Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள்! (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் இன்று கடுமையான ஆட்சேபத்திற்கு உரிய சில விஷயங்கள் நடந்தேறின. Task ஒன்றில் தோற்ற அணி, ஜெயித்த அணிக்கு அடிமை என்பது போன்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.  வென்ற அணிக்கே வீட்டை உபயோகிக்கும் உரிமையுள்ளது என அறிவிக்கப்பட்டு தோற்ற அணியின் உறுப்பினர்கள், தரையில்தான் அமர வேண்டும், படுக்கையறை, சமையல் அறை போன்றவற்றை அனுமதிக்குப் பின்தான் பயன்படுத்த வேண்டும், கழிவறைக்குச் சென்றால் பாட்டுபாடிக் கொண்டே செல்ல வேண்டும், கலை நிகழ்ச்சிகள் மூலம் வென்ற அணியை குஷிப்படுத்த வேண்டும் என்பது போன்று பல கொடூரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மனித சமத்துவத்தைப் பற்றி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். மதம், சாதி, வர்க்கம், பால் என்று பலவிதங்களில் பாரபட்சங்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சில சமூகங்கள் உயர்வுமனப்பான்மையினால் எளிய சமூகத்தினரை வதைக்கும் விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கிராமங்களின் தெருக்களில் செருப்பை காலில் அணியாமல் கையில் தூக்கி நடந்து செல்லும் சாதியக் கொடுமைகள் இன்னமும் கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

தொடர்ந்த போராட்டங்கள், பரப்புரைகளுக்கு பின்னரும் நிலைமையில் சொல்லிக் கொள்ளுமளவு முன்னேற்றம் இல்லை. இத்தகைய சூழலில் விளையாட்டுக்காக கூட ஆண்டைxஅடிமையின் கூறுகளை பயன்படுத்துவது கடுமையான ஆட்சேபத்திற்கு உரியது. 

Bigg Boss

இன்னொன்று, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைக் குறிப்பிட்டு, தோற்ற அவர்கள் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் அடிமைப்பட்டிருப்பது மாதிரி சித்தரிப்பதும் கண்டனத்திற்கு உரியது. விளையாட்டு என்கிற பெயரில் இம்மாதிரியான ஆபத்தான விஷயங்கள் நியாயப்படுத்தக்கூடாது. இறுதி நாட்கள் நெருங்க நெருங்க போட்டிகள் கடுமையாகும் என்பதை புரிந்து கொள்ள முயன்றாலும், அதிலுள்ள அரசியல்சரியை (Political correctness) கறாராக பிக்பாஸ் டீம் கடைப்பிடிப்பது முறையாக இருக்கும். பின்பு கமலின் மூலமாக வருத்தப்படுவதில் நியாயம் ஏதுமில்லை. 

**

65-ம் நாள் காலை.

‘வாடி என் தமிழ்செல்வி’ என்கிற ரகளையான பாடல் காலையில் ஒலித்தது. தன்னை வரவேற்கும் பாடல் என்று நினைத்துக் கொண்டு ஜூலி குத்தாட்டம் போட்டார். ஹரீஷ் மெல்லிய அசைவுகளால் கவர்ந்தார்.

புது வரவுகள், வெளியே சென்றவர்களின் மீள் வருகை ஆகிய விஷயங்கள் தங்களை சோர்வுறச் செய்வதாக சிநேகனும் ஆரவ்வும் பேசிக் கொண்டார்கள். துவக்க நிலையில் இருந்து நீடிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் சிநேகன், ஆரவ், கணேஷ் மற்றும் வையாபுரி. அவர்களின் இந்த அலுப்பு நியாயமானதுதான். 

Bigg Boss

இதைப் போலவே, தாங்கள் வாக்களித்து வெளியேற்றியவர்கள் மீண்டும் உள்ளே வருவது பார்வையாளர்களுக்கும் கூட சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தக்கூடும்.  ஆனால் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையான வடிவமைப்பை பார்த்தால் இது போன்ற தவிர்க்க முடியாத விஷயங்கள் அவற்றில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். 

வையாபுரி மறுபடியும் அனத்த துவங்கி விட்டார், பாவம். ‘வேற எந்த விஷயத்தையும் நான் மிஸ் பண்ணலை. என் குடும்பத்தைத்தான் மிஸ் பண்றேன். உலகமே ஒரு நாடக மேடை, அனைவரும் நடிகர்கள் –ன்றது உண்மையாப் போச்சு. நடிக்கத் தெரியாத என்னைக் கூப்பிட்டு வந்திட்டாங்களே’ என்றெல்லாம் தனிமையில் அவரது புலம்பல் நீண்டது. குடும்பத்தின் அருமையை பிரிவில்தான் உணர முடியும் என்பதற்கு வையாபுரியின் இந்தக் கதறல் சரியான உதாரணம்.

ஜூலி, ஆரத்தி குழு ‘பாட்டுக்குப்பாட்டு’ போட்டி நிகழ்த்தியது. (ஓவியாவை தூங்க விடாமல் செய்ய வேண்டும் என்கிற வன்மத்தில் முன்னர் நிகழ்த்திய அந்தாக்ஷரி இரவின் கொடுமை நினைவில் வந்து போனது). “இப்பத்தான் வீடு கலகலன்னு இருக்கு. நன்றி பிக்பாஸ்” என்று நெகிழ்ந்து போனார் கணேஷ். 

 

“எனக்கு வெளில நல்ல பேர் இல்ல. என்னை திருத்திக்க தயாரா இருக்கேன். விமர்சனங்களை ஏத்துக்க ரெடியாக இருக்கேன்’ என்றெல்லாம் 'திருந்திய உள்ளமாக’ பேசிக் கொண்டிருந்தார் ஜூலி. “நேத்திக்கு நீ வரும் போதே கவனிச்சேன். உன் கிட்ட மெச்சூரிட்டி வந்திருக்கு” என்றார் கணேஷ்.

“இந்த வீட்டில் பழைய உற்சாகமும் துள்ளலும் இல்லை’ என்கிற ஜூலியின் கண்டுபிடிப்பு உண்மையே. “நீங்கள்ளலாம் வெளிய வாங்க. மக்கள் நிறைய பரிசுகள் தரக் காத்திருக்கிறார்கள். எங்களுக்கும் நெறய கிடைச்சது. கமல் கொஞ்சமா தந்தாரு. மக்கள் நெறய தந்தாங்க’ என்றெல்லாம் ஜூலியும் ஆரத்தியும் சூசகமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவை உண்மையான பரிசுகளா அல்லது விமர்சனங்களும் வசைகளுமா என்று ஆரவ் உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் குழம்பினார்கள்.

**

Luxury budget –க்கான task தரப்பட்டது. இதற்காக வீட்டின் உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒன்று மதுரை குடும்பம் எனவும் இன்னொன்று NRI குடும்பம் எனவும் ஆனது. 

Bigg Boss

கூடைப்பந்து போட்டியின் எளிய வடிவம். கூடை உயரத்தில் இருப்பதற்கு மாறாக தரையில் இருக்கும். இரண்டு நபர்கள் பந்தை கூடையில் போட முயல்வார்கள். எதிரணியில் உள்ள இரண்டு நபர்கள் அதைத் தடுக்க முயற்சி செய்வார்கள்.

ஆரவ்வும் பிந்துவும் சிறப்பாக விளையாடி உற்சாகமாக பல பாயிண்ட்டுகளை எடுத்தார்கள். விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாததால் கோபமடைந்த ஹரீஷ் ‘விளையாட மாட்டேன்’ என்று மறுத்து பிறகு சமாதானம் அடைந்தார்.

NRI அணியில் ஆரவ் + பிந்து கூட்டணி சிறப்பாக பந்துகளைப் போட்டது போலவே அதே அணியில் உள்ள கணேஷ் சிறந்த தடுப்பாளராக இருந்தார். அவரது உயரமும் பலமும் இதற்கு அனுகூலமாக இருந்தது. 

இந்தப் போட்டியில் NRI அணி வென்றதால் வீட்டை ஆளும் உரிமை அவர்களுக்கே. தோற்ற மதுரை அணி எல்லாவற்றிற்கும் அனுமதி பெற்றும், எதிரணி சொல்லும் task-ஐ முடித்த பிறகுதான் வீட்டைப் பயன்படுத்த வேண்டும். கட்டுரையின் துவக்கப்பகுதியில் குறிப்பிட்டது போல் இம்மாதிரியான பாரபட்சங்கள் விளையாட்டாக இருந்தாலும் முறையானதல்ல. 

Bigg Boss

போட்டியில் அடிபட்டிருந்த சிநேகனை ‘எங்க அண்ணன் எல்லாத்தையும் அடிபட்டு அடிபட்டுதான் கத்துக்குவாரு’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலி. சிநேகனிடம் அதிக சலனமில்லை. “ஆமாம். தங்கச்சி.. அடிபட்டுதான் கத்துக்கறேன்” என்று டி.ஆர்தனமான சிலேடையில் அவர் மனதிற்குள் புலம்பியிருக்கக்கூடும்.

வீட்டைப் பயன்படுத்த அனுமதி கேட்கும் task-ல் வையாபுரிக்கு மட்டும் வயதைக் கருதி விலக்கு அளிக்கப்பட்டது. நல்ல விஷயம். இல்லையென்றால் அவர் காமிராவை நோக்கி அழத் துவங்குவார் அல்லது கத்துவார். 

**

“எல்லாவற்றிற்கும் task-ஆ.. என்ன பைத்தியக்காரத்தனம் . நாம் என்ன அடிமைகளா ஒண்ணுக்கு போறதுன்னா கூட அனுமதி கேட்கணுமா. நான் செய்ய மாட்டேன். என்று சிநேகன் எரிச்சல்பட்டது நியாயமே. விதிமுறைகள் அத்தனை அபத்தமாக இருந்தன. சுயமரியாதையுள்ள எவரும் இதைக் கண்டு கோபப்படுவது சரியே. ‘ அண்ணா… இதெல்லாம் fun தானே” என்றார் ஜூலி. கணேஷ் சொன்ன பக்குவம் இதுதான் போல. 

தோற்ற அணிக்கு என்னென்ன task-களை தரலாம் என்று NRI அணி பேசிக் கொண்டதை சுஜா ஒட்டுக் கேட்டார். பிக்பாஸின் விதிமுறைகள் கடுமையானதாக இருந்தாலும் நபர்களுக்கேற்றவாறு அதை எளிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று NRI அணி பேசியது நன்று. என்ன இருந்தாலும் இத்தனை நாட்கள் பழகிய நண்பர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது என்கிற அவர்களின் மனச்சாட்சி பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல, கத்தி எப்போது வேண்டுமானாலும் திரும்பும் என்கிற ஜாக்கிரதையுணர்வும் அவர்களிடம் இருந்திருக்கக்கூடும். 

Bigg Boss

‘அவங்க என்ன பேசிக்கறாங்க?’ என்று ஒட்டுக்கேட்ட சுஜாவிடம் ஆவலாக கேட்டார் ஹரீஷ். ‘நீச்சல் குளத்தில் அப்பப்ப குதிக்கணுமாம்’ என்று அறிந்தவுடன் ‘என்னால் முடியாது’ என்று மறுத்தார். 

ஆடம்பரமான உடையில் வந்த ஆரவ், ஹரிஷீடம் கலாய்த்துக் கொண்டிருந்தது ஜாலியான கலாட்டா. சிநேகனும் ஹரிஷூம் மதுரையின் வட்டார வழக்கை இயன்ற வரை சிறப்பாகவே பேசினர். ‘நாட்டாமை’ தோற்றத்தில் வந்து அமர்ந்தார் வையாபுரி. மலேரியா வந்த விஜயகுமார் போல கால்வாசி நாட்டாமையாக இருந்தார். பலவீனமான நாட்டாமை. பெரிய மீசை மட்டுமே அவரைக் காப்பாற்றியது. ‘Who is this man?” என்று அவரையும் கலாய்த்தார் ஆரவ். 

NRI கோலத்தில் ஆரத்தி, பிந்து போன்றவர்களின் உடைகள் காமெடியாக இருந்தன. காஜல் இன்னமும் ஒப்பனையைக் கூட்டியிருக்கலாம். NRI களையின்றி உள்ளூர் ஆசாமியாகவே இருந்தார். 

‘இது விளையாட்டு என்கிற நோக்கில் நடத்தப்படுவது. எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லை’ என்கிற ஜாக்கிரதையான ஒரு disclaimer-ஐ முன்மொழிந்தார் வையாபுரி. பிக்பாஸ் சொல்லித் தந்தது போல. 

தொடரின் முந்தைய அத்தியாயங்கள்


Day :64  |63  |62  |61  |60  |59  |58  |57  |56  |55  |54  |53  |52  |51  |50  | 49  | 47  | 48  | 47  | 46  | 45  | 44  | 43   | 42 | 41 | 40  | 39 | 38 | 37 | 36 | 35  | 34  | 33 |
 

ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து!(Day 64)

“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?!” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 63)

கடைசியா கமலையும் ஜட்ஜ் ஆக்கிட்டீங்களேய்யா..!(Day 62)

ஜூலி பாடிக் கொண்டே கழிவறைக்குச் சென்றார். அவர் task-ஐ சரியாகச் செய்கிறாரா என்பதை பின்னாலேயே வந்து கண்காணித்த ஆரத்தியின் செய்கை முகம் சுளிக்க வைத்தது. வீட்டிற்கு வந்த முதல் நாள் ஜூலி கழிவறையின் அருகில் பாடிக் கொண்டிருந்தார். அந்த ராசியோ என்னமோ, இப்போதும் கழிவறைக்கு கட்டாயமாகப் பாடிச் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பிக்பாஸிற்கே ஜூலியைப் பார்த்ததும்தான் அந்த யோசனை ஏற்பட்டிருக்க வேண்டும் போல. கழிவறையில் தாழ்ப்பாள் சரியில்லாத வீடுகளில்தான் இம்மாதிரியான உபாயங்களைக் கடைப்பிடிப்பார்கள். பிக்பாஸ் வீட்டு நிலைமையும் அப்படியா என்ன?

Bigg Boss

ஸ்மோக்கிங் ரூம் செல்வதற்காக ஹரீஷை உப்பு மூட்டை தூக்க முயன்றார் பிந்து. ஹரஷிற்கு ஆசை ஒருபுறம், இன்னொரு புறம் பிரச்சினையாகி விடுமோ என்கிற பயம். (ஏற்கெனவே லவ் ப்ரபோஸலை விளையாட்டு என்கிற பெயரில் பலமாகவே ஹரீஷ் நிகழ்த்தியிருந்தார்). ஆனால் பிந்து பிடிவாதமாக வலியுறுத்தவே, பிந்துவின் முதுகில் வேதாளம் போல ஏறிக்கொண்டார். முதல் முறையில் தடுமாறிய பிந்து, இரண்டாம் முறையில் எப்படியோ கொண்டு போய் ஹரீஷை கரை சேர்த்தது சுவாரசியம். 

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களே இல்லை போலிருக்கிறது. 

**

‘எங்களை ஏதாவது பாட்டுப்பாடி குஷிப்படுத்துங்கள்’ என்றார் ‘முதலாளியம்மா’ ஆரத்தி. NRI அணியில் மற்றவர்கள் அடக்கி வாசிக்கும் போது இவர் மட்டுமே ஓவராக நடந்து கொள்கிறார். 

bigg Boss

‘இருவிழி உனது, இமைகளும் உனது’ என்கிற பாடலை அற்புதமாகப் பாடினார் ஹரீஷ். ஜூலியும் சுஜாவும் இணைந்து நடனமாடினர். ‘எனக்கு ஆட வராது’ என்று சொன்ன சுஜா, இசையைக் கேட்டதும் பிரபுதேவா மாதிரி உற்சாகமாக ஆடியது சுவாரசியம். பிறகு சிநேகனையும் இந்த ஆட்டத்தில் இழுத்துப் போட்டனர். அதுவரை ஒதுங்கியிருந்த சிநேகன், வேறு வழியின்றி நடனம் என்கிற பெயரில் எதையோ ஆடினார். காயத்ரியிடம் சரியாக கற்கவில்லை போலிருக்கிறது. 

‘இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட இந்த பிரிவினை task அளவில் நின்று விடுமா, மனதிற்குள் சென்று விடுமா’ என்று அசரிரீக்குரல் கவலைப்பட்டது. இரண்டாவது விஷயம் நடக்க வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்? பின் ஏன் இந்த போலியான கவலை பிக்பாஸ்? 

‘நாளை’ என்று காட்டப்படும் பகுதியில் ஜுலியின் மனதிற்குள் ஏதோ சென்று வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறாரே, திருப்திதானே பிக்பாஸ்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்