Published:Updated:

ட்ரிகர் விமர்சனம்: அதர்வாவின் ஆக்ஷன் த்ரில்லர்; தெறிக்க விடுகிறதா, புல்லட் இல்லாமல் புஸ்ஸாகிறதா?

ட்ரிகர் விமர்சனம்
News
ட்ரிகர் விமர்சனம்

சொல்லப்படாத போலீஸ் டிபார்ட்மென்ட்டின் பிரிவைக் காட்ட வேண்டும் என்பதால் பாரத விலாஸ் எனும் மரண விலாஸ் ஹோட்டலைக் களமாகக் காட்டியிருப்பது புத்திசாலித்தனம். ஆனால்...

Published:Updated:

ட்ரிகர் விமர்சனம்: அதர்வாவின் ஆக்ஷன் த்ரில்லர்; தெறிக்க விடுகிறதா, புல்லட் இல்லாமல் புஸ்ஸாகிறதா?

சொல்லப்படாத போலீஸ் டிபார்ட்மென்ட்டின் பிரிவைக் காட்ட வேண்டும் என்பதால் பாரத விலாஸ் எனும் மரண விலாஸ் ஹோட்டலைக் களமாகக் காட்டியிருப்பது புத்திசாலித்தனம். ஆனால்...

ட்ரிகர் விமர்சனம்
News
ட்ரிகர் விமர்சனம்
நேர்மையான போலீஸ்கார அப்பா மீது விழுந்த களங்கத்தை மகன் வளர்ந்து, அதே போலீஸ் வேலையில் சேர்ந்து போக்கினால், அது `ட்ரிகர்'!

காவல்துறையைச் சேர்ந்த அதர்வா மனசாட்சிப்படி வேலை பார்க்கும் நேர்மையான போலீஸ். அப்படி ஒருமுறை அவர் செய்த வேலைக்குத் தண்டனையாக, 'Internal Affairs' எனப்படும் காவல் நிலையங்களையே கண்காணிக்கும் உள்ளடி அண்டர்கவர் வேலையை ஒப்படைக்கிறார் போலீஸ் கமிஷனர் அழகம்பெருமாள். வெளியே பாடாவதி ரெஸ்ட்டாரண்ட் போல இருக்குமிடத்தில் ஏற்கெனவே அங்கிருக்கும் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்பு தாசன், அறந்தாங்கி நிஷா கூட்டணியில் ஐக்கியமாகிறார் அதர்வா.

அடையாளம் மறைத்து, சாதாரண ஆட்களாக போலீஸ் வேலை பார்க்கும் நான்கு பேருடன் அதர்வா இணைந்தாலும், அவரால் ஆக்டிவ் போலீஸாக ஃபீல்டில் இறங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி ஒருமுறை ஒரு பெண் கடத்தல் கேஸை வெளியே போய் டீல் செய்யும்போது, பின்னணியில் குழந்தை கடத்தல் நெட்வொர்க் இருக்கிறது என்பதை நூல் பிடித்துப்போய் தன் அண்டர்கவர் டீமின் உதவியோடு கண்டுபிடிக்கிறார்.

ட்ரிகர் விமர்சனம்
ட்ரிகர் விமர்சனம்

கூடவே இலவச இணைப்பாக இந்த ஒட்டுமொத்த 'சைல்ட் ட்ராபிக்' நெட்வொர்க்கின் பின்னணியில் இருக்கும் மைக்கேல் என்ற டானைக் கண்டுபிடிக்கிறார். மைக்கேலுக்கோ தன்னை டீலில் விடும் அதர்வாவை நேருக்கு நேராகச் சந்தித்துப் பழிதீர்ப்பதே லட்சியம். தன் தந்தை அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டதற்கும், மைக்கேல்தான் காரணம் என்பதால் சில பல சேஸிங் காட்சிகளோடு கூண்டோடு எப்படி வில்லன் கூட்டத்தை அதர்வா அழிக்கிறார் என்பதே படத்தின் கதை.

அதர்வாவுக்கு ஆக்‌ஷன் ரோல் என்றால் இருட்டுக்கடை அல்வா போல! செம ஃபிட்டாக இருப்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயின் என்றாலும் படத்தில் டூயட்டோ வேறு லவ் எபிசோடோ இல்லை. கதைக்குத் தேவையான அளவு சிம்பிளாய் வந்து போகிறார்.

