Published:Updated:

ஹாலுசினேஷன்... மருத்துவ முத்தம்... பிக்பாஸ் மேடையில் கமல் எடுத்த தசாவதாரம்!

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி
ஹாலுசினேஷன்... மருத்துவ முத்தம்... பிக்பாஸ் மேடையில் கமல் எடுத்த தசாவதாரம்!
ஹாலுசினேஷன்... மருத்துவ முத்தம்... பிக்பாஸ் மேடையில் கமல் எடுத்த தசாவதாரம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த பிக் பாஸ் இந்தியில் அறிமுகமானபோது, ‘இதனை தொகுத்து வழங்க அமிதாப்பச்சனே வருகிறார்’ என்று பாலிவுட் சிலாகித்தது. அடுத்து அதிக சீஸன்களை சல்மான் தொகுத்து வழங்கினார். அந்த பிக் பாஸ் தமிழுக்கு வருகிறது என்றவுடன், ‘யார் தொகுத்து வழங்குவார்’ என்ற மிகப்பெரிய கேள்விக்கு விஸ்வரூப பதிலாய் வந்தார் கமல்ஹாசன். இவரா? என்ற சிலரது குரலில் ஆச்சர்யம், சிலரது குரலில் சந்தேகம். கமல் தொகுத்தார், வாரத்தில் இரண்டு நாட்கள் பேசினார். வாரத்தின் ஐந்து நாள்கள் பிக் பாஸ் பார்க்காதவர்களும் ‘சனி, ஞாயிறுகளில் கமலுக்காகப் பார்க்கிறேன்’ என்று கூறுமளவுக்கு தான் உலக நாயகன் என்பதை தொலைக்காட்சியிலும் நிருபித்தார். பிக்பாஸ் மேடையில் கமலின் அந்த சுவாரஸ்யமான 10 தருணங்கள் இதோ...

அனுயா எலிமினேஷன்:

அனுயா பிக் பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டபோது வீட்டினுள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் கொடுப்பார். அதில் சினேகனுக்கு ''புளுகு மூட்டை'' என்ற பட்டத்தை அளிப்பார். அதற்கு. ‘ஏன்’ என கமல் கேட்க, ‘தலைவர்கள் நிறைய பொய் சொல்லணும்’ என்று அனுயா பதில் அளிக்க... சட்டென கமல், ‘ஓ! நீங்கள் வீட்டில் உள்ள தலைவனை கூறினீர்களா? எனக்கு வெளியே இருக்கும் தலைவர்கள் நினைவில் வந்து விட்டார்கள்’ என சர்காஸம் செய்து தமிழக அரசியல்வாதிகளின் நிலையை போட்டுடைப்பார்.

ஹாலுசினேஷன்:

ஜூலி ஓவியாவைப்பற்றி பொய்யான தகவலை கூறியதற்கு குறும்படம் வழியே பதில் அளிப்பார் கமல். அப்படியும், ‘இது என்னுடைய மானிப்ளேட்டிவ் பெர்சனாலிட்டியாக இருக்கும்’ என ஜூலி சமாளித்தபோது, ‘இது மானிப்ளேஷன் அல்ல ஹாலுசினேஷன்’ என ஆங்கிலப் புலமையுடன் சீறினார் கமல். கைதட்டல்களால் ஜூலியை ஷட்டப் செய்தனர் பார்வையாளர்கள்.

தலைவன் vs திருடன்:

வைரம் திருடும் டாஸ்க்கில் ஷக்தி வெற்றிபெற்று உண்மையைப் போட்டுடைப்பார். அப்போது கமல், ‘ஏன் டாஸ்க்கில் எமோஷனலாக முடிவெடுத்தீர்கள்’ என்று கேள்வி கேட்பார். அதற்கு ஷக்தி, ‘தலைவனாகவும், திருடனாகவும் இருக்கறது கஷ்டமா இருக்கு சார்’ என்பார். கமல் உடனே குறுக்கிட்டு, ‘நீங்கள்லாம்தான் அரசியலுக்கு வரணும்’ என்று சொல்லி அரசியல்வாதிகளுக்கு செக் வைப்பார்.

தன்னிலை விளக்கம்:

பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டபோது, ‘இந்த நிகழ்ச்சி தவறாக வழிநடத்துகிறது’ என்ற குற்றச்சாட்டுக்கு பிக் பாஸ் மேடையிலேயே பதிலளித்தார் கமல். ‘பார்க்காதவர்கள்கூட விமர்சிக்கிறார்கள்.. பார்த்துவிட்டு விமர்சியுங்கள். பார்த்தவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தொடர்ந்து பாருங்கள். உங்களுக்கு பிடித்தும் போகலாம்’ என்றார். ‘இது சமூகத்தின் ஒரு பயிற்சி. ஜீஸஸ் காலத்து விஷயம்’ என்று வரலாறு பேசி வெற்றிபெற்றார் கமல். 

வெளியேறவும் தயங்க மாட்டேன்:

நிகழ்ச்சியின் நடுவே மனநிலை பாதிக்கப்பட்டவர்களைபோல் போட்டியாளர்கள் நடிக்கும் ஒரு டாஸ்க் இருந்தது. அது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த வார இறுதியில் கமல் மேடையில் ஓப்பனாக எச்சரிக்கை விடுத்தார். ‘இதனை விஜய் தொலைகாட்சி தொடருமாயின், நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன்’ என்றார். ‘சொன்னதை செய்யும் தொகுப்பாளர்’ என்ற பிம்பத்தையெல்லாம் நொடிப்பொழுதில் உடைத்தார் கமல்.

சீரான பாடம்:

காயத்ரி, ‘சீர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை’ என்று சொன்னபோது ஒருமுறை அழுத்தி, ‘சீர் என்ற வார்த்தைக்கு உண்மையாலுமே அர்த்தம் தெரியாதா? என்று கேட்டபோதும் சரி, தலைமுடியை தூக்கி காட்டி காயத்ரி சொன்ன கெட்ட வார்த்தையை சபை நாகரிகத்தோடு சைகையில் கூறியபோதும் சரி.. கமல் ஒரு சீரான ஆசான் என்பதை நிரூபித்தார்.

அனிதாவை கொன்ற நீட்:

இது ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி, இதில் கமல் ஒரு தொகுப்பாளர். இதையெல்லாம் தாண்டி பிக் பாஸ் மேடையில் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட இளந்தளிர் அனிதாவுக்காகப் பேசினார். சமூக அக்கறை என்ற நோக்கில் அல்லாமல் உண்மையான கோபத்தை வெளிப்படுத்தினார். ‘இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். இங்கு சொல்ல எனக்கு சுதந்திரம் தந்தவர்களுக்கு நன்றி’ என்றும் கூறினார். இதெல்லாம் கமலால் மட்டுமே முடியும்.

மருத்துவ முத்தம்:

தமிழ் அகராதியில்கூட இல்லாத வார்த்தைகளை கமல் மூலம் அறிய முடியும். ஓவியா விஷயத்தில் ஆரவ்வை தனியாக கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பேசிய கமல், ‘எதையோ அவர் திரும்ப தர வேண்டும் என்கிறாரே என்ன ஆரவ்’ என கேட்க... ஓவியாவுக்கு முத்தம் அளித்தை ஆறுதலுக்காக கொடுத்தேன் என ஆரவ் சொல்ல. ‘ஓ! மருத்துவ முத்தமா? என கமல் கேட்டதும் ஆரவ் முகத்தில் வியர்வை கொட்டியது. அதனை போட்டியாளர்களிடம் கூறச்சொன்ன இடத்திலும் கமல் நியாயத்தின் பக்கம் நின்றார். 

சுயமரியாதை ஜாஸ்தி:

‘இந்த நிகழ்ச்சி விந்தியமலையைத் தாண்டி இங்கு வந்துள்ளது. அந்த இந்தியா வேறு, இந்த இந்தியா வேறு என்று கூறவில்லை. இந்த இந்தியாவுக்கு சுயமரியாதை ஜாஸ்தி’ என்று பேசினார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எந்த ஒளிபரப்பிலும் தவறான காட்சிகளோ... புகைபிடிக்கும் காட்சிகளோ இடம்பெறவில்லை. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் கவனமாக இருந்தனர் என்பதைவிட கமல் மிகவும் கவனமாக இருந்தார்.

10% ஓட்டு போடுங்கள்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 76,76,53,065 ஓட்டுகள் பதிவானது என புள்ளிவிவரம் கூறிய கமல். ‘இதில் 10% ஓட்டை, போட வேண்டிய இடத்தில் யோசித்து போடுங்கள்’ என்று ஒற்றை வரியில் தமிழக மக்களுக்கு சூசகமாக அறிவுரை கூறினார். பிக்பாஸில் கமல் என்பது மாறி... கமல்தான் பிக்பாஸ் என்று கான்செப்டையே மாற்றி தொடர்ந்து 100 நாட்கள் பார்க்க வைத்தார் கமல்.

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி

Data Journalist