Published:Updated:

இந்த விசித்திர டாஸ்க்குகளை கொடுத்தால் பிக்பாஸ் இனி ஹிட் பாஸ்!

ப.சூரியராஜ்
இந்த விசித்திர டாஸ்க்குகளை கொடுத்தால் பிக்பாஸ் இனி ஹிட் பாஸ்!
இந்த விசித்திர டாஸ்க்குகளை கொடுத்தால் பிக்பாஸ் இனி ஹிட் பாஸ்!

கழிவு நீருக்குள் கையை விடுவது, காருக்குள் நாள் கணக்கில் பட்டறையப் போடுவது என கப்பித்தனமான டாஸ்க்குகளை பிக் பாஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால்,  போட்டி இன்னும் மனதளவிலும், உடலளவிலும் கடுமையானதாக இருக்கும்  என‌ பீதியை வேறு கிளப்புகிறார்.  அதனால், உண்மையிலேயே மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக இருக்கும் சில டாஸ்குகளை பிக் பாஸூக்கு பரிந்துரைக்கிறோம்... துப்சுக்கு துப்சுக்கு பிக் பாஸ்...

ட்வீட்டராண்டவர் டாஸ்க் :

ஜிப்ரிஷ் மொழியில் பேசவே தடுமாறிய‌ ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கைக் கேட்டதும் கதி கலங்கிவிடுவார்கள். இதில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த சமயத்திலிருந்து இன்றுவரை கமல் போட்ட ட்வீட்கள் ஹவுஸ்மேட்ஸுக்கு கொடுக்கப்படும். அதை எடுத்து, படித்து, புரிந்து... அதற்கான விளக்கத்தை வேகமாகவும், சரியாகவும்  எவர்  முதலில் தெரிவிக்கிறாரோ, அவரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார். ஆழ்ந்த அனுதாபங்கள்...

ஈ அடிச்சான் டாஸ்க் :

`டாஸ்குகள் புதிதாக‌ யோசிக்கமுடியாமல், இந்தி பிக் பாஸில் இருந்து `ஈ அடிச்சான் காப்பி' அடிக்கிறார்கள்' என மக்களில் சிலர் ப்ராது கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அவப்பெயரை துடைக்கத்தான் இந்த அற்புதமான‌ டாஸ்க். இதில் பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றித்திரியும் ஈக்களை  போட்டியாளர்கள் அடித்து சேகரிக்க வேண்டும். அதிக ஈக்களை அடித்தவரே வெற்றியாளர். மாட்டு ஈக்களுக்கு போனஸ் புள்ளிகளும் உண்டு. அதாவது, டாஸ்க்கை ஈ அடிச்சான் காப்பி அடிக்காமல், ஈ அடிப்பதையே ஒரு டாஸ்க்காக கொடுக்கும் அம்பானி மூளை, வியாபார யுக்தி.

தெர்மராஜூ டாஸ்க் :

இது செல்லூர் ராஜூவிடம் இருந்து இன்ஸ்பையர் ஆன டாஸ்க். இதில் ஹவுஸ்மேட்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட தெர்மகோலை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்து நீச்சல் குளத்தில் இறங்கி நிற்கவேண்டும். யார் அதிக நேரம் அப்படி நிற்கிறாரோ, அவரே வின்னர். இதன் மூலம், டாஸ்குக்கு டாஸ்க்கும் ஆச்சு, நீச்சல் குளம் ஆவியாகாமலும் தடுத்தாச்சு. ஒரே முட்டையில் ரெண்டு ஆம்லேட்...

சங்கை கடிப்பான் டாஸ்க் :

ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் நெட்டையான‌, கட்டையான, மொட்டையான‌ ஒருவர் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் . மொட்டைகள் உள்ளே வந்ததும் ஹவுஸ்மேட்ஸின் சங்கை கடிக்க பாய்வார்கள். அவர்களது தலைமேல் நம் கையை வைத்தால் அமைதியாகி விடுவார்கள். இப்படி யார் அதிக நேரம் மொட்டையை சமாளித்து, சங்கில் கடி வாங்காமல் தப்பிக்கிறாரோ அவரே வெற்றியாளர். 

சர்வைவா டாஸ்க் :

ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் ஒரு பாக்ஸிங் கிளவுஸ் கொடுக்கப்படும். அதை கைகளில் மாட்டிக்கொண்டு சக போட்டியாளர்களின் முதுகில் நங்கு நங்கென குத்த வேண்டும். போட்டியின் முடிவில் யார் குறைவான குத்துகளை வாங்கியிருக்கிறாரோ அவரே வெற்றியாளர். இந்த டாஸ்க்கின் மூலம் நண்பனாக நல்லவர்போல் நடித்து முதுகில் குத்தும் நயவஞ்சகர்களை கண்டுபிடித்துவிடலாம். அதனால், நெவர் எவர் கிவ் அப்...

கிட்டு அண்ட் குட்டு டாஸ்க் :

இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருக்கும் ஒரு டம்மி செல்போன் கொடுக்கப்படும். சிம்கார்டே இல்லாத அந்த மொபைல் மூலம் யாரோ ஒருவருக்கு போன் செய்து, அவரிடம் பேசுவது போல் நடிக்கவேண்டும். அதிக நேரம் அசதியடையாமல் நடிக்கும் நபர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். 

செத்து செத்து விளையாடுவோம் டாஸ்க் :

இந்த டாஸ்கில், லிவிங் ரூமில் இருக்கும் ப்ளாஸ்மா டிவியில் பெரும்படம் ஒன்று ஒளிப்பரப்படும். ஜெயலலிதா இறந்ததிலிருந்து இன்று வரை அதிமுகவில் நடந்துவரும் சம்பவங்களை சொல்லும் அந்தப் படத்தை நன்கு கவனித்து பார்க்க வேண்டும். படம் பார்த்த மறுநாள், அந்த படத்திலிருந்து சில கேள்விகள் கேட்கப்படும். அதிமுகவில் மொத்தம் எத்தனை அணி என்ற கேள்வியில் ஆரம்பித்து எந்த அமைச்சர் எங்கே, எப்போது, எப்படி அணி மாறினார் என்ற கேள்வி வரை நிறைய குதர்க்கமான கேள்விகள் கேட்கப்படும். அதில் எவர் அதிக கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கிறாரோ, அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மேலும், பிக்பாஸ் வீட்டினுள் அவரின் ஞாபகத்திறனை பாராட்டி குட்டி சிலை ஒன்றும் நிறுவப்படும்.

ப.சூரியராஜ்

Just a tool-using animal