2009-ம் ஆண்டு வெளியான `அவதார்' அதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பங்களை சினிமாவுக்குள் புகுத்தியது. மோஷன் கேப்சரிங், 3டி தொழில்நுட்பம் என இரண்டிலுமே உச்சத்தைத் தொட்ட படைப்பாக, பட்டி தொட்டி எங்கும் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்பமும் பல மடங்கு மெருகேறிவிட்ட காலத்தில், தற்போது அதன் இரண்டாம் பாகமான `அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தை எடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்த முறையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வெற்றி பெறுகிறாரா?

'அவதார்' புரொக்ராம் மூலமாக பண்டோராவின் நவி இனத்தவராக மாறிய ஜேக் சல்லி, தன் மனித உடலை விடுத்து, அந்த மக்களில் ஒருவராகவே மாறுவதோடு முதல் பாகம் முடிந்திருக்கும். அதேபோல், நவிக்கு ஆதரவாகவும், மனிதர்களுக்கு எதிராகவும் ஒரு நிலைப்பாட்டை அவர் எடுப்பதாகக் காட்டப்பட்டிருக்கும்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதையில், ஜேக் சல்லி, நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் ஒமட்டிகாயா (Omaticaya) மக்களின் தலைவனாக மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையை வாழ்கிறார். கிரேஸின் அவதார் உருவத்துக்குப் பிறந்த மகளான கிரியையும் தத்தெடுத்து வளர்க்கிறது இந்தக் குடும்பம். அதேபோல் பண்டோராவில் பிறந்த மனிதக் குழந்தையான ஸ்பைடரும் இவர்களுடன் சேர்ந்தே வளர்கிறான்.

ஒரு கட்டத்தில் தோற்று வெளியேறிய மனிதர்கள் மீண்டும் பண்டோராவைப் பிடிக்க அதீத வீரியத்துடனும், நவீனத் தொழில்நுட்பத்துடனும் திரும்பி வர, கூடவே இறந்துவிட்ட கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு அவதார் ஒன்றும் ஜேக் சல்லியைப் பழிவாங்க வர, பிரச்னை ஆரம்பமாகிறது. தன் மக்களுக்காக தன் இடத்தைவிட்டு இடம்பெயரும் சல்லி குடும்பம், அதன் பிறகு சந்திக்கும் பிரச்னைகளும், ஆபத்துகளும் என்னென்ன, அதிலிருந்து சல்லி எப்படி அவர்களைக் காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் கதை.
Performance Capturing தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'அவதார்' கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். குறிப்பாக, நீருக்குள் நடக்கும் காட்சிகளில் உடல்மொழி துல்லியமாக அமைய, நடிகர்களை நீருக்குள்ளேயே நடிக்கவைத்து அந்த நடிப்பை படமாக மாற்றியிருக்கிறார். அப்படியான மாற்றத்தில் படு யதார்த்தமாக வந்திருக்கிறது வில்லன் கர்னல் மைல்ஸின் அவதார் பாத்திரம். அவரின் உடல்மொழி, குரல், எண்ணவோட்டங்கள் என அனைத்துமே அசலான நடிகருக்கு ஒப்பாக இதில் பிரதிபலிக்கப்பட்டிருப்பது டெக்னாலஜி தொட்டிருக்கும் புதிய உச்சம் எனலாம். மற்ற நடிகர்களும் அவர்களின் அவதார்களிலும் குறை ஏதுமில்லை.

சிறுவர், சிறுமியர் பாத்திரங்களுக்கும் சிறப்பான முறையில் உயிர் கொடுத்திருக்கிறது தொழில்நுட்பம். ஆனால், இவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டுக் கவனிக்க வைக்கிறான் ஸ்பைடராக வரும் ஜேக் சாம்பியன். சுற்றிலும் அவதார் உருவங்களாக இருக்க, ஒரே ஒரு மனித உருவமாக அதற்கு ஏற்றவாறு நடிப்பது சவாலான காரியம். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் இந்த டீனேஜ் நடிகர். கேட் வின்ஸ்லெட் படத்தில் இருக்கிறார். ஆனால், அவர் பண்டோரா இனத்தவராக மட்டுமே வருவதால், அவரின் பெயரை கிரெடிட்ஸில் பார்த்த பிறகுதான் அவர் எந்தப் பாத்திரமாக வருகிறார் என்பதே புலப்படுகிறது.
பண்டோராவின் மற்றொரு பரிமாணமான ஆழ்கடல் அதிசயங்களைக் காட்டுகிறது இந்தப் படம். முதல் பாகத்தில் காட்டில் வாழும் இனத்தவரைப் பின்தொடர்ந்த கதை, இதில் கடலும் கடல் சார்ந்த இனத்தவரின் வாழ்க்கையைச் சொல்கிறது.
அவர்களுக்கு என ஒரு மாறுபட்ட கலாசாரம், வித்தியாசமான கடல் உயிரினங்கள், உடல் ரீதியாகவே மாறுபட்டிருக்கும் அந்த இன மக்கள் என ஆச்சர்யமூட்டும் வகையில் டீடெய்லிங் செய்திருக்கிறது ஜேம்ஸ் கேமரூன் தலைமையிலான படக்குழு. அதிலும், பத்து வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கதை என்பதால் மனிதர்களின் ஆயுதங்களும் பல மடங்கு வீரியம் மிக்கதாகவும் நவீனமாகவும் மாறியிருக்கின்றன. அதற்காக உழைத்திருக்கும் தயாரிப்பு வடிவமைப்புக் குழுவின் கரம் பற்றிக் குலுக்கலாம்.

`அவதார்' முதல் பாகம் வெளியானபோதே வைக்கப்பட்ட ஒரு விமர்சனம், தொழில்நுட்ப பிரமாண்டம் என்பதைத் தாண்டி அதன் கதை கோலிவுட் டு ஹாலிவுட் வரை பல வுட்களில் ஏற்கெனவே அடித்துத் துவைக்கப்பட்ட ஒன்று என்பதுதான். அதே விமர்சனத்தை இந்தப் பாகமும் தக்க வைத்துக் கொள்கிறது.
எண்ணற்ற கதாபாத்திரங்கள், ஆனால் அவை அறிமுகமாகும்போதே அவர்களின் கதாபாத்திர வரைவு எப்படி இருக்கப்போகிறது, அவர்களின் முடிவு எப்படியிருக்கும் என்பதுவரை யூகிக்கும் அளவுக்குத் திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. 'குடும்பம் முக்கியம்' போன்ற சென்டிமென்ட் காட்சிகள் இப்படியான ஒரு கதைக்களத்துக்கு அவசியம்தான் என்றாலும் அதைப் படமாக்கிய விதம் பார்த்துப் பழகிய டெம்ப்ளேட் வகையறாதான் என்பது மைனஸ். ஸ்பைடரின் அம்மா யார், கிரியின் அப்பா யார் போன்ற கேள்விகளுக்கு இந்தப் பாகத்தில் விடை இல்லை.
மறைந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னரின் வழியைப் பின்பற்றி, பண்டோரா உலகுக்கான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் சைமன் ஃப்ராங்ளென். ரசஸ் கார்ப்பென்ட்டரின் ஒளிப்பதிவு மனிதர்களும் நவிக்களும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகளைத் திறம்பட கையாண்டிருக்கிறது.
கிரெடிட்ஸில் கதைக்கும் சரி, திரைக்கதைக்கும் சரி ஜேம்ஸ் கேமரூன் உட்பட 4, 5 பெயர்கள் இடம்பெறுகின்றன. அப்படியிருந்தும் வழக்கமான பாணியிலேயே படம் நகர்வது ஏமாற்றமே! அதிலும் படம் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக ஓடுகிறது என்னும்போது பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் திரைக்கதை அமையாமல் போனது பலவீனமே.

குறைகள் இருப்பினும், ஜேம்ஸ் கேமரூன் தனியொருவராகக் கட்டமைத்திருக்கும் உலகமும் அதன் கதாபாத்திரங்களும் இதில் இன்னமும் விரிவடைந்திருக்கின்றன. தான் கற்பனை செய்ததை எந்தவித சமரசமின்றி தொழில்நுட்ப ரீதியாகப் பல பாய்ச்சல்கள் நிகழ்த்திச் சாத்தியப்படுத்தியும் இருக்கிறார் கேமரூன்.
ஒரு சில படங்கள்தான் திரையரங்கில் பார்ப்பதே ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும். அந்த லிஸ்ட்டில் இந்த `அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'க்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு!