Published:Updated:

'சேவல் பண்ணை'யாக மாறிய பிக்பாஸ் வீடு! 96-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

'சேவல் பண்ணை'யாக மாறிய பிக்பாஸ் வீடு!  96-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
News
'சேவல் பண்ணை'யாக மாறிய பிக்பாஸ் வீடு! 96-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

'சேவல் பண்ணை'யாக மாறிய பிக்பாஸ் வீடு! 96-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

கல்லூரியின் கடைசிநாளில் என்னென்ன காட்சிகள் இருக்குமோ.. என்னென்ன வசனங்கள் இருக்குமோ… என்னென்ன கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், கண்ணீர்கள் இருக்குமோ அது அத்தனையும் இருந்தது இந்த பிக்பாஸில். 96 ஆம் நாள் மற்றும் 97 ஆம் நாளின் காட்சிகள் இன்று ஒளிபரப்பட்டது. 96 ஆம் நாள் நள்ளிரவில் பிந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அன்றைய நாள் விடிந்த பிறகான காட்சிகள் தொடங்கியது. எப்படியும் எவனும் ஆடப்போறதில்ல என்று தெரிந்து ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ சாங்கை வேக்கப் சாங்காக ஒலிக்கவிட்டார்கள்.  மற்ற நாட்களைப்போல் இல்லாமல் உற்சாகம் குறைவாக இருந்தாலும் எல்லாருமே ஆடினார்கள்.  கடமைக்கு ஆடிக்கொண்டிருந்த சிநேகன் முகத்தில் சோக ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தது.

‘100 நாள் கழிச்சு ஃபைனல்ஸ் வரைக்கும் வந்துட்டோம்.. எவ்ளோ டாஸ்க் பண்ணியிருக்கோம்.. என்னெல்லாம் போராடியிருக்கோம். கடைசி நாலுபேர்ல ஒருத்தரா அறிவிக்குறாங்க ஆனா அந்த மொமன்ட்டை எஞ்சாய் பண்ணமுடியல.. டாப் 4 ல வந்ததைவிட பிந்து போய்ட்டானு மட்டும்தான் மைண்ட்ல இருந்துச்சு. செம கேம் ஆனா…’ என்று கணேஷிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆரவ். உண்மைதான் டாப் 5 வந்தபோதுகூட எல்லோரும் கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள். ஆனால் இன்று நான்கு நடமாடிக்கொண்டிருந்தாலும் வீடே வெறிச்சோடிக் கிடக்கிறது. பிந்து விதைத்துவிட்டுச் சென்ற வெறுமை, விருட்சமாகி வீடு முழுவதும் படர்ந்துகிடப்பதை போட்டியாளர்களின் பேச்சில் இருந்து உணரமுடிந்தது. நேற்று தான் போவதற்கு மனதளவில் தயாராகிவிட்டதாகச் சொன்ன கணேஷ் ‘காப்பத்தப்பட்டதை உணர முடியல’ என்றார். ‘முன்னாடி லிமிட்டா இருந்துச்சு அப்பறம் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட் ஆகிட்டாங்க.. எப்படி அந்த க்ளோஸ்னஸ் வந்துச்சுனே தெரியல’ என்றார் ஆரவ். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘யாருமே ப்ரிப்பேரா இல்ல’ என்று ஹரிஷ் சொல்ல, ‘ஆமா சனிக்கிழமைக்காக ரெடியாயிருந்தோம்’ என்று ஆரவ் ஆமோதித்தார். ‘பணப்பெட்டி வந்தப்போ சின்ன பயம் இருந்தது நம்மளா போனா பணத்தோட போகலாம் ஆனா அவங்க அனுப்புனா எதுவுமே இருக்காது அப்படினு அன்னைக்கு சொன்னேன் அப்போ ஒரு பயம் இருந்துச்சு டக்குனு யாராச்சும் ஒருத்தர் பேரை சொல்லி கிளம்புங்கனு சொல்லிடுவாங்களோனு’ என்றார் சிநேகன். ‘யார் போயிருந்தாலுமே கஷ்டம்தான்’ என்றார் ஹரிஷ். ‘ஆரம்பத்துல ஏன்டா உள்ளே வந்தோம்னு நினைச்சிட்டு இருந்தாங்க கடைசில இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க’ என்று பிந்துவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் சிநேகன். 

**

இவர்கள் புலம்பல்களையெல்லாம் கேட்டபோது ‘நெல்லாடிய நிலமெங்கே’ என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது.  ’15 பேர் உட்கார்ந்து சாப்பிட்ட டேபிள் இப்போ 4 பேர்ல வந்து நிக்குது’ என்று ஆரவ் கடந்த கால நினைவுகளை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, சிநேகன் எதிர்காலம் குறித்த கற்பனைக்குத் தாவினார். ‘நாளைக்கு நம்ம பேரன்கிட்ட சொல்லிட்டு இருப்போம்ல மொபைல்லாம் இல்லாம 100 நாள் இருந்தோம்னு.. காட்டுவாசி மாதிரி இருந்தீங்களா தாத்தானு கேட்பான்’ என்று சிநேகன் பேரன் லெவலுக்குத் திங்க் பண்ண, ஹரிஷ் ‘அடுத்த வருசமாச்சும் கல்யாணம் பண்ணுவீங்களா?’ என்று கேட்டு சிநேகனை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தார். ‘இதுக்கப்பறம் ஒரு பொண்ணு புடிச்சிருக்குனு சொல்லி வந்தா பண்ணலாம்’ என்று இழுத்தார் சிநேகன். (பிக்பாஸூ  கேமரால ஓட்டுதான கேட்கக் கூடாது.. பொண்ணு கேட்கலாம்ல..). ஆனாலும் என்ன நினைத்தரோ ‘வரலைனாலும் பரவால்ல இப்பவே நல்லாதான் இருக்கு இப்படியே ரன் பண்ணிடுவோம்’ என்று சேஃப்டிக்கு சொல்லிவைத்தார்.(அடுத்த சீசனுக்கும் மொத ஆளா ரெடி ஆவார் போல சிநேகன்) ‘அதுக்கப்பறம் இல்லைமா வேணாமானு சொன்னீங்கன்னா தெரிஞ்சா கொலைகாரனாகிடுவேன்’ என்று நண்பரின் மீதுள்ள தன் அக்கறையைக் காட்டினார் ஆரவ்.

‘பரணியை அட்வைஸ் பண்ணி ரெண்டு வாரம் வீட்டுல இருக்க வச்சிருக்கலாமோங்குற குற்றவுணர்வு இருக்கு’ என்று அடுத்த டாபிக்கை எடுத்தார் சிநேகன். ‘நாளைக்கு அவன் வந்தா ஸாரி கேட்கணும்’ என்று ‘பகிரங்கமாக’ அறிவித்தார். ‘பாத்த உடனே புடிச்சவங்க நிறைய பேரை பழகினப்பறம் புடிக்கல… பாத்த உடனே பகைச்ச நிறைய பேரை பழகினப்பறம் பிடிச்சது’ என்று சொல்லி ‘முன்முடிவு’ எவ்வளவு மோசமானது என்ற பாடத்தை இந்த வீட்டில் கற்றுக்கொண்டதாகச் சொன்னார் சிநேகன். மிகச் சரியான வார்த்தை.  ‘இவர்கள் இப்படித்தான்’ என்று தாமாகவே ஒரு கண்ணோட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி எல்லோரையும் அணுகியதுதான் காயத்ரி போன்றவர்களுக்கு சிலர் என்ன செய்தாலுமே தவறாகத் தெரிந்தது. 

**

யாருமற்ற பெண்களின் அறையில் கணேஷ் தனியாக நடந்து வெறுமையின் நீளத்தை அளந்துகொண்டிருந்தார். ‘தேரடிச்ச வீடு மாதிரி இருக்குங்க’ என்று தலையில் கைவைத்துக்கொண்டு சொன்னார் சிநேகன் . என்னடா இவிய்ங்க புலம்பிக்கிட்டே இருக்காய்ங்க என்று நினைத்துக்கொண்டிருந்தபோது ஆரவ் தன் காமெடியைப் புகுத்தினார். ஹரிஷை அழைத்து தன் சமையலை டேஸ்ட் பார்க்கச் சொன்னார். ‘உங்களுக்கு ஒரு ட்ரிக் சொல்றேன். சில சமயம் நாம சமைச்சு முடிச்சு டேஸ்ட் பாக்கும்போது கன்றாவியா இருக்கும். அப்போ இந்த கொத்தமல்லிய மேலாப்புல தூவி விட்டோம்னா இவன் டேஸ்ட்டை தூக்கிக் கொடுத்துடுவான்’ என்று சொல்லி கொத்தமல்லியைத் தூவிக்கொண்டே ‘ஆனா இப்போ அதுக்காக பண்ணலை பொதுவா சொல்றேன்’ என்று முடித்தது, ப்ரோ செம டைமிங் ப்ரோ. 

‘வெளில போய் ஒருத்தனுமே கூப்டலைனா பேசாம சமையல்காரனா போயிடலாம்’ என்று சிநேகன் சொல்ல, ‘அதுக்கு கண்டிப்பா கூப்பிடுவாங்க’ என்று ஆரவ்வும் ஒத்துக்கொண்டார். ‘எல்லாருக்கும் ஒரு சுயதொழில் இருக்கு. ஒண்ணா சேர்ந்து ஓட்டல் வச்சிடலாம்’ என்று ஐடியா கொடுத்தார் சிநேகன்.

நேற்று எவிக்சன் என்ற பெயரில் ஹார்ட் பீட்டை எக்குத்தப்பாக எகிற வைத்துவிட்டு, இன்று இதய தின சிறப்பு டாஸ்க் கொடுத்தார்கள். மன் கீ பாத் - மனதில் பட்டதை பலூனில் எழுதி பறக்கவிடவேண்டும். ஆரவ் தனது அப்பா அம்மாவிடமும் தமிழ் மக்களிடம் ஏதாவது விஷயத்தில் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படிக் கேட்டார். சிநேகன், தன் ஊர் மக்களுக்கு, நண்பர்களுக்கெல்லாம் ஸாரி சொன்னார். எவ்ளோ சண்டை போட்டாலும் உடனே மன்னிப்பு கேட்ருங்க இதுதான் சிநேகனின் மெசேஜாம். ஹரிஷ் சில வாட்ஸப் பார்வேர்களை எழுதிவிட்டு எப்படி மற்றவர்களுக்காக வாழணும்ங்குறதை இங்கே கத்துக்கிட்டதாகச் சொன்னார். இதயத்தில் கை வைத்து ‘இங்க என்ன சொல்லுதோ அதைக் கேட்டு நடந்துகிட்டா வாழ்க்கை சிறப்பா இருக்கும்’ என்று முடித்தார். கணேஷ் தன் பங்குக்கு நான்கு அட்வைஸ்கள் பலூனில் எழுதி பறக்கவிட்டார்.

**

அடுத்த டாஸ்க் பற்றிய அறிவிப்பை வாசித்தார் ஹரிஷ். ‘டேஷ் அண்ட் டேஷ்’ என்னனு கெஸ் பண்ணுங்க பாப்போம்? என்று சஸ்பென்ஸ் வைக்க, ஆரவ் சில அட்டம்ப்டுகளுக்குப் பிறகு ‘Freeze and Release’ என்று சரியாக யூகித்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்து டாஸ்க் வைக்கிறார் என்பது தெரிகிறது. ஏனென்றால் கொஞ்ச நேரம் முன்புதான் ஃப்ரீஷ் டாஸ்க்கின்போது சந்தோஷமாக இருந்ததாக சிநேகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஹரிஷ். 

5:15 மணிக்கு ஃப்ரீஷ் சொன்னார் பிக்பாஸ். அந்த நேரத்தில் சிநேகன் வலைபோட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். ஹரிஷ் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆரவ்வும் கணேஷூம் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..’ என்று சிவாஜி பாடி முடித்ததும் அலைகள் பறவைகளெல்லாம் ஃப்ரீஷாகி நிற்பது போல் அசையாது நின்றார்கள். ஒருவரை உள்ளே அனுப்பினார்கள். ஏற்கெனவே இவர் இந்த வீட்டிற்குள் ஒருமுறை வந்திருக்கிறார். அப்போது இவரை கண்டுகொள்ளாததுபோல் இருக்க வேண்டும் டாஸ்க் கொடுத்திருந்தார்கள். இப்போது ஃப்ரீஷாகி நிற்கவைத்துவிட்டு அனுப்புகிறார்கள். ‘எல்லாம் ஷோ ரூம் பொம்மை மாதிரியே நிக்குறாங்க’ என்று கலாய்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தவர், ஆரவ்வைப் பார்த்து, ‘பாடி பீடி மாதிரி ஆயிடுச்சு’ என்று நக்கலடித்தார். கணேஷூக்கு சலூன் சால்வை போர்த்தி முடிவெட்டத் தொடங்கினார். ‘லைட்டா வெட்டுங்க’ என்று கணேஷ் சொல்ல, ‘லைட் ஹவுஸ் மாதிரி இருக்க எங்க லைட்டா வெட்டுறது’ என்று மீண்டும் ரகளையை கொடுத்தார். 

ப்ரேயரின்போது எல்லாரும் வெயிலில் நிற்க ‘மிஸ் மயக்கம் வர்றமாதிரி இருக்கு மிஸ்’ என்று நடிப்பைப் போட்டு மரத்தடியில்போய் அமர்ந்துகொள்ளும் ஸ்கூல் பையன்மாதிரி சிநேகன் ‘பிக்பாஸ் எறும்பு கடிக்குது பிக்பாஸ்’ என்று ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கி ரிலீஸ் ஆனார். ‘உள்ள போனா நம்மளை வச்சி செஞ்சிருவாய்ங்களே’ என்று சொல்லி சேரில் அமர அவருக்கு மீண்டும் ஃப்ரீஷ். ‘எப்ப பாரு கொஸ்டீனா கேக்குறீங்களே.. இதெல்லாம் தன்னால வர்றதா இல்ல நைட் புல்லா யோசிப்பீங்களா’ என்று கணேஷ் மீது தன் அட்டாக்கைத் தொடங்கினார் அந்த புதியவர். ‘எங்க மிஸ்டர் கவிஞர்.. கவி.. கவி…’ என்று கேட்டு வெளியே வந்தவர், சிநேகனுக்கு தலையில் தண்ணியடிச்சு, ‘ரஜினி ஹேர் ஸ்டைல் பண்ணவா?’ என்று கேட்க, அருகிலிருந்த ஹரிஷ் லைட்டாக சிரித்தார். பின் எல்லாருக்கும் விடுதலை தரப்பட்டது.

**

புதிதாக வந்தவரோடு சேர்த்து ஐவரும் கிச்சனில் இருக்க, ஸ்டோர் ரூம் மணி ஒலித்தது. நான்கு ஸ்பெஷல் கேக்குகள் அனுப்பியிருந்தார்கள். உள்ளே சென்று கேக்கை எடுத்துவந்ததும் ஃப்ரீஷ் என்று பிக்பாஸ் உத்தரவிட கையில் கேக்குடன் சிலையானார்கள். புதிதாக வந்தவர் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். சிநேகன் முகத்தில் கேக்கைப் பூசினார். ‘இப்பதான உங்களை நல்லவர்னு சொன்னோம்’ என்று ஆரவ் சொல்ல, அடுத்த அட்டாக் ஹரிஷிற்கு, அவர் முகத்தில் பூசியதோடு தலையிலும் கொஞ்சம் வைத்தார். ‘பூசுறதுதான் பூசுறீங்க ஹேப்பி 100th டேனு சொல்லி பூசுங்க’ என்ற கணேஷ் சொன்ன அறிவுரையைக்கேட்டு ‘Happy 100 th day’ என்று சொல்லி கணேஷ் முகத்தில் பூசினார். அவர் காபியிலும் கொஞ்சம் கேக்கைப் போட்டுவிட்டார். அடுத்தது ஆரவ். முகத்தில் பூசியது பத்தாமல் இரண்டு பேன்ட் பாக்கெட்டிலும் போட்டுவிட, ஆரவ் அங்கும் இங்கும் ஓட, கணேஷ் ஃப்ரீஷ் சொல்லப்பட்டதை நினைவுபடுத்தினார். ‘ப்ளீஸ் பிக்பாஸ் ரிலீஸ் பண்ணிவிடுங்க’ என்று ஆரவ் கெஞ்ச, ‘யாராச்சும் ஓடிவந்து அடிப்பீங்கனு தெரியும்’ என்று அவரே லீட் கொடுத்தார் வந்தவர்.  அவர் வெளியில் சென்று கதவு திறப்பதற்காக காத்திருக்க, பிக்பாஸ் ரிலீஸ் சொல்ல, எல்லாரும் ஓடிவந்து அவர் முகத்தில் கேக் பூசினார்கள். ஆரவ் அவருடைய பேண்ட் பாக்கெட், சட்டை பாக்கெட் என எல்லா இடத்திலும் கேக்கைக் கொட்டி பழிதீர்த்துக்கொண்டார்.

**

சிநேகனுக்கு ஒரு ஸ்பெஷல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலிருந்து அவர் பார்த்த சம்பவங்களை வைத்து பிக்பாஸ் பாடல் ஒன்றை உருவாக்க வேண்டும். சிநேகனுக்கு எழுதுவதற்கு நேரம் கொடுக்கப்பட அந்த நேரத்தில் ஒவ்வொருவரையாக கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்துப் பேசினார் பிக்பாஸ். முதலில் கணேஷ். ‘இந்த போட்டியில் இவ்ளோ தூரம் வருவீங்கனு நினைச்சீங்களா?’ என்று கணேஷிடம் கேட்டார். அதற்கு அவர், ‘இல்லை. இந்த வீட்ல நிறைய கத்துக்கலாம்னு வந்தேன். யாரையும் இதுவரைக்கும் ஹர்ட் பண்ணதில்லைங்குறதை நினைச்சு பெருமைப்படுறேன். காலையை எஞ்சாய் பண்ணி பழக்கம் இல்ல.. ஆனா நீங்க பண்ண வச்சிட்டீங்க’ என்றார். 

ஆரவ், ‘இங்க நிறைய பேர், ஆல்ரெடி செலிபிரட்டி. மக்களுக்குத் தெரிஞ்ச முகம். அதனால அவங்களுக்குத்தான் ஆதரவு கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லைனு மக்கள் நிருபிச்சுட்டாங்க. குறும்படம்ல அசிங்கப்பட்டது உட்பட எதையும் மறக்கமுடியாது’ என்றார். நடுவில் பிக்பாஸ் குரலுக்கு அடிமையா இருந்தோம் என்று வேறு ஒருவரி சேர்த்துக்கொண்டார். 

ஹரிஷ், பொறுப்பு, நிதானம், பொறுமை என்று டிக்சனரியில் இருக்கும் எல்லா நல்ல வார்த்தைகளையும் இங்குவந்து கற்றுக்கொண்டதாகச் சொன்னார். எல்லாரும் நெருங்கி பழகுனதுக்கப்பறம் அவங்கதானே சரினு சில விஷயங்கள் விட்டுக்கொடுத்திருப்பதாகச் சொன்னார். கடைசியாக பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ கிடையாது அது ஒரு வாழ்வியல் முறை என்று முடித்தார்.

சிநேகன், இந்த நிகழ்ச்சியின் மூலம் 2 பாக்யங்கள் கிடைத்திருப்பதாகச் சொன்னார். ஒன்று அவருடைய அப்பாவை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.  உண்மையா இருக்கேன் அது பைத்தியக்காரத்தனம்னோ நான் நடிக்கிறேன்னோ மத்தவங்களுக்குத் தோணிடுமோன்னு பயமா இருக்கு என்றார். இங்க முட்களோடு கை குலுக்கிய பூக்களோடு சண்டை போட்ட தருணங்கள் ஏராளம் என்றார். யார் முட்கள்? யார் பூக்கள்? என்பதையும் சொல்லியிருக்கலாம். வீட்டைவிட்டு போக மனசு இல்ல என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினார். ‘வெளில என்னை எல்லாரும் எப்படி பார்க்கப்போறாங்கனு தெரியல அதை நினைக்கும்போது பயமா இருக்கு’ என்று அவர் சொல்லும்போது குரலில் நிஜமாகவே பயம் தெரிந்தது. 

** 

ஹரிஷ், கணேஷ், ஆரவ் வெளியில் சோபாவில் அமர்ந்திருக்க, சிநேகன் உள்ளே எழுதிக்கொண்டிருக்க பிக்பாஸ் ஃப்ரீஷ் சொன்னார். இம்முறை தப்பாட்டாக்காரர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். மைக்கே தேவைப்படாமல் மேளச்சத்தம் பொளந்து எடுக்க, உள்ளுக்குள் ஆடவேண்டும் என்று தோன்றினாலும், பிக்பாஸின் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அசையாமல் நின்றார்கள். ஹரிஷ் மட்டும் தலையை மெதுவாக ஆட்டினார். பிறகு ரிலீஸ் சொல்லப்பட எல்லாரும் எழுந்து ஆடினார்கள். இப்போ எல்லாம் ஆடிட்டு இருக்கும்போது ஃப்ரீஷ் சொல்வீங்க அதான என்று அசால்டாக பார்த்துக்கொண்டிருந்தால் பெரிய ட்விஸ்ட் இரண்டு நிமிடம் முழுமையாக ஆடி டயர்டான பிறகு ஃப்ரீஷ் சொன்னார். அப்படியும் கேட்காமல் ஆரவ்வும் கணேஷூம் அவர்களுக்கு  ஆடிக்கொண்டிருந்தார்கள் அவர்களுக்குக் கை கொடுத்து அனுப்பி வைத்தார்கள். 

சிநேகன் தான் எழுதிய கவிதையை வாசித்துக் காண்பித்தார். ‘இது எங்கள் வீடு’ என்று தொடங்கிய அந்தக் கவிதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்சப்டை புட்டுபுட்டுவைப்பதுபோல் பொருத்தமாக இருந்தது. சில வரிகள் ரசிக்கும்படி இருந்தது. குறிப்பாக, ‘இது பிக்பாஸ் கற்பித்த பாடம், இதில் கலைந்தது எங்களின் வேடம்’ என்ற வரிகள். இந்தக் கவிதையே அருமையாக இருந்தது. அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் சிநேகன் இன்னொரு பாடலும் தயார் செய்திருந்தார். பிக்பாஸூக்கு நன்றி சொல்வது போல் இருந்த அந்தப் பாடலை கோரஸாகப் பாடுகிறோம் என்று சொல்லிக் கொதறிஎடுத்தார்கள். விவேகம் க்ளைமேக்சில் காஜல் பாடுவதைப் போல சம்பந்தமே இல்லாமல் அந்தப் பாடல் வெறியேற்றியது. ஏன்யா ஏன்??

**

அடுத்ததாக இன்றைய நாளின் டெய்லி டாஸ்க்  இரவு 9 மணிக்கு அறிவித்தார்கள். டாஸ்க்கின் பெயர் ‘ஆட்டோகிராப்’. ஹவுஸ்மேட்ஸ் மற்றவர்களுக்குச் சொல்ல நினைக்கும் கடைசி மெசேஜை அவர்களின் டீசர்டில் எழுதவேண்டும். ‘கடைசி நாள்ல மெமரீஸ் மாதிரி கேம்ஸ் கொடுக்குறாங்க’ என்றார் ஆரவ். கார் டாஸ்க், பலூன் டாஸ்க்கெல்லாம் பார்த்தபோது, அநேகமாக கடைசி நாளில் உயிருக்கு உலைவைக்கும் டாஸ்க்குகளெல்லாம் கொடுப்பார்கள் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கடைசி வாரம் கொடுத்த டாஸ்க் எல்லாமே.. உடலளவில் காயப்படுத்தாத, மனதளவில் மகிழ்ச்சியளிக்கிற டாஸ்க்குகளாக கொடுத்தது சிறப்பு. 

ஹரிஷ், ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் டீசர்டில் தன் மெசேஜை எழுதினார். கவிஞருக்கு கனவு நிறைவேற வாழ்த்துகள் சொன்னார். கணேஷை மிஸ்டர். கேள்வி நாயகன் என்று எழுதினார். ஆரவ்விடம் மைக்கை கழட்டச் சொல்ல, அவர் டீசர்ட்டை என்று நினைத்து ‘கழட்டணுமா?’ என்று ஷாக் ஆனார்.  ஆரவ்வை ’டேய் நண்பா’ என்று எழுதியிருந்த ஹரிஷ், ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் பாக்காதீங்க கவிஞரே..!’ என்று சிநேகனிடம் ரெக்வஸ்ட் வைத்தார்.

கணேஷ், ஒவ்வொருவருக்கும் டீசர்ட்டின் ஒரு பக்கம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்தார். ஆரவ் சிநேகனுக்கு இது முடிவல்ல நம் உறவின் ஆரம்பம் என்று எழுதியிருப்பதாகச் சொல்ல ‘என்ன முத்தச் சத்தம்லாம் கேக்குது’ என்று ஹரிஷ் கலாய்த்தார்.

சிநேகன் ஒவ்வொருவருக்கும் ஒரு மைக்ரோ கவிதையாக எழுதினார். ‘என் நினைவுக்குள் எப்போதும் நீ இருப்பாய். உன் நிழலினைத் திரும்பிப்பார் நான் இருப்பேன்’ என்று ஆரவிற்கு எழுதியதற்கு ஹரிஷ் விளக்கம் கேட்க, சிநேகன் கொடுத்த விளக்கத்திற்கு ‘வெரி டச்சிங்’ என்றார். கவிஞர் எனக்காக எழுதிய முதல் கவிதை என்று பெருமைப்பட்டுக்கொண்டார் ஆரவ்.

ரொம்ப எமோசனல் பிந்து இருந்திருக்கணும் என்று அனைவரும் மீண்டும் ஃபீல் ஆனார்கள். ஹரிஷ் பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்க பிரியாணி வந்தது. அனைவரும் சாப்பிட்டு முடிக்க விளக்குகள் அணைக்கப்பட்டது.

**

97 ஆம் நாள் விடிந்தது. காலை 7 மணிக்கு சிநேகன் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ஒரு நாள் மட்டுமே என்று உணர்த்தும் விதமாக 1 Day to Go என்ற செய்தி டிவியில் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ‘தோஸ்து படா தோஸ்து’ பாடலை ‘வேக்கப் சாங்’காக ஒலிக்கவிட்டார்கள். எல்லாரும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் ரயில் ஓட்டி விளையாண்டார்கள். படுக்கையின் மேல் ஏறிக்குதித்தார்கள். தலையணைகளை தூக்கிப்போட்டு கொண்டாடினார்கள். சிநேகன் பல்டியெல்லாம் அடித்தார்.

அனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ‘உடம்பெல்லாம் சோர்வாகிடுச்சு’ என்றார் சிநேகன். மற்றவர்களும் அதையே வழிமொழிந்தார்கள். பூண்டு உரித்துக்கொண்டிருந்த ஆரவ், ‘இதைப் பார்த்ததும் பிந்து பூண்டு சாப்பிட்டது ஞாபகம் வருது’ என்று பிந்துவின் டாஸ்க்கை நினைவுபடுத்தினார். எலுமிச்சை, வேப்பிலை, பூண்டு, பச்சைமிளகாய் எல்லாம் பிந்து சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லி இதில் எது சாப்பிடுவது கஷ்டம் என்று விவாதித்தார்கள். ‘ஹைதராபாத்ல பச்சை மிளகாய ப்ரேக்ஃபாஸ்டாவே சாப்பிடுவாங்க ப்ரோ’ என்றார் ஹரிஷ். 

சிநேகன் டைனிங் டேபிளுக்கு நடுவில் இருக்கும் கேமராவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். (இப்போ தெரியுது ஏன் கவிஞர்க்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு..!) சாப்பிட்டீங்களா என்று சிநேகன் கேட்க அது ஆமா என்பது போல் தலையாட்டியது. ‘ எங்க வீட்ல ஒரு வாய் கஞ்சி சாப்பிடுங்க?’ என்று கேட்டபோது அது இல்லை என்பதுபோல் தலையாட்டியது. பிக் பாஸ் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் எல்லாப் பக்கமும் தலையாட்டியது. 

**

இது நாள் வரை நூறுநாட்களை இந்த வீட்டுக்குள் எப்படி கடக்கப்போகிறோம் என்று சிந்தித்துக்கொண்டிருந்த சிநேகனின் மனம் இப்போது இறுதிநாளை எட்டிவிட்ட நிலையில் எப்படி உலகத்தை சந்திக்கப்போகிறோம் என்ற பயத்துக்குள் புகுந்துகொண்டதை அவரின் பேச்சில் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘வெளி வாழ்க்கை நம்மளை பொரட்டி போட்ருமோனு பயமா இருக்கு. இங்க நாம எல்லாத்தையும் ரொம்ப ஓப்பனா காமிச்சுட்டோம். தெரிஞ்சு காமிச்சது வேற தெரியாம காமிச்சது வேற.. அவன் நம்மளை படிச்சுட்டான்.. ஆயிரம் விமர்சனம் பார்த்தாச்சு நம்ம வேலையை நாம பாக்கப்போறோம். ஆனா நம்ம பலம், பலவீனம் அவனுக்குத் தெரியும். நம்ம பலத்தையும், பலவீனத்தையும் கைல எடுத்து நம்மளை மிஸ் யூஸ் பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கு.’ என்றதோடு ஜூலிக்கு நடந்ததையும் நினைவுபடுத்தினார். கூடுன கூட்டத்துல பாதிபேர் விமர்சனம் பண்றவங்கதான் என்று சொல்ல.. ‘அவ்ளோ பிரச்னை இருக்காது’ என்று ஆரவ் சமாதானாம் சொன்னார். ‘கொஞ்ச நாள் வெளி உலகத்தவிட்டு ஒதுங்கி இருக்கணும்’ என்று ஹரிஷ் அறிவுரை சொன்னார். ‘மக்கள் மனதை வென்றவர் யார் என்பது நாளை தெரியவரும்’ என்ற குரலுடன் முடிவுற்றது அன்றைய நாள். உண்மையில் சிநேகனின் பயத்திற்கு பதில் சொல்லவேண்டிய இடத்தில் நாம்தான் இருக்கிறோம். ‘ஒருத்தனோட பலவீனத்தோட மட்டும் விளையாடக்கூடாது’ என்று சிநேகன் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லியிருக்கிறார். 100 நாள் முடிந்து அவர்கள் வெளிவந்த பிறகு, நாம் எவர் பலவீனத்தோடும் விளையாடாதிருப்போம்.