Published:Updated:

கழிவுக் குவியல், கோல்டன் கார்ட்... இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ?! - 78-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சுரேஷ் கண்ணன்
கழிவுக் குவியல், கோல்டன் கார்ட்... இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ?! - 78-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
கழிவுக் குவியல், கோல்டன் கார்ட்... இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ?! - 78-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

வெளியேறுவோம் என்று தெரிந்தோ, அல்லது சவால்களை வீரத்துடன் செய்ய வேண்டும் என்று கமல் உத்வேகம் தந்ததாலோ என்னவோ காலையிலேயே எழுந்து வீட்டின் வாசலில் வீரமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார் பிந்து. பரவாயில்லை, அலங்கோலமாக இல்லாமல் சுமாராகவே இருந்தது. இது மட்டுமல்லாமல் வீடு பெருக்கவும் கற்றுக் கொள்கிறார் பிந்து. பிக் பாஸ் வீட்டை விட்டுச் சென்றவுடன் விரைவில் ‘நல்ல செய்தியை’ எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. பிந்து ஆர்மி கலைக்கப்படும் நேரம் விரைவில் வரும் போல. “பாருங்க, குப்பைக்கு வலிக்காம பெருக்கறாங்க” என்று கிண்டலடித்தார் ஆரவ்.

“2 நிமிஷம் கதவு திறக்கும் போது நீ ஏன் போகலை” என்று பிந்துவிடம் விசாரித்தார் வையாபுரி. ‘ரொம்ப அசிங்கமா இருக்குமில்லையா?” என்றார் பிந்து. “ஆமாம். ஃபேமிலியை பிரிஞ்சு இருந்தாலாவது அதைக் காரணம் காட்டி ஓடிடலாம். கெளரவமா இருக்கும். இப்பதான் ஃபேமிலியை கூட்டிட்டு வந்து காட்டினாங்க. இப்ப அந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. 75 நாள் இருந்துட்டு இப்ப ஓடி வந்துட்டியே-ன்னு கிண்டல் பண்ணுவாங்க” என்றார் வையாபுரி. ஆக.. பிந்துவும் வையாபுரியும் ஏதோ அரைமனதாகத்தான் இங்கு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. உடல்திறன் சார்ந்த சவால்களை இருவரும் வெறுக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறது. எனவே இறுதிப் போட்டி வரை இவர்கள் தாக்குப் பிடிப்பது சிரமம்தான்.

பிந்து சமையல் செய்வதை லைவ் ரிலேவாக ஜாலியாக வர்ணித்தார் ஆரவ். கூடவே சிநேகனையும் ஓட்டினார். ஆரவ்வின் லூட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த சுஜா ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.  “ஆரவ்.. உங்களுக்கு நிறைய பெண் விசிறிகள் இருக்கிறார்களாமே? அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?” என்று பதிலுக்கு கலாய்த்தார் பிந்து. “எப்ப பார்க்கலாம்னு வெயிட் பண்றேன்” என்ற ஆரவ்வின் கண்களில் பல்பு எரிந்தது. பல்பு வாங்காமல் இருந்தால் சரி. 

“இந்த வாரம் யாரும் வெளியேற மாட்டாங்கன்னு நெனச்சேன். அதனாலதான் கமல் சார் கிட்ட அதை வேண்டுகோளாவும் வெச்சேன். நான், இல்லைன்னா பிந்துதான் போவாங்கன்னு நெனச்சேன். சுஜா போவாங்க –ன்னு நெனக்கலை” என்றார் ஹரீஷ். (பார்வையாளர்கள் நினைத்ததும் இதுவாகவே இருக்கலாம்). ஆனால் ஆரவ் வேறொரு பரிமாணத்தை வைத்தார். “கணிப்புகளை வெச்சு சுஜாதான் போவாங்க –ன்னு நெனச்சேன். இதுவரை நடந்து எவிக்ஷனை கணக்குப் போட்டுப்பார்த்தா கரெக்டா தெரிஞ்சது” என்றார் ஆரவ். 

“ஏன்.. சுஜா என்ன தப்பு செஞ்சாங்க?” என்றார் ஹரீஷ். ‘தப்பு –ன்னு சொல்லலை. இருக்கறதுல அதிகம் நெகட்டிவ் விஷயம் இருக்கறவங்க எவிக்ட் ஆவாங்க –ன்னு நமக்குள்ள ஒரு கணக்கு இருக்கும்.. இல்லையா” அதை வெச்சு சொல்றேன்.” என்றார் ஆரவ். 

சில நபர்கள், மழை பெய்த பிறகு ‘அப்பவே நான் சொல்லல.. மழை பெய்யும்”னு என்பார்கள். அதைப் போலவே ஆரவ் சொல்வது இருந்தது. சீக்ரெட் ரூமில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுஜா சற்று ஜெர்க் ஆனார். 

**

பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஆரவ் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை வந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்தாதால் இம்முறை கட்டாயத் தலைவர். ஆனால் நாமிஷேனில் இருந்து அவருக்கு விலக்கு இல்லை. சமையல், க்ளீனிங், வாஷிங் டீமை பிக்பாஸே பிரித்துக் கொடுத்தார். சமையல் குழுவில் பிந்துவும் வையாபுரியும் இருந்தது மற்றவர்களுக்கு சோதனையான விஷயம்தான். பிந்து முன்பு செய்த சேமியா கிச்சடி வேறு இப்பவும் கண்முன்னால் விபரீதமான உருவமாக நிற்கிறது. 

‘அவரவர் வேலைகளை அவரவரே செய்ய வேண்டும். மற்ற எவரும் உதவக்கூடாது’ என்பது பிக்பாஸின் கறாரான உத்தரவு. வெளியே வந்து பார்க்கும் போது ஆச்சர்யகரமாக ஒரு ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டிருந்தது. முதல் task ஆக இருந்த ஜிப்ரீஷ் மொழியில் பேசும் சவாலில் ஹரீஷ் வெற்றி பெற்றிருந்ததால் அவரின் பெயர் முதலில், பத்து மதிப்பெண்களோடு இருந்தது. கீழே அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசை அமைந்திருந்தது. 


பிந்துதான் சமையல் பொறுப்பு என்பதால் இதர போட்டியாளர்கள் சற்று பீதியாக இருந்தார்கள். “எப்படி வேண்டுமானாலும் சமைப்பேன். நீங்க சாப்பிட்டாகணும்” என்று கட்டளையிட்டார் பிந்து. இருப்பதிலேயே சிரமமான task இதுவாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. 

அந்தப்பக்கம் சீக்ரெட் ரூமில் சுஜாவிற்கு கல்யாணச் சாப்பாடு. ராஜ மரியாதை. சமைக்காமலே விருந்து. ‘நன்றி’ பிக்பாஸ் என்றார் சுஜா. “லூசுப் பொண்ணு.. ஓவரா எமோஷன் ஆகுது” என்று சுஜாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை லைவ்வாக பார்க்க வாய்ப்பு கிடைத்த ஒரே பார்வையாளரான சுஜா, இதைக் கேட்டு சிரித்துக் கொண்டார். ‘சுஜாவோட தங்கச்சி பேரு ‘கிரண்மை’. பேரு நல்லாயிருக்குல்ல. என்ன அர்த்தம் அதுக்கு? என்று விசாரித்தார் ஹரீஷ். “தெரியலை” என்றார் கவிஞர். அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த சுஜா, ‘அது சமஸ்கிருதம். சூரியன் –ன்னு பொருள்” என்று முனகிக் கொண்டார். ஆமாம், ஹரீஷ் எதுக்கு இந்த டீடெய்ல் உங்களுக்கு? சரியில்லையே, நண்பா. 

**

சுஜாவின் சீக்ரெட் ரூமில் நீல நிற பல்பு எரிந்தது. பிக்பாஸ் அழைப்பு அது. ஹெட்செட்டை மாட்டிக் கொண்ட சுஜா, இயந்திரக் குரல் வந்ததும் சற்று அதிர்ந்து போனார். “நீங்கள் வீட்டுக்குள் செல்லலாம், சுஜா” என்றதும் அதற்கும் வாய் பிளந்தார். வாக்குமூல அறைக்குள் வந்த சுஜாவை, இரண்டு பேரை நாமினேட் செய்யச் சொன்னார் பிக்பாஸ். சுஜா முதலில் நாமினேட் செய்தது ஆரவ்வை. 

