"இந்தமுறை, 'ஐ ஆம் வாட்சிங் யூ!' வசனம் உங்களுக்கும் பொருந்தும் கமல்!" #BiggBoss #KamalRewind | This time the audience will be watching Kamal - BigBoss Rewind

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (12/06/2018)

கடைசி தொடர்பு:13:34 (12/06/2018)

"இந்தமுறை, 'ஐ ஆம் வாட்சிங் யூ!' வசனம் உங்களுக்கும் பொருந்தும் கமல்!" #BiggBoss #KamalRewind

வீட்டிற்குள் இல்லாவிட்டாலும் இந்த முறை கமலும் கிட்டத்தட்ட ஒரு பிக் பாஸ் போட்டியாளர் போலத்தான். அவரின் பேச்சையும் நடவடிக்கையும் வைத்து ஓர் அரசியல்வாதியாக அவர் எப்படியென மக்கள் நிச்சயம் எடைபோட்டு விடுவார்கள். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கமல் சொல்லும், 'ஐ அம் வாட்சிங் யூ!' வசனம் இந்த முறை கமல்ஹாசனுக்கும் பொருந்தும்!

மெரிக்கா, 'பிக் பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவை அறிமுகம் செய்து வைத்தது. மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அந்த நிகழ்ச்சி, இந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க ஒளிபரப்பானது. பின் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி, தமிழிலும் வரப்போகிறது என்றவுடன், முதலில் எழுந்த கேள்வி 'தொகுத்து வழங்கப்போவது யார்?' என்பதுதான். கமல்ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்றதும், இந்த நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் இன்னும் அதிகமானது.  

கமல் ஹாசன்

நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பாரபட்சமின்றி அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டது, பிக் பாஸ். காரணம் கமல்ஹாசன் என்ற ஒரே ஆள். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் சீஸனையும் அவரே தொகுத்து வழங்கப்போகிறார் என்று தெரிந்தவுடன், வழக்கம்போல் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. எந்தவித சலசலப்புமின்றி கடந்த சீஸனைப் பார்த்த மக்களை வெகுவாக ஈர்க்க ஓவியா ஆர்மி, ஆரவ் ஆர்மி, ரைஸா ஆர்மி எனப் பல ஆர்மி நேவிகள் இருந்தாலும், நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதம். 

`பிக் பாஸ்' பார்வையாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, நிகழ்ச்சியை ஒருநாள்கூட மிஸ் பண்ணாமல் நடக்கும் ரகளைகளைக் கண்டு கழித்தவர்கள். இரண்டு, 'பிக் பாஸாவது, கிக் பாஸாவது போங்க பாஸ்!' என்ற மக்கள். மூன்றாவது, கமலின் அதிரிபுதிரி பேச்சுகளுக்காக அவர் வரும் எபிசொடுகளை மட்டும் பார்த்தவர்கள். காரணம் அப்போதுதான் அவர் அரசியலுக்குள், ட்விட்டர் மூலம் என்ட்ரி கொடுத்த சமயம். அதுமட்டுமின்றி கமல் பேச்சில் கெட்டிக்காரர். வண்ணத்திரையில் கமலைப் பார்த்துவிட்டோம், சின்னத் திரையில் கமல் எப்படி என்ற ஆர்வமும் மற்றொரு காரணம். இவர் பேச்சுக்குள் ஒளிந்திருக்கும் நக்கல்களுக்கும், குசும்புகளுக்கும் அளவே இருக்காது. இது 'உலகமகா நடிப்புடா சாமி' என்ற ரகத்தில்தான், 'பிக் பாஸ்' முதல் சீஸன் கடந்துபோனது. நடக்கும் அனைத்து கலாட்டாக்களையும் பார்த்துவிட்டு, வார இறுதியின் இரண்டு நாள்களில் செம டோஸ் கொடுப்பார், கமல். 

பிக் பாஸ் - கமல்

எந்த ஒரு சூழலிலும் தன்னுடைய பொறுமையை இழக்காமல், தன் ஸ்டைலில் ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துரைத்தார். ஒரு சில கடுமையான ஆங்கில வார்த்தைகளுக்கு, ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷ்னரியைத் தேடிப் பார்த்தாவது அர்த்தம் சொல்லிவிடலாம். ஆனால், கமல் பேசும் ஆங்கில வார்த்தைகளுக்கு பாவப்பட்டு அவரே அர்த்தம் சொன்னால்தான் உண்டு. கடந்த சீஸனில் நமக்கு அப்படிப் பரிச்சயமான ஒரு வார்த்தைதான், 'Hallucination'. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் சர்காஸம், இவர் ரியாக்‌ஷன்களிலும் ஒளிந்திருப்பதுதான் கமலின் ஸ்பெஷல்.

காயத்ரி ரகுராம் 'நான் எங்கே சார் கெட்ட வார்த்தை பேசினேன்?' என்று காரசாரமாகப் பதில் கேள்வி எழுப்பியதற்கு எந்தவித ஆரவாரமுமின்றி தன் தலை முடியை மட்டும் உயர்த்திக் காட்டினார், கமல். 'நான் இதுவரைக்கும் நடிச்சதே இல்ல சார்' என்று ஜூலி சொல்லியதற்கு, நக்கலாக கொடுத்த அந்த ரியாக்‌ஷன், 'நானே பெரிய நடிகன்; என்கிட்டேயே நடிக்கிறியா?' என்ற தொனியில் இருந்தது. 

கமல், பிக் பாஸ் வீட்டின் ஹவுஸ்மேட்ஸை கலாய்ப்பதோடு நிறுத்தாமல், அப்போது நடந்த அரசியல் சூழல்களையும் கிண்டலடித்தார். உதாரணத்துக்கு, சசிகலா ஜெயிலுக்குள் உலா வந்த வீடியோ அந்த சமயத்தில் வைரல். நமீதா ஏதோ 5 ஸ்டார் ஹோட்டலின் டாப்பிக்கைப் பற்றி பேச, 'வெளியில வேற மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல்லாம் இருக்குதுங்க' என்றார். இப்படி ஒரு சில சூழலும், வசனமும்தான் டிக்‌ஷ்னரி இல்லாமலே புரியும். நீட் தேர்வால் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவுக்காகவும் பிக் பாஸ் மேடையில் பேசியது, 'இந்த இந்தியாவுக்கு சுயமரியாதை ஜாஸ்தி' என்று சொன்னது கமலால் மட்டும்தான் முடியும். உச்சரிக்கும் வார்த்தைகளில் இருந்து உபயோகிக்கும் உடல்மொழி வரை... நிகழ்ச்சியைப் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஈர்த்தார், கமல். நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள்கூட கமல் தொகுத்து வழங்கிய விதத்தைக் கேட்டறிந்து பின்னர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

பிக் பாஸ் கமல்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிப்ரவரி 21-ல் தனது அரசியல் பணிகளை ஆரம்பித்த கமல், அரசியல் சுற்றுப் பயணம், கட்சி வேலைகள் என இன்று வரை செம பிஸியாக இருக்கிறார். இதற்கு நடுவில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார், என்பது ஆச்சர்யம். ஆனால், முதல் சீஸனின் பார்த்த அதே கமல்ஹாசனை இந்த சீஸனில் பார்க்க முடியுமா?

முதல் சீஸனில் அரசியலை மேலோட்டமாக விமர்சனம் செய்த கமல், இந்த சீஸனில் 'அரசியல்வாதி' கமலாக நேரடியாகவே விமர்சிப்பார் எனத் தெரிகிறது. 'பிக் பாஸ்' சீஸன் ஒன்றில் கமல்ஹாசன் பேச்சுக்குள் ஒளிந்திருந்த கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி எல்லாம் வரவிருக்கும் சீஸன் இரண்டில் இருக்குமா... பார்ப்போம்! மற்றொரு முக்கியமான விஷயம், வீட்டிற்குள் இல்லாவிட்டாலும் இந்த முறை கமலும் கிட்டத்தட்ட ஒரு பிக் பாஸ் போட்டியாளர் போலத்தான். அவரின் பேச்சையும் நடவடிக்கையும் வைத்து ஓர் அரசியல்வாதியாக அவர் எப்படியென மக்கள் நிச்சயம் எடைபோட்டு விடுவார்கள்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கமல் சொல்லும், 'ஐ அம் வாட்சிங் யூ!' வசனம் இந்த முறை கமல்ஹாசனுக்கும் பொருந்தும்!


டிரெண்டிங் @ விகடன்