உலக அளவில் பல `ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்' (Split Screen) திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ஆசியாவின் முதல் 'ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்' திரைப்படம் என்ற பெருமையைத் தாங்கிய புது முயற்சியாக வெளிவந்திருக்கிறது `பிகினிங்' (Beginning). இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற்றதா, இல்லை, பார்வையாளர்களுக்கு அயற்சியாக மட்டுமே முடிந்ததா?
ஒரே திரையில் இரண்டு கதைகள் ஓடுகின்றன. இடதுபுறம், மன வளர்ச்சி குன்றிய இளைஞனான வினோத் கிஷனும் அவரது அம்மாவான ரோகிணியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். தன் மகனுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வைத்துவிட்டு, அவரை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார் அம்மா ரோகிணி. டிவியில் வரும் கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டு வீட்டிற்குள் தனியாக இருக்கிறார் வினோத்.

வலதுபுறம், இளம்பெண் கௌரி ஜி.கிஷனை மயக்க மருந்துச் செலுத்தி, தனது நண்பர்கள் இரண்டு பேரின் உதவியுடன் கடத்தி வந்து ஒரு அறையில் பூட்டி வைக்கிறார் சச்சின். மயக்கம் தெளியும் கௌரிக்குக் கையில் ஒரு சாதாரண பட்டன் போன் கிடைக்க, அதை வைத்து அவர் அங்கிருந்து தப்பித்தாரா, கடத்திய சச்சின் யார், வினோத்தின் கதையும் கௌரியின் கதையும் எப்படி இணைகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு, புதுமையான கதை சொல்லலின் வழியாக விடை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜெகன் விஜயா.
இடதுபுறக் கதையில் மன வளர்ச்சி குன்றியவராக வரும் வினோத் கிஷன், தன் சிறப்பான நடிப்பால் ஒரு பக்க திரையை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்கிறார். வெகுளித்தனங்களை வெளிக்காட்டும் இடத்திலும், சின்ன சின்ன குழந்தைத்தனமான கோபங்களை தன் முகத்தில் கொண்டு வரும் இடத்திலும் அப்ளாஸ் பெறுகிறார். ஒவ்வொரு வார்த்தைகளையும் இரண்டு முறை உச்சரித்துப் பேசும் அவரின் உடல்மொழி அட்டகாசம்.
மறுபுறத்தில் வரும் கதை, முழுக்கவே கௌரி ஜி.கிஷனின் தோள்களில் பயணிக்கிறது. கடத்தலில் மாட்டிக்கொண்டு பதறுவது, எதுவும் செய்ய முடியாத ஆற்றாமையில் கத்தி அழுவது, மனவளர்ச்சி குன்றிய இளைஞருக்கு தன் நிலைமையை போன் காலிலேயே விளக்க முயல்வது என முதல் பாதி. கௌரி ஜி.கிஷனின் நடிப்புக்கு நல்ல தீனி. ஆனால், இரண்டாம் பாதியில் கௌரி கிஷன் கதாபாத்திரத்தின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள்.
சச்சின், தொடக்கத்தில் தன் மிரட்டல் பார்வையிலும் வஞ்சகம் கலந்த சிரிப்பிலும் வில்லத்தனத்தைக் காட்டி மிரளவைக்கிறார். ஆனால், திரைக்கதை நகர நகர, அழுத்தமாகத் தொடங்கிய வில்லன் கூட்டத்தின் வில்லத்தனங்கள், கோமாளித்தனமாக மாறி, இறுதியில் சப்பென்று முடிகிறது. இந்த மாற்றம், 'இவங்களுக்கா நாம முதலில் பயந்தோம்?' என்று எண்ண வைக்கிறது. ஓரிரு காட்சிகளே வரும் வினோத்தின் அம்மாவான ரோகிணியும் வில்லன் சச்சினின் நண்பராக வரும் மகேந்திரனும் தங்களின் நடிப்பால் தனித்து நிற்கிறார்கள்.

இரண்டு திரையிலும், திரைக்கதை மாறி மாறி பயணிப்பதால், ஒருபக்கம் சுணக்கம் தட்டினால், மறுபக்கத் திரையில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. இந்த பேலன்ஸ் பாராட்டுக்குரியது. ஆனால், பல இடங்களில் ஏதோவொருபக்க திரை சும்மாவே கிடக்கிறது. 'எதற்கு இந்த ஸ்ப்ளிட் ஸ்கீரின்? இதை சிங்கிள் ஸ்கீரினாகவே எடுத்திருக்கலாமே!' என நமக்கு எழும் கேள்விக்கு இரண்டாம் பாதி காட்சிகள்தான் பதில் சொல்கின்றன. வேகத்தடையாகப் பாடல்கள் இல்லாதது படத்துக்குப் பெரிய பிளஸ்.
மன வளர்ச்சி குன்றிய இளைஞரை ஒற்றை ஆளாக (சிங்கிள் மதராக) பராமரிக்கும் தாயாக ரோகிணியின் வைராக்கியமும், அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்னைகளும் தொந்தரவுகளும் அழுத்தமாகக் காட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. தான் மாட்டிக்கொண்ட விஷயத்தை, வினோத்திடம் கௌரி போன் காலில் புரிய வைக்கும் இடம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், மனநலம் குன்றிய ஒரு இளைஞரின் இயலாமையை நகைச்சுவைக்குரிய பொருளாக்கியது அபத்தம்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்ணின் அலறலையும், அதை நேரில் பார்க்கும் காதலனின் முக பாவனையையும் நீண்ட நேரம் திரையில் காட்டுவதன் வழியாக இயக்குநர் சாதிக்க நினைத்தது என்ன என்பது அவருக்கே வெளிச்சம். இறுதியில் இதற்குச் சொல்லப்படும் தீர்வும் இயக்குநரின் அரசியல் போதாமையையே வெளிகாட்டுகிறது.
கடத்தப்பட்ட பெண்ணைப் பூட்டி வைத்துவிட்டு சீட்டுப் பணம் கொடுக்கச் செல்வது, போன் ரிப்பேர் கடைக்குப் போவது, டிபன் வாங்கப் போவது என்றா ஊர் சுற்றிக்கொண்டா இருப்பார்கள்? கடத்தப்பட்ட பெண் படம் முழுவதும் போன் பேசிக்கொண்டிருந்தாலும், அது வில்லன்களுக்குத் தெரியாமலேயே இருப்பது எப்படி என ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள் எழுகின்றன. அவ்வளவு நேரம் சீரியஸாக மட்டுமே கதை சொல்லிவிட்டு இறுதிக்காட்சிகளில் நகைச்சுவையைச் சேர்த்ததும் நெருடல்!

ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் என்ற ஐடியா ஈர்த்தாலும், சொல்லப்பட்டிருக்கும் கதையின் கரு `Cellular' என்ற ஆங்கிலப் படத்தையும், அதை அடிப்படையாக வைத்து தமிழிலேயே எடுக்கப்பட்ட `வேகம்' மற்றும் `நாயகன்' படங்களை நினைவூட்டுகின்றன. இதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
இதுபோன்ற ஒரு வித்தியாசமான முயற்சிக்கு ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் கைகோத்து வேலைசெய்யவேண்டியது மிகவும் அவசியம். அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் வீரகுமாரும், படத்தொகுப்பாளர் பிரேம் குமாரும். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் விறுவிறுப்பான பின்னணி இசையும் படத்திற்குப் பலம்.
மொத்தத்தில், `ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்' என்ற புது முயற்சிக்குப் பொருத்தமான ஒரு கதைக்கரு இருந்தாலும், ஒரு வித்தியாசமான திரை அனுபவமாக இல்லாமல், மற்றுமொரு த்ரில்லர் படமாக மட்டுமே திருப்திப்பட்டுக் கொள்கிறது இந்த `பிகினிங்'.