Published:Updated:

" 'பிக்பாக்ஸ்' வீட்ல நித்யாவும் நானும் சமாதானம் ஆகணும்னு ப்ரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!" