"கமல் சாரின் பவர், ஓவியாவின் விருப்பம்!’’ - ’பிக்பாஸ்’ அனுயா

அனுயா

தமிழ் நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. அதில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீ முதலில் வெளியேறினாலும், அனுயாதான் முதல் எலிமினேட் ஆன நபர். பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிந்திருக்கும் நிலையில் அவருடன் ஒரு சாட்... 

அனுயா

பிக் பாஸ் ஷோவை எப்படி பார்க்கிறீர்கள்?

’’பிக் பாஸ் ஷோ எனக்கான ஒரு சிறந்த மேடை. படங்களில் காட்டுற மாதிரிதான் நான் இருப்பேன் என நம்பும் மக்களுக்கு நான் யார் என்பதை பிரதிபலிக்கும் ஒரு நிகழ்ச்சி. எனக்கு மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எல்லா பிரபலங்களுக்கும் தான் யார் என்பதையும், நிஜத்தில் தான் எப்படி இருப்பேன் என்பதையும் மக்களுக்கு அவர்கள் தெரியப்படுத்த ஒரு வாய்ப்பு. இப்படித்தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.’’

நண்பன் படத்துக்கு பிறகு பெரிய ப்ரேக் எடுத்துட்டீங்களே..?

“ரொம்ப நாளா நான் படங்கள் நடிக்காததால் எனக்கான கிரேஸ் லெவல் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் படித்ததால், ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கேரக்டர்ஸ் மட்டும்தான் நடிக்கிறேன். தமிழ் எனக்கு கொஞ்சம் தான் தெரியும். சரளமாக நான் என்னுடைய எண்ணங்களை சொல்ல முடியல. இதுதான் நான் ப்ரேக் எடுத்ததுக்கான காரணங்கள்.”

அனுயா

’பிக் பாஸ் வீட்ல இருந்து சீக்கிரம் வெளியேற காரணம் இதுதான்’ என நீங்க நினைக்குற விஷயம்?

’’மொழி மட்டுமே மிகப்பெரிய காரணமாக இருந்தது. என்னால மத்தவங்க மாதிரி தமிழ் பேச முடியாததுனால அவங்கள மாதிரி தெளிவா கம்யூனிகேட் பண்ண முடியல. நான் கொஞ்சம் ரிசர்வுட் டைப் தான். அங்கு இருக்கும் போது மொழியால் ஊனமுற்றது போல் உணர்ந்ததால் நான் நிறைய உழைக்கவேண்டி இருந்தது. எனது படங்களில் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ண மாதிரி தமிழ் பேச கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒர்க் செஞ்சேன்.’’

கமல், உங்களை ‘தமிழரசி’ என்று அழைத்தபோது எப்படி ஃபீல் பண்ணீங்க?

’’பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் அவர் என்மீது கொண்ட அன்பை அது உணர்த்தியது. கமல் சார் ஒரு ஸ்வீட் ஹார்ட். எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் கமல் சார் தான். நான் அதை நினைக்கும் போதெல்லம் வானத்தில் இருப்பதாக தோணுவதோடு ஒவ்வொரு முறையும் என்னை ஃப்ரெஷ்ஷாக வைக்கும்.”

அனுயா

பிக் பாஸ் ஷோவில் அனைவரையும் ஒருங்கிணைத்து கமல் நிர்வகித்தது போல பொது வாழ்விலும் அவரால் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?

’’கமல் சாருக்கு ஒரு பெரிய பவர் இருக்கு. அதுதான் மக்களின் அன்பு. அது இருந்தால் நீங்கள் இந்த உலகையே மாற்ற முடியும். அவர் ஒரு நல்ல தலைவராக இருப்பார்னு நான் நினைக்கிறேன். அவர் நியாயத்தின் பக்கம் நிற்பவர்.’’

பிக் பாஸ் முடிந்ததற்கு பிறகு ஹவுஸ் மேட்ஸுடனான நட்பு எப்படி இருக்கிறது?

’’யாருக்கும் என்மீது தனிப்பட்ட வெறுப்பு இல்ல. எதிர்பாராமல் நான் வெளியேறுற சூழ்நிலை வந்துடுச்சு. ஓவியாவுக்கு என்கூட இருக்க பிடிக்கும். எல்லாரும் தூங்க போனதுக்கு அப்பறம் இரவின் அமைதியில் நான் பாடுவதை கேட்க ஓவியாவுக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி என்னைப் பாடச்சொல்லி கேட்பார்.’’

படங்கள்: ரா. திலீப்குமார் (மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!