“நான் இந்தப் போட்டியில் வெல்ல எத்தனை உறுதியாக இருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும். நம்பிக்கை தர வேண்டிய அவரே ‘நான் வெளியே போவேன்’ என்று யூகித்ததாக சொல்வது ஏமாற்றமாக இருக்கிறது. அவர் வார்த்தைகளில் கவனமில்லை. மற்றவர்களைக் குழப்புகிறாரா அல்லது அவரே குழம்புகிறாரா என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது.” என்று குழப்பமாகச் சொன்ன சுஜா, அடுத்த நாமினேஷனாக சிநேகனை சொன்னார். 

“என்னை லூசுப் பொண்ணுண்னு சொல்றார். நான் சரியான விஷயத்திற்கு மட்டும்தான் எமோஷன் ஆகறேன். நான் கல்லு கிடையாது. நேத்து நான் வெளியே கிளம்பும் போது அவர் கூட அழுதார். அப்ப அவர் எமோஷன் கிடையாதா? அவர் என்ன பொருளில் சொன்னார் என்று தெரியவில்லை. அந்த வார்த்தை என்னைக் காயப்படுத்தியது’ என்றார் சுஜா. 

சம்பந்தப்பட்டவர்கள் இயல்பாக சொன்ன விஷயத்தைப் பிடித்துக் கொண்டு சுஜா செய்யும் இந்த எதிர்வினை மிகையானது. எனவே அவர் நாமினேஷனுக்காக சுட்டும் காரணங்கள் அபத்தமானதாகத்தான் இருக்கின்றன. 

வாக்குமூல அறையிலிருந்து வீட்டுக்குள் வந்த சுஜாவை இதர போட்டியாளர்கள் ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தனர். ஆனால் சுஜா எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக வருவதைப் பார்த்து குழப்பமடைந்தனர். சுஜா அமைதியாக வந்தது மட்டுமல்லாமல், பிந்துவை நோக்கி ‘கிளம்பு, காத்து வரட்டும்’ என்பது போல் சைகையால் கைகளை ஆட்டி சொன்னார். சுஜாவின் இந்த நடவடிக்கையும் அபத்தமானது. 

வெளியே சென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த சுஜா திரும்பவும் வருவதை மகிழ்ச்சியுடன் (?!) பார்த்த இதர போட்டியாளர்களை நோக்கி தன் மகிழ்ச்சியை சுஜா உடனடியாக பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆரவ் மற்றும் சிநேகனின் மீது வருத்தம் இருந்தால் பின்பு அதை தனியாக பேசியிருக்கலாம். ‘பாசத்தைக் காட்டாதீர்கள்’ என்று கமல் சொன்னதை சுஜா தவறாகப் புரிந்து கொண்டாரோ அல்லது தனிமையில் ஒரு நாள் இருந்ததால் அது சார்ந்த குழப்பத்தில் இருந்தாரோ என்று தெரியவில்லை. 

இதர போட்டியாளர்கள் நாமினேஷன் காரணங்களைக் கூறினார்கள். பிந்து, வையாபுரியை நாமினேட் செய்தது போலவே வையாபுரி, பிந்துவையும் நாமினேட் செய்ததும் சற்று ஆச்சரியம். வேறு வழியில்லை. இருக்கிற நபர்களில் எவரையாவது சொல்லியாக வேண்டும். இந்த நியாயமான காரணத்தைச் சொன்னார் வையாபுரி. ஆரவ், ஹரீஷை நாமினேட் செய்ததும் சற்று ஆச்சர்யம்தான். “ஏதோ ஒரு விலகல் தோன்றி விட்டது’ என்று கூறி ஆரவ்வை நாமினேட் செய்தார் ஹரீஷ். பழிக்குப் பழி.

‘தனக்கு கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்கிற காரணத்தை’ நேர்மையாகச் சொல்லி ஆரவ்வையும் ஹரீஷையும் நாமினேட் செய்தார் சிநேகன். ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் – வையாபுரி, சிநேகன், ஆரவ் மற்றும் ஹரீஷ். ஒருவரையொருவர் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டார்கள். ‘எவண்டா இந்த வேலையைப் பார்த்தவன்?” என்று வையாபுரி விளையாட்டாக கேட்ட சூழல் இலகுவாகியது. 

**

வந்ததில் இருந்தே முறைப்பாக இருந்த சுஜா தன் பஞ்சாயத்தை துவங்கினார். “கவிஞரே.. நான் லூசுதான்… நான் எங்க அப்பா விஷயத்துல மட்டும்தான் அதிக உணர்ச்சிவசப்பட்டிருக்கேன். அது என் வலி. மத்த எந்த விஷயத்துல அதிகமா எமோஷன் ஆகியிருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?” என்று கேட்க.. “லூசு –ன்றது நான் செல்லமா சொன்னது. அதைப் போய் சீரியஸா எடுத்துக்கிட்டே. உன்னை துணிச்சலான பொண்ணுன்னுதான் சொல்லிட்டு இருந்தேன்” என்றார் சிநேகன். ‘அப்ப எனக்கு புரிய வைங்க.. நான் எந்த வகைல லூசு?” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார் சுஜா. 

அற்பமான விவகாரத்திற்கு பஞ்சாயத்து வைப்பதே லூசுத்தனம்தான்’ என்பதை சொல்ல விரும்பாத சிநேகன் இடத்தைக் காலி செய்தார். ஆரவ், ஹரீஷ் உள்ளிட்டவர்களும் சுஜாவின் இந்த விசித்திரமான நடடிவடிக்கையைப் பற்றி குழப்பத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். ‘ஒருவேளை இது task ஆக இருக்கலாம்’ என்றார் கணேஷ். “நான் போய் பேசப் போகும் போதுகூட “உனக்கு தைரியந்தாண்டா” என்று சொன்னார். எனக்குப் புரியவில்லை. நாம எதுவும் தப்பா பேசலை. அந்தந்த சூழல் காரணமா ஏதாவது சொல்லியிருந்தா கூட அப்புறம் பார்க்கும் போது ஒண்ணுமே இல்லாம ஆயிடும்” என்ற ஆரவ்வின் தரப்பு சரியானதாக இருந்தது. 

“நீங்க ஒரு மாதிரி கையைக் காட்டினது எனக்குப் பிடிக்கலை சுஜா. அதனால்தான் உங்க கூட பேசாம இருந்தேன்” என்றார் பிந்து. “நான் உங்களையெல்லாம் குழப்ப விரும்பினேன். உங்களை அப்படி கை காட்டுவதின் மூலம் நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள் என்று சொல்ல விரும்பினேன். அதன் மூலம் மற்றவர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் ஆகவில்லை. நான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோது நீங்கள் ஏமாற்ற முயன்றது போல் நானும் ஏமாற்ற விரும்பினேன்” என்று ஏதேதோ காரணங்களைக் கூறினார் சுஜா.

நாம் ஒரு விஷயத்திற்காக எதையோ சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கும்போது உரையாடலின் போக்கில் அப்போதே நிறைய பொய்கள் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். சுஜாவின் உரையாடல் அப்படித்தான் தோன்றியது. தனிமையில் இருந்ததால் அது சார்ந்த பாதிப்பில் இருக்கிறாரா, அல்லது ஆரவ் மற்றும் சிநேகனின் அபிப்ராயங்களால் உண்மையாகவே புண்பட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாவது என்றால் அது அபத்தம். அவர்கள் கூறியது அந்தளவிற்கு கடுமையான அபிப்ராயங்கள் இல்லை. 

ஒருவேளை சுஜா உண்மையாகவே விளையாட விரும்பி அப்படிச் செய்திருந்தால் இது அதற்கான தருணம் அல்ல. திரும்பி வந்தவரை எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்திருக்கும்போது முறைப்புடன் விளையாடுவது முட்டாள்தனமானது. தான் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதை இறுதிப்பகுதியில் உணர்த்த சுஜா விரும்புகிறாரா என்று தெரியவில்லை. 

**

இனி இரவு உணவு சாப்பிடும்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கலாமா, வேண்டாமா என்று பார்வையாளர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் போல. அந்தளவிற்கான சவால் போட்டிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. சாணக்கழிவுகளும் அழுகிய கத்தரிக்காய்களும் நிறைந்திருக்கும் கண்ணாடி பெட்டியில் மூன்று வாஷர்கள் போட்டு வைக்கப்பட்டிருக்குமாம். 

துண்டுச்சீட்டில் வரும் கேள்வியையொட்டி, போட்டியாளர்கள் தங்களுக்குள் கலந்தோசித்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் சென்று கழிவுகளுக்குள் கையை விட்டு வாஷரை தேடி எடுக்க வேண்டும். பாவம், இனி என்னவெல்லாம் செய்யச் சொல்வார்களோ! 

கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்ய மனித திறனை பயன்படுத்தாமல் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியே ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. இன்னமும் கழிவுக் குழிகளில் மனிதர்கள் இறங்குவதும் இறப்பதும் நின்றபாடில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியில் இப்படியொரு சவால். போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இறுதிப்பகுதியின் துவக்கமே இப்படி இருந்தால் இன்னமும் என்னென்னமோ வருமோ என்று இப்போதே கலக்கமாக இருக்கிறது. 

இதில் கூடுதல் கொடுமை என்னவென்றால், வீட்டின் பெட் ரூம் மூடப்பட்டு, தண்ணீர், கிச்சன் கேஸ் என்று எல்லாம் நிறுத்தப்படுமாம். இந்தச் சவாலை முடித்தால்தான் அவை திறக்கப்படுமாம். இது அப்பட்டமான பிளாக்மெயில். பிக் பாஸ் ஒப்பந்தத்தில் மனித உரிமைமீறலை மீறிய விஷயங்கள்தான் அதிகம் இருக்கும் போல. 

“உள்ளே சுச்சா.. கக்கா இருக்குமோ” என்றார் ஆரவ்.” அழுகின கத்தரிக்காயை சாப்பிடச் சொல்வார்களோ?” என்று லூசுத்தனமாக.. (மன்னிக்க சுஜா…) வெள்ளந்தியாக கேட்டார் சுஜா. பிக் பாஸ் காதில் விழுந்தால் அடுத்த சவாலில் அதைச் சேர்த்து விடுவார். பார்த்து பேசுங்க மக்களே.. ‘எதுன்னாலும் இறங்கிட வேண்டியதுதான்’ என்று உற்சாகமாக நின்றார் வையாபுரி. ‘மனதின் உள்ளே என்னவெல்லாம் வேண்டிக் கொண்டாரோ”

முதல் கேள்வி. “வீட்டை விட்டு இப்போதே வெளியேற பணம் கிடைத்தால் யார் அதைச் செய்வார்கள்?” போட்டியாளர்கள் கூடிப்பேசி ‘சாபூத்ரி’ போட்டு ஆரவ்வை தேர்ந்தெடுத்தார்கள். அவர் சென்று கழிவில் கைவிட்டு கலக்கி கலக்கி தேடினார். சில நிமிடங்களுக்குப் பிறகு தேடி எடுத்து விட்டார். “இடது கையை விட்டிருக்கலாமோ” என்கிற யோசனை தாமதமாகத்தான் வந்தது அவருக்கு.

இரண்டாவது கேள்வி: “இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களில் ஒருவர் வெற்றி பெறக்கூடாது என்று நீங்கள் நினைப்பவர் யார்?” 

நீண்டநாட்கள் சிரமப்பட்ட பழைய போட்டியாளர்களிடமிருந்து ஒருவர்தான் வெற்றி பெற வேண்டும் என்பது வையாபுரியின் வெளிப்படையான கருத்தாக இருந்தது. மற்றவர்களும் அதை ஒருமாதிரியாக ஒப்புக் கொண்டார்கள். எனவே இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரீஷ். ஆனால் இவருக்கு நீண்ட நேரம் வாஷர் சிக்கவில்லை. “அடப்பாவிகளா.. ஒரு ரூபா கொடுத்தா கடைல இந்த வாஷரைக் கொடுப்பான். இப்ப இதுக்கு வந்த அந்தஸ்தைப் பாரு” என்பது அவர் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். எதை எதையோ எடுத்துப் பார்த்து பிரித்து ஏமாந்தார். பிறகு ஒருவழியாக வாஷரை தேடிக் கண்டெடுத்தார். 

மூன்றாவது கேள்வி: “வெற்றிக்காக தன் உயிர் நண்பனை குத்தக்கூட தயங்காத நபர் யார்?” இதற்கு சுஜாவை எல்லோரும் ஏகமனதாக தேர்ந்தெடுத்தார்கள். விளையாட்டு என்று வந்து விட்டால் அவர் மிகவும் ஆக்ரோஷமாக மாறி விடுகிறார் என்கிற காரணம் சொல்லப்பட்டது. முதலில் இதை உற்சாகமாக ஏற்றுக் கொண்ட சுஜா, காரணங்கள் வரவர முகம் சுருங்கினார். ஆனால் அதிர்ஷ்டம் சுஜாவின் பக்கம் இருந்தது. அவர் தேடிய சில நொடிகளிலேயே வாஷர் கிடைத்து விட்டது. 

**

‘கெஞ்சு, திருடு அல்லது பரிமாறு’ என்றொரு சவாலாம். போட்டியாளர்களின் புகைப்படம் அச்சிட்ட கார்டுகள் கலந்து வைக்கப்படும். ஒவ்வொரு போட்டியாளரும் அவரவர்களின் புகைப்படங்களை மற்றவர்களிடமிருந்து பெற்று 13 எண்ணிக்கையை சேர்க்க வேண்டும். ஒன்று சேர்த்த பிறகு காமிராவின் முன் காட்ட வேண்டும். முதலில் காட்டுபவருக்கு அதிக மதிப்பெண். கோல்டன் டிக்கெட்டுக்கான வாய்ப்பு கூடும். 

தாரையொலி ஒலித்தது. போட்டியாளர்கள் பரபரப்பாக சென்று கார்டன் ஏரியாவில் பார்த்தார்கள். ஒருவருக்கு கூட அவரின் புகைப்படம் இல்லை. மற்றவர்களின் புகைப்படங்கள் மட்டுமே கலந்து இருந்தன. எனவே, மற்றவர்களிடம் பேரம் பேசத் துவங்கினார்கள். சென்னை, பர்மா பஜாரில் நாம் ஏதாவது வாங்கச் சென்றால் அங்குள்ள வணிகர்கள், தங்களுக்குள் சங்கேத பாஷையில் பேசி விலைசொல்வார்கள். இல்லையென்றால் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அதைப் போலவே போட்டியாளர்களும் ரகசியமாக என்னெ்னனமோ செய்தார்கள்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், கோல்டன் கலரில் சில கார்டுகள் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்குமாம். அது ஒரு புகைப்படத்திற்கு ஈடான கார்டாம். 

இந்த கோல்டன் கார்டு சுஜாவிற்கு முதலில் கிடைத்தது. ஹரீஷ் 12 கார்டுகளை சேகரித்து விட்டு ஒன்றிற்காக அலையும்போது அவருக்கு தந்து உதவினார் சுஜா. (சுஜா மேல எந்த தப்பும் இல்லையே” என்று ஹரீஷ் முன்பு சொன்ன வசனம் காரணமாக இந்தப் பிரியம் இருந்திருக்கலாம்). கணேஷ் அந்தப்பக்கமாக சென்றபோது வையாபுரி அவரிடமிருந்து எதையோ திருடிக் கொண்டார். சற்று கோபமான கணேஷ் “நீங்க பண்றது சரியில்லைண்ணே” என்று வாதாடினார். பிறகு வையாபுரி அதை திருப்பிக் கொடுத்தார். என்ன நடந்ததோ.

13 புகைப்படங்களையும் முதலில் சேர்த்து பெருமையுடன் காமிராவின் முன்பு காட்டியவர் பிந்து. பிறகு ஒவ்வொருவராக திருப்பதி கோயிலில் லட்டு வாங்குவதைப் போல வரிசையில் முந்த அடித்துக் கொண்டார்கள். “யாராவது என்னோட ஒரு கார்டை வைத்திருந்தா கொடுத்துடுங்களேன்” என்று பதற்றமாக தேடிக் கொண்டேயிருந்தார் ஹரீஷ். ஆட்டுக்காரன் ஆட்டுக்குட்டியை தோளிலேயே போட்டு தேடியது போல, கார்டு அவருடைய பாக்கெட்டிலேயே இருந்தது. ‘மலம்’ என்று ஆங்கிலத்தில் அலுத்துக் கொண்டு கார்டுகளை மீண்டும் காட்டி பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டார். 

