Published:Updated:

"நான் அனிதாவாக நடிப்பது உண்மைதான்... நான் நடிச்சா என்ன தப்பு?!" - 'பிக் பாஸ்' ஜூலி

"நான் அனிதாவாக நடிப்பது உண்மைதான்... நான் நடிச்சா என்ன தப்பு?!" - 'பிக் பாஸ்' ஜூலி
"நான் அனிதாவாக நடிப்பது உண்மைதான்... நான் நடிச்சா என்ன தப்பு?!" - 'பிக் பாஸ்' ஜூலி

ருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு நிறைவேறாததால், தன் உயிரை மாய்த்துக்கொண்டார் மாணவி அனிதா. அவரின் மரணம், தமிழ்நாட்டையே உலுக்கியது. அவரைப் போன்ற தோற்றத்தில் நடிப்பதுபோல, 'பிக் பாஸ்' ஜூலி வெளியிட்ட போஸ்டர் வைரலாகிவருகிறது. இதுகுறித்து ஜூலியைத் தொடர்புகொண்டோம்.

" 'டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்' படத்தின் போஸ்டர் வைரலாகிவருகிறது. அது உண்மைதானா?"

"ஆமாம். பெண்களை மையப்படுத்தின மற்றும் சமூக மாற்றத்துக்கான படங்கள் மிகக் குறைவாகவே வருது. அதில் ஒண்ணுதான், இந்தப் படம். கடந்த வருஷம், அனிதாவின் மரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு. அனிதாவின் டாக்டராகும் லட்சியம் நிறைவேறாம போயிடுச்சு. அதனால வருத்தப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தி. இன்னிக்கு அனிதாவின் பிறந்த நாள். அவருக்கு ட்ரிப்யூட் பண்ற விதமா, இன்னிக்குப் படத்தின் போஸ்டரை என் சோஷியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணினேன்."

"நீங்க அனிதாவா நடிக்கிறீங்களா...?" 

" இந்தப் படம் அனிதாவை மையப்படுத்தின கதை கொண்டது. அதில், நான் அனிதாவா நடிக்கிறேன். ஏன்... நான் அனிதாவா நடிக்கக் கூடாதா? ஒரு மிடில் கிளாஸ் பொண்ணோட வாழ்க்கை கதை. படத்தைப் பார்த்தா நல்லா புரியும். தவிர, நீங்க எப்படி துருவித் துருவிக் கேட்டாலும், படத்தைப் பத்தின மற்ற விஷயங்களைச் சொல்லமாட்டேன். அவை பரம ரகசியம். சீக்கிரமே பிரஸ் மீட் வெச்சு, அவற்றைச் சொல்லப் போறோம்."

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு அப்புறம் உங்க லைஃப் எப்படி சேஞ்ச் ஆகியிருக்கு?"

"நிறையப் பயனுள்ள மாற்றங்கள் நடந்துகிட்டு இருக்குது. நர்ஸிங் ஃபீல்டுல இருந்து மீடியாவுக்குள் வந்திருக்கேன். சினிமாவுலேயும் நடிச்சிருக்கேன். சமீபத்துல 'மன்னர் வகையரா' படத்தில் நடிச்சேன். பிடிச்ச கேரக்டர்கள்ல அடுத்தடுத்து நடிச்சுகிட்டு இருக்கேன். வெளிய போகும்போது நிறையப் பேர் பாசிட்டிவா பாராட்டுறாங்க. எல்லா வீட்டுலேயும் பெண்களின் ரோல்தான் பெரிசு. அப்படித்தான் எங்க வீட்டுலயும். சின்னப் பொண்ணா இருந்தும், என் குடும்பத்தை நான்தான் கவனிச்சுக்கிறேன். அதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்."

"உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிறீங்க?"

"யார்மேலதான் விமர்சனம் இல்லை. இன்னிக்கு என்னை விமர்சனம் செய்றவங்க, நாளைக்குப் புதுசா இன்னொருத்தரை விமர்சிப்பாங்க. அவங்களோட எண்ணம், விமர்சனம் பண்றது மட்டும்தான். நம்ம வளரணும்னு நினைச்சா, அதையெல்லாம் கடந்து போயிட்டே இருக்கணும். மத்தவங்களுக்காக வாழ்ந்தா, நம்ம வாழ்க்கை சரியா இருக்காது. அதனால, விமர்சனங்களைப் பெரிசா எடுத்துக்கமாட்டேன்." 

"தொகுப்பாளினி பயணம் எப்படிப் போயிட்டு இருக்குது?"

"நல்லா போயிட்டு இருக்குது. என் திறமையை நம்பி, 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியில கலா மாஸ்டர் எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. அதை நானும் சரியா பயன்படுத்திகிட்டு இருக்கேன். போட்டியாளர்களா வர்ற எல்லாக் குழந்தைகளும் தங்களோட டான்ஸ் திறமையைச் சிறப்பா வெளிப்படுத்துறாங்க. என் சின்ன வயசுல இந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கலையேனு ஃபீல் பண்றேன்."

"திரைப்படங்களில் நடிப்பது தொடருமா?."

"தொடர்ந்து நடிக்கிறது சந்தோஷமா இருக்குது. எனக்கு ஹீரோயினாகணும்னு ஆசையில்லை. எந்தக் கேரக்டரா இருந்தாலும்சரி, அதில் என் முழுத்திறமையை வெளிப்படுத்தி, பெயர் வாங்கணும். அவ்ளோதான். என் ரோல் மாடல், 'ஆச்சி' மனோரமா. அவங்களைமாதிரி நீண்ட காலம் மக்கள் மனசுல இடம் பிடிக்கணும்னு ஆசை."