Published:Updated:

வெல்கம் பிக்பாஸ்... கமலுக்கு ஒரு ரெக்வஸ்ட்!

சுரேஷ் கண்ணன்

நேரம்.. காலை எட்டு மணி… ‘…. கன்பெஷன் ரூமூக்கு வாங்க… போன்ற மாயக்குரல்கள் இப்போதே காதில் விழத் துவங்கி விட்டன.

வெல்கம் பிக்பாஸ்... கமலுக்கு ஒரு ரெக்வஸ்ட்!
வெல்கம் பிக்பாஸ்... கமலுக்கு ஒரு ரெக்வஸ்ட்!

15 பிரபலங்கள்… 60 காமிராக்கள்… ஒரே வீட்டில்… நல்லவர் யார்.. கெட்டவர் யார்… என்று மாய ஆப்பிளைக் கடித்துக் கொண்டு கமல்ஹாசன் பேசும் டீஸர்கள் ஒளிபரப்பாகத் துவங்கும் போதே பிக்பாஸ் தமிழ் இரண்டாம் சீசன் குறித்தான பரபரப்பு பார்வையாளர்களுக்கு துவங்கி விட்டது. ‘நாயகன்’ திரைப்படத்தில், ‘நீங்க நல்லவரா, இல்ல கெட்டவரா?” என்று தாத்தா வேலுநாயக்கரைப் பார்த்து அவருடைய பேரன் இறுதிக் காட்சியில் கேட்பான். இப்போது அதே கேள்வியை நம்மை நோக்கி கேட்கிறார் கமல்ஹாசன். ‘தெரியலையேப்பா’ என்று படத்தில் அவர் சொல்லும் விடைதான் இப்போதும் எப்போதும் சரியானது.

கெட்டவர், நல்லவர் என்று இங்கு தனித்தனியாக எவரும் இல்லை. இரண்டின் வெவ்வேறு விகிதங்களின் கலவைதான் மனிதன். சூழல்தான் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் அப்போதைய நடவடிக்கைகளையும் எதிர்வினைகளையும் தீர்மானிக்கிறது. ஞானிகளும் குழந்தைகளும்தான் இதிலிருந்து தப்பிக்க முடியம். இந்த ஆதாரமான உண்மையை அறிந்தால் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடியும். சிக்கலான சூழல்களில் ஒரு மனித மனம் இயங்கும் உளவியல் சார்ந்த தன்மைகளை அறிந்து கொள்ள முடியும். அவற்றிலிருந்து நாமும் சில அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள முடியும்.

பிக்பாஸின் முதல் சீஸன் தமிழில் வந்த போது அதைப் பற்றிய அறிமுகம் இங்கு பெரும்பாலும் இல்லை. இந்தியில் இது பதினோரு சீஸன்களைக் கடந்திருந்தாலும் கூட, தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்திருந்தவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். ஆகவே ‘இது என்னவாக இருக்கும்?’ என்கிற ஆவலும் பரபரப்பும் திகைப்பும் அப்போது அதிகமாக இருந்தது.

ஆனால் - சீஸன் ஒன்று முடிந்திருக்கும் நிலையில் இந்த விளையாட்டைப் பற்றிய அடிப்படைகள், விதிமுறைகள், ரகசியங்கள் போன்றவை பார்வையாளர்களுக்கு தெரிந்து விட்டன. இந்த நிகழ்ச்சி மீதான காரமான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் இதன் மீதான கவர்ச்சி இன்னமும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. சலித்துக் கொள்கிறவர்கள் கூட ஓரக்கண்ணால் பார்க்கத் தவறவில்லை. இதற்கு அடிப்படையான காரணங்களுள் ஒன்று – கமல்ஹாசன். நிகழ்ச்சியை மிக நேர்த்தியாகவும் சமயோசிதத்துடனும் நகர்த்திச் செல்வதில் அவருடைய திறமையை முதல் சீஸனிலேயே பார்த்தோம். நேரடி அரசியலில் அவர் இறங்கியிருக்கும் சூழலில் சீஸன் 2-ல் மேலும் பல சுவாரசியமான அதிரடிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


ஒருவகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை கமலின் நேரடி அரசியலுக்கான விதை என்று கூட சொல்லலாம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்பு கமலின் அரசியல் நையாண்டிகளிலும் காரமான விமர்சனங்களிலும் சுவாரஸ்யமாக எதிரொலித்தது. இந்த மேடையில் தன்னுடைய அரசியல் நுழைவிற்கான சமிக்ஞைகளையும் கமல் தெரிவித்துக் கொண்டேயிருந்தார். இப்போது அவரே ஓர் அரசியல்வாதியாகி விட்ட சூழலில் அது சார்ந்த பொறுப்பும், கவனமும் அவருடைய உரையாடல்களிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். சில போட்டியாளர்களுக்குச் சாதகமாக கமல் செயல்பட்டாரோ என்கிற சந்தேகங்களும் விமர்சனங்களும் முதல் சீஸனில் இருந்தன. அதற்கான சந்தர்ப்பதை சீஸன் 2ல் கமல் வழங்கமாட்டார் என்றும் நம்புவோம்.

சீஸன் இரண்டில் மேலும் பல சுவாரசியங்களும் புதிர்களும் விநோதமான விதிமுறைகளும் தண்டனைகளும் இருக்கும் போலிருக்கிறது. சிறையைப் போன்றதொரு செட்டிங் புதிய வடிவத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் செல்வதற்கான ரகசிய வழியும் இருக்குமோ, என்னமோ.
 

பிக்பாஸ் சீஸன் இரண்டின் போட்டியாளர்கள் யார் யார் என்கிற யூகங்களும் எதிர்பார்ப்புகளும் இணையம் முழுக்க பொங்கி வழிந்த படி இருக்கிறது. இவற்றில் எத்தனை சதவீதம் உண்மையிருக்கிறது என்பது இன்று இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிந்து விடும். இந்த சீஸனில் யார் காமிராவிற்கு ஸ்பிரே அடிப்பார், யார் சுவரேறி குதிப்பார் என்பதெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் தெரியும். தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் ‘தாயுமானவர்’ என்பது மாதிரி விநோதமான க்விஸ் விடைகளைப் பார்த்து நகைக்கலாம்.

பிக்பாஸ் சீஸன் 1 கட்டுரைகள் விகடன்.காமில் வெளியானபோது, வாசகர்களின் அபாரமான ஆதரவையும், வரவேற்பையும் பெற்றது. மகிழ்ச்சியும் கொதிப்புமான பின்னூட்டங்கள் குவிந்தது. இந்த நிகழ்ச்சி தமிழக மனங்களை பல்வேறு விதமாக பாதித்திருப்பதை அறிய முடிந்தது. இந்த நிகழ்ச்சியான ‘நாயகியாக’ கொண்டாடப்பட்ட ஓவியா, அதன் மூலம் கிடைத்த புகழை அவர் உபயோகித்துக் கொள்ள முயலவில்லை என்பதிலிருந்து, நிகழ்ச்சியில் வெளிப்பட்ட அவருடைய பண்புகள் அசலானவைதான் என்பதை உணர முடிகிறது. அதே சமயத்தில், இதில் துணை வில்லியாக தூற்றப்பட்ட ஜூலி தமக்கு வந்த எந்த வாய்ப்பையும் தவற விடவில்லை. எதிர்மறையானதாக இருந்தாலும் இந்த தற்காலிக புகழின் வெளிச்சத்தை உடனடி அறுவடை செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

மறுபடி அதேதான். இங்கு நல்லவர், கெட்டவர் என்றோ, கறுப்பு, வெள்ளை என்றோ தனித்தனியாக எதுவுமில்லை. பிக்பாஸ் என்பது நம் மனச்சாட்சிதான். அதன் குரலைக் கேட்டு நடந்தாலே போதும். புதிய போட்டியாளர்களில் எவர் எவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நேரம்.. காலை எட்டு மணி… ‘…. கன்பெஷன் ரூமூக்கு வாங்க… போன்ற மாயக்குரல்கள் இப்போதே காதில் விழத் துவங்கி விட்டன.

இரண்டாம் பிக்பாஸிற்கு நல்வரவு!