படத்தில் கவனம் ஈர்த்திருக்க வேண்டிய பவர்ஃபுல் ரோலான மைக்கேல் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ஷெட்டி. கொஞ்சம் 'மாஸ்டர்' விஜய் சேதுபதி, கொஞ்சம் 'பகவதி' ஆசிஷ் வித்யார்த்தி கலந்த கலவையாக இருக்கிறார். இவர் போடும் திட்டங்கள் ஓகே ரகம் என்றாலும் வில்லத்தனங்கள் பயப்பட வைக்காததால் பல காட்சிகளில் வெறும் பன்ச் பேசும் வில்லனாக மட்டும் வருகிறார்.

ட்ரிகர் விமர்சனம்
ட்ரிகர் விமர்சனம்

சொல்லப்படாத போலீஸ் டிபார்ட்மென்ட்டின் பிரிவைக் காட்ட வேண்டும் என்பதால் பாரத விலாஸ் எனும் மரண விலாஸ் ஹோட்டலைக் களமாகக் காட்டியிருப்பது புத்திசாலித்தனம். ஆனால், 4 பேர் இருந்தும், அவர்களை வைத்து சுவாரஸ்யமான டார்க் ஹியூமர் எதுவும் பண்ணாமல், சீரியஸ் காட்சிகளுக்கே அவர்களைப் பயன்படுத்தியிருப்பது சின்ன ஏமாற்றம். முனீஸ்காந்த், அன்புதாசன், நிஷாவை இன்னமும் கூட பயன்படுத்தியிருக்கலாம். படத்தில் சின்னி ஜெயந்த் வரும் காட்சிகள் குறைவென்றாலும் நிறைவான நடிப்பை வழங்கி, தான் சீனியர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அதர்வாவின் அப்பாவாக அருண் பாண்டியன். 1993-ல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் ஞாபகத்தைத் தொலைத்துவிட்டு கண்களால் எதையோ தேடுபவராக நன்கு நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் அவரது நடிப்பு அருமை. அவரது மனைவியாக நீண்ட நாள்களுக்குப்பிறகு சீதா!

படத்தின் ஆகப்பெரும் ப்ளஸ் ஒளிப்பதிவுதான். திலீப் சுப்பராயனோடு சேர்ந்து ஆக்‌ஷன் காட்சிகளில் 360° சுழன்று நம்மைக் கட்டிப் போடுகிறது கிருஷ்ணன் வசந்த்தின் கேமரா. பாடல்கள் ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஜிப்ரான், ஒரு ரேஸி ஆக்‌ஷன் த்ரில்லருக்கு உண்டான பதட்டத்தை நமக்குக் கடத்துகிறார். எடிட்டிங்கில் முடிந்தவரைத் தொய்வில்லாமல் கதை சொல்ல மெனக்கெட்டிருக்கிறார் ரூபன்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஓரிடத்தில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு, ஒட்டுமொத்த சிட்டி போலீஸ் ஸ்டேஷன்களை வாட்ச் செய்வது வரை ஓ.கே. ஆனால், போகிறபோக்கில் கார், ஹைவேஸில் ஓடிக் கொண்டிருக்கும் லாரி வரை ஹேக் செய்து அடுத்த நிமிடம் அதர்வா அங்குப்போய் நிற்பதெல்லாம் பண்டல் பண்டலான பூச்சுற்றல். நாம் படம் பார்க்கிறோமா பாப்கார்ன் சாப்பிடுகிறோமா என்றுகூட போலீஸ் கண்டுபிடிக்கும் என்ற பயமே வந்துவிட்டது. தமிழ் சினிமாவை ஹேக்கர்களிடமிருந்து காப்பது நலம்.

ட்ரிகர் விமர்சனம்
ட்ரிகர் விமர்சனம்

துப்பாக்கிச் சண்டையில் ஹீரோ வெச்ச குறி மட்டும் எப்போதும் தப்பாது. எதிரிகள் அத்தனை துப்பாக்கிகள் வைத்திருந்தாலும் அந்தக் கால தமிழ் சினிமா அடியாட்கள் போல வரிசையில் வந்து இவரிடம் குண்டடிபட்டு விழுகிறார்கள். மற்றபடி இன்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசம்!

குழந்தைக் கடத்தல் நெட்வொர்க்கை வேறொரு கோணத்தில் அணுகியிருந்த விதத்திற்காகவும், Parallel crime, Deviation crime போன்ற விஷயங்களைப் பதிவு செய்ததற்காகவும், அதர்வாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் இந்த 'ட்ரிகரை' ஒருமுறை தாராளமாக அழுத்தலாம்.