்டுபவர்கள், தாடி வைத்திருப்பவர்கள், குப்பத்தில் வசிப்பவர்கள் மட்டுமே குற்றவாளிகள் எனக் காட்டுவார்கள் எனத் தெரியவில்லை. அதிலும் அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், அவர்கள் வசிக்கும் பகுதியிலிருக்கும் அனைவரும் அவர்களைப் பாதுகாப்பார்கள் என்பதையும் சொல்கிறது இந்தப் படம். அதே போல், ஒருவன் மைனராக இருக்கும்போது பாலியல் குற்றம் செய்தால், அவன் பெரியவன் ஆன பின்பும் அதையேதான் இந்தச் சமூகத்தில் செய்யப்போகிறான் எனக் காட்டுவதும் முதிர்ச்சியின்மை, சமூகத்தின் மீதான அக்கறையின்மை ஆகியவற்றின் வெளிப்பாடே! படத்தின் ஒரே ஆறுதல், வட இந்தியத் தொழிலாளி என வரும் நபரை 'வழக்கம்போல' மோசமான நபராகச் சித்திரிக்காதது மட்டும்தான்.

அரசியல் புரிதல், படைப்புகளுக்கு இருக்கவேண்டிய சமூக பொறுப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலுமே படம் எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமலே எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மணி நேரப் படத்தில் அத்தனை லாஜிக் மீறல்கள். சாதா ஆட்டோ வேகமாகச் செல்லுமா அல்லது ஷேர் ஆட்டோ வேகமாகச் செல்லுமா என்பதை எல்லாம் ஓட்டிக் காட்டி நம்மை அசரடிக்கும் காட்சி ஒரு சோறு பதம். அதிலும் இப்படியான ஒரு சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அதைக் குடும்பத்தில் இருக்கும் யாரும் கவனிக்கவில்லை என்பதெல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயங்கள்.

சினம் விமர்சனம்
சினம் விமர்சனம்

இவை எல்லாவற்றையும் கடந்து, இப்படியானதொரு பிரச்னையில்கூட எல்லா அரசு அதிகாரிகளும், அருண் விஜய்க்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதற்கு எந்த அழுத்தமான காரணமும் படத்தில் இல்லை. இல்லை, இனி சமூகத்தில் பெண்களுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் நடந்தால், அந்தப் பெண் காவல் துறையில் பணியாற்றும் நபருக்குச் சொந்தமாய் இருந்து, அவரே அந்த வழக்கை விசாரிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும் என இயக்குநர் சொல்ல வருகிறார் போலும்!

சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து வர வேண்டிய `சினம்', மாறாக படத்தின் அபத்தமான காட்சிகளாலும், சித்திரிப்புகளாலும் மட்டுமே வருகிறது.