“இனிமே இன்னும் தெளிவா விளையாடணும் ப்ரோ.. என்னோட மூணு கார்டு சுஜா கிட்டதான் இருக்குன்னு நல்லா தெரியும். ஆனா இல்லவே இல்லைன்னு சாதிச்சிட்டா” என்று எரிச்சல்பட்டார் ஆரவ். போட்டியாளர்கள் இத்தனை நேரம் அலைந்து ஓய்வாக அமர்ந்தது பிக்பாஸிற்கு பிடிக்குமா, பிடிக்காது. வேலைநேரம் முழுவதிலும் கசக்கிப்பிழிவதுதானே முதலாளித்துவதனம்? “வீட்டினுள் கோல்டன் கார்டுகள் இன்னமும் மீதமுள்ளன. தேடி எடுப்பவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள்” என்று ஆசையைத் தூண்டினார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பதறி ஓடினார்கள். 

சிநேகனுக்கு அதிக அதிர்ஷ்டம் அடித்தது. குப்பைத் தொட்டியின் அடியில், ஆரவ் புகைப்படத்தின் பின்னால், பிரிட்ஜூக்குள் பச்சை மிளகாய்க்கு இடையில்’ என்று கார்டுகள் அவருக்கு கிடைத்துக் கொண்டேயிருந்தன. சந்தோஷத்தில் குதித்தார். ‘அடப்பாவிகளா.. நாமும்தான் பிரிட்ஜ்ஜை திறந்து திறந்து தேடினோம். கிடைக்கவேயில்லையே” என்று ஆதங்கப்பட்டார் ஹரீஷ். 

மறுபடியும் அவர்கள் அமர்ந்தபோது பிக்பாஸ் இப்போது ரேட்டை கூட்டினார். ‘இன்னமும் ஒரு கார்டு இருக்கிறது. அதற்கு ஐந்து மதிப்பெண்கள்” மறுபடியும் ஓடினர். ஆனால் இரவு வெகுநேரமாகி விட்டதால் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனால் ‘எந்தக் காரியத்தையும் முடிக்காமல் தூங்கிப் பழக்கப்படாத சுஜா நள்ளிரவு நேரம் தாண்டியும் எங்கெங்கோ தேடிக் கொண்டிருந்தார். பாவமாக இருந்தது. ‘ஏன் தூங்க வேண்டியதுதானே.. ‘என்று சிநேகன் விசாரிக்கும் போது “நீங்க தூங்குங்க” என்று விரட்டியடித்தார். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் உலகின் பல இடங்களில் மனிதர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். பல உயிரிழப்புகள் நேர்ந்தாலும் தங்கத்தின் மீதான ஆசை அவர்களுக்கு போகவேயில்லை. கேவலம் அது ஒரு உலோகம்தானே என்கிற அபத்தம் யாருக்கும் உறைக்கவில்லை. 

இதைப் போலவே மனிதர்களுக்கு ஆசையைத் தூண்டி விட்டால் அவர்கள் எத்தனை அற்பமான விஷயத்திற்குள்ளும் இறங்கத் தயாராகி விடுகிறார்கள் என்கிற விஷயம் இன்றைய நாளின் மூலம் மறுபடியும் நிரூபணமானது. போட்டியாளர்கள் விளையாட்டுக்காக செய்ததை விடவும் ஆயிரம் மடங்கு கீழ்த்தரமான வேலைகளை செய்யும் மனிதர்கள் வெளியே இருக்கிறார்கள். ஆசையை துன்பத்திற்கு காரணம் என்று எளிமையாகச் சொன்ன புத்தனின் குரல் எவர் காதிலும் விழுவதில்லை. 

“இனி வரும் நாட்களில் போட்டிகள் கடுமையாகும். இவர்கள் தாக்குப் பிடிப்பார்களா, தவறி விழுவார்களா?” என்கிற குரல் அச்சத்தையூட்டியது. என்னென்ன நடக்கவிருக்கிறதோ? ஆண்டவரே!.. நோ. அவரையல்ல. உண்மையான ஆண்டவரைச் சொல்கிறேன்.

சுரேஷ் கண்ணன்