Published:Updated:

``ஓவியாவோட ப்ளஸ் இதான்... ஸோ, பிக் பாஸ் போட்டியாளர்களும் அப்படி இருங்க!" - ஶ்ரீப்ரியா

சனா

நடிகை ஶ்ரீப்ரியா `பிக் பாஸ்' நிகழ்ச்சி குறித்தும், ரஜினி - கமல் அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார்.

``ஓவியாவோட ப்ளஸ் இதான்... ஸோ, பிக் பாஸ் போட்டியாளர்களும் அப்படி இருங்க!" - ஶ்ரீப்ரியா
``ஓவியாவோட ப்ளஸ் இதான்... ஸோ, பிக் பாஸ் போட்டியாளர்களும் அப்படி இருங்க!" - ஶ்ரீப்ரியா

ஜூன் 17- ம் தேதி தொடங்குகிறது, `பிக் பாஸ்' சீஸன் 2. முதல் சீஸனில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தனர். அதில், முக்கியமானவர் நடிகை ஶ்ரீப்ரியா. இவர் `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா இருந்தது வரை தன் ஆதரவை அவருக்குத் தெரிவித்தார். ஓவியாவின் சேட்டைகளை ரசித்தவர், கமலிடமும் சில கேள்விகளைக் கேட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் தொடங்கவிருக்கும் நிலையில், ஶ்ரீப்ரியாவிடம் பேசினோம்.  

``பிக் பாஸ் சீஸன் 2 வரப்போகுதுனு தெரிஞ்சதும், `பிக் பாஸ் குறித்துப் பதிவிடலாமா?'னு ட்விட்டர்ல கேட்டேன். ஏன்னா, நான் இப்போ நடிகை மட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர். அதனால, நான் சொல்ற கருத்துகள் மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். தவிர, `அரசியல் கட்சியில இருந்துகிட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சி குறித்து கருத்துச் சொல்றீங்களே?'னு யாரும் என்னைக் கேள்வி கேட்டுடக் கூடாது இல்லையா... அதனாலதான் இப்படிக் கேட்டேன். அதுக்கு 90 சதவிகித ரெஸ்பான்ஸ் `கருத்துச் சொல்லுங்க'னுதான் இருந்தது." என்றவரிடம், சில கேள்விகள். 

``பிக் பாஸ் நிகழ்ச்சி உங்களுக்குப் பிடிக்க என்ன காரணம்?" 

``உள்ளே இருக்கிறவங்களுக்குச் சுத்தி கேமரா இருக்குனு தெரியும். அது, நமக்கும் தெரியும். அப்படி ஒரு சூழல்ல சிலர் அன்பா இருந்தாங்க. சிலர் கோபமா இருந்தாங்க. சிலர் சுத்தி கேமரா இருக்குங்கிற தயக்கம் கொஞ்சம்கூட இல்லாம இருந்தாங்க. அதனாலதான், இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நிகழ்ச்சியைப் பத்தி ட்விட்டர்ல கருத்துச் சொல்லிக்கிட்டு இருந்ததுக்குக் காரணமும், நிகழ்ச்சி பிடிச்சுப் போனதுதான்."

``ஓவியாதான் உங்க ஃபேவரைட் போட்டியாளர்ல?" 

``ஓவியா பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தவரை, அவங்கதான் ஃபேவரைட். நான் மனசுல படுறதைப் பட்டுனு வெளிப்படுத்திடுவேன். ஓவியாவும் அப்படித்தான் இருந்தாங்க. மத்தவங்க என்ன சொல்வாங்கனு கவலைப்படாம அவளுக்குத் தோணுற விஷயங்களை அவங்க போக்குல செஞ்சாங்க. முக்கியமா, சுத்தி கேமரா இருந்தாலும், ஆரவ்வை காதலிக்கிறேன்னு அசராம சொன்னாங்க. ஓவியாவுக்குப் பிறகு ஹரீஷ் கல்யாணை ரொம்பப் பிடிச்சிருந்தது."  

``பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சில எதிர்ப்புகளும் வந்ததே?" 

``யாரையும் கட்டாயப்படுத்தி இந்த நிகழ்ச்சிக்குக் கூட்டுக்கிட்டு போகலை. இது ஒரு கேம் ஷோ. போட்டியாளர்கள்கிட்ட ஒப்பந்தம் போட்டு, அவங்களுக்குச் சம்பளமும் கொடுத்துதான் கூட்டிக்கிட்டுப் போறாங்க. எல்லோரும் விருப்பத்தோடதானே உள்ளே போறாங்க. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதுக்குப் பிறகு, உள்ளே இருக்கப் பிடிக்கலைனா வெளியேறலாம். இதுக்கு ஏன் போராட்டம் பண்ணணும், எதிர்க்கணும். அது, தேவையில்லாததுதான்!." 

``பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உங்களைக் கூப்பிட்டா, போவீங்களா?" 

``கண்டிப்பா மாட்டேன். ஏன்னா, என் குழந்தைகள் வெளிநாட்டுல படிக்கிறாங்க. அவங்ககூட எப்போவும் நான் டச்ல இருக்கணும்னு ஆசைப்படுவேன். என்னால அவங்ககூட பேசாம ஒருநாள்கூட இருக்கமுடியாது!."   

``இந்த சீஸனுக்கும் கமல்தான் தொகுப்பாளர்... எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?" 

``கமல் எப்பவும் வேலையில சரியா இருப்பார். அது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். யார் மனசையும் புண்படுத்தாம அவரோட வேலையைச் செய்வார். அரசியல் நிகழ்ச்சிக்காக வெளியூர் போயிருந்தப்போ ஒருத்தர் என்கிட்ட, `அரசியல் கட்சி நடத்த பணம் இல்லைனுதான், கமல் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாரா?'னு கேட்டார். `அதனால என்ன... மக்கள் சொத்துல கட்சி ஆரம்பிக்கலையே, யாரையும் ஏமாத்திச் சம்பாதிக்கலையே, வேலை பார்த்துதானே சம்பாதிக்கிறார்'னு பதில் சொன்னேன். அவரை நினைச்சு நான் பெருமைப்படுறேன். கமலுக்கு என்ன வேலை தெரியுமோ, அதை செஞ்சு சம்பாதிக்கிறார்." 

``கமல் கட்சியில உறுப்பினரா சேர என்ன காரணம்?"

``என் வாழ்க்கையில இதுவரை அரசியல் கிடையாது. ஆனா, மாற்றம் வேணும்னு அடிக்கடி நினைப்பேன். கூட்டத்துல நின்னுக்கிட்டு குரல் கொடுக்கிறதைவிட, முன்னாடி போய் பேசுவோம்னு தோணுச்சு. கமல் கொள்கைகள் பிடிச்சிருந்தது. அவர் கட்சியில சேர்ந்துட்டேன். இதை ஒரு அரசியல் கட்சினு சொல்றதைவிட, மக்களுக்கு நல்லது பண்றதுக்கான பிளாட்ஃபார்ம்னு சொல்லலாம். தவிர, பணம் பதவிக்காக நான் கட்சியில சேரலை. நான் பார்க்காத பணம், புகழ் கிடையாது. அதனால, மக்களுக்கு நல்லது பண்ணணும், மக்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன். என் குடும்பத்துல இருக்கிறவங்க என்னை நினைச்சுப் பெருமைப்படணும். அதுக்காகக் கமல் கட்சியில சேர்ந்தேன்." 

``கமலுக்கு ஆதரவு கொடுத்த நீங்க, ரஜினிக்கு ஏன் கொடுக்கலை?" 

``எனக்குத் தேவை அறிவான தலைவர். முடிவுகளை சரியா, துரிதமா எடுக்கிறவங்கதான் நல்ல தலைவரா வர முடியும். என் தலைவர் நாற்பது வருடமா உட்கார்ந்து அரசியலுக்கு வரலாமா வேணாமானு யோசிக்கலை. முடிவு பண்ணார்; அரசியலுக்கு வந்தார். மத்தபடி, நட்புரீதியா எனக்கு ரெண்டுபேருமே நல்ல நண்பர்கள்தாம். அரசியல்னு வந்துட்டா, என் சாய்ஸ் கமல்தான்!." 

`` `பிக் பாஸ் 2' போட்டியாளர்களுக்கு நீங்க சொல்ல விரும்புற விஷயம்...?" 

``பிக் பாஸ் போட்டியாளர்களே... நீங்க நீங்களா இருங்க, அதுதான் முக்கியம். ஓவியாவை எல்லோருக்கும் பிடிக்கக் காரணம் அதுதான்!"