Published:Updated:

``ஹேய்... மணிரத்னம் சாருக்கு என்னைப் பிடிச்சிருக்காம்!’’ - பிக்பாஸ் ஆரவ் குஷி

பிர்தோஸ் . அ
``ஹேய்... மணிரத்னம் சாருக்கு என்னைப் பிடிச்சிருக்காம்!’’ - பிக்பாஸ் ஆரவ் குஷி
``ஹேய்... மணிரத்னம் சாருக்கு என்னைப் பிடிச்சிருக்காம்!’’ - பிக்பாஸ் ஆரவ் குஷி

“எல்லோருடனும் போட்டோ எடுக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. ஆனால், என் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவருடன் மட்டும் ஒரு போட்டோ எடுத்தே தீர வேண்டும் என்றொரு ஆசை நெடுநாளாகவே இருந்தது. அந்த ஆசையை 'ஓகே கண்மணி' ஷூட்டிங் ஸ்பாட்டில் தீர்த்துக்கொண்டேன்!” - இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்த தருணம் பற்றி பேச ஆரம்பிக்கிறார் ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் ஆரவ். 

பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு பரபரப்பாக வலம் வருகிறார் ஆரவ். பிக் பாஸ் வெற்றிக்கான வாழ்த்து, தொடர் சந்திப்புகளுக்கு இடையில் சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பு சுவாரஸ்யம் பற்றித் தெரிந்து கொள்ள ஆரவ்விடம் பேசினேன். 

“ 'சைத்தான்' படத்துக்கு முன்புவரை சின்னச் சின்ன கேரக்டரில் சில படங்களில் நடித்திருக்கிறேன். அதேபோல்தான் மணி சாரின் 'ஓகே கண்மணி' படத்தில் துல்கர் சல்மானின் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ் சிலரில் நானும் ஒருவனாக நடித்தேன். அதில் சின்ன ரோல்தான். நீங்கள் கூர்ந்து கவனித்தால் என்னை ஸ்க்ரீனில்கூட பார்த்து இருக்கலாம். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மணி சாரை அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவருடைய வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் சினிமா கனவில் அவருடைய படத்தில் ஒரு முழு நீள கேரக்டரில் ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் என்றோர் ஆசை இருக்கிறது. 

‘ஓகே கண்மணி' ஷூட்டிங் ஸ்பாட்டில் மணி சாருடன் ஒரு போட்டோ எடுத்திருப்பேன். அதை இன்னும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். பெரிய இயக்குநரான மணி சாருடன் போட்டோ எடுத்த அனுபவத்தையே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது அவரை அவருடைய வீட்டில் சென்று பார்த்து வந்திருக்கிறேன். இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.

பிக் பாஸ் வெற்றியாளன் என்று அறிவித்த உடனேயே வந்த முதல் வாழ்த்து அழைப்பு சுஹாசினி மேடத்திடம் இருந்துதான். ''ஹே ஆரவ் நீ ஜெயிச்சிட்ட'' என்று என்னைவிட அவங்க என் வெற்றியை நேசித்தார்கள். அப்போதே எனக்கு செம ஷாக். ‘நாமதான் இவங்களுக்கு ஃபேன். ஆனால், இவங்க நம்மளையே ரசித்திருக்காங்களே’ என்று ஆச்சர்யம். 

''நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும். நாங்க எல்லோரும் உனக்குப் பெரிய ஃபேன்ஸ்'' என்று சொன்னார். ‘கண்டிப்பா வர்றேன் மேம்’ என்று சொல்லியிருந்தேன். பிறகு என்னை அவர்களின் வீட்டுக்கு வரச்சொல்லி போன் பண்ணி அழைத்தார்கள். நான் நேரில் போய் பார்த்தேன். இரண்டு மணி நேரம் அவர்களின் வீட்டில் இருந்தேன். வீட்டில் இருக்கும் எல்லோருடனும் உட்கார்ந்து பேசினேன். என்னை நலம் விசாரித்தார்கள். ‘சினிமா மேல் ஆசை வந்தது எப்படி, நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி’ என்று விசாரித்தார்கள். 

‘இனிமேல்தான் கவனமாக இருக்கணும். படங்களை செலக்ட் பண்ணி நடிக்கணும். எப்படி எல்லாம் கவனமாக இருக்கணும்’ என்று  சொன்னார்கள். ‘என்ன அட்வைஸ் வேண்டுமானாலும் கேளு. பிக் பாஸ் உனக்கு கோல்டன் வாய்ப்பு. அதை கரெக்டா பயன்படுத்திக்கோ’ என்றார்கள். 

மணி சார் பேசும்போது, ''பிக் பாஸ்ல சில எபிசோட் பார்த்தேன். நல்லா பண்ணீங்க. நல்ல முறையில் ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணுங்க. கவனமாக இருங்க'' என்று சொன்னார். செம ஹாப்பியா இருந்தது. ஒரு லெஜன்ட்ரி இயக்குநர் தன் வீட்டில் என்னையும் ஓர் ஆளாக மதித்து நேரில் அழைத்து பேசியதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது. 

 'சைத்தான்' படத்துக்குப்  பிறகு நிறைய நெகட்டிவ் ரோல்ஸ் என்னைத்தேடி வந்தன. ஆனால், இப்போது பிக் பாஸூக்குப் பிறகு, நிறைய ஹீரோ ரோல்ஸ் வருகின்றன. எல்லோரையும்போல எனக்கும் மணி சாரின் இயக்கத்தில் நடிக்க ஆசை. ஆனால், அதைப்பற்றி எங்கள் சந்திப்பில் பேசவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் என் அடுத்த படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்கிறவர் ‘பிக் பாஸ்’ வெற்றிக்குப் பிறகு இன்னும் தன் அம்மாவைப் பார்க்கவில்லையாம். 

“நான் இன்னும் என் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் செல்லவில்லை. அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அடுத்த வாரம் அம்மாவைப் பார்க்கச் செல்கிறேன். தீபாவளி அன்று திருச்சியில் உள்ள அண்ணன் வீட்டுக்குப் போனேன். அண்ணன் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் பார்த்தேன். என்னைப் பார்த்ததில் அவர்களுக்கு ஹேப்பி. 

பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலரைத் தொடர்ந்து சந்தித்தேன். ஓவியாவை விஜய் டி.வி ஷூட் தவிர வேறு எங்கும் மீட் செய்யவில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம பிஸியாக இருக்கிறார். அதனால் போனில் பேசினோம். சினேகனையும் இன்னும் வெளியே தனியாகச் சந்திக்கவில்லை. எல்லோரையும் சீக்கிரம் பார்க்க வேண்டும்” என்றார் ஆரவ்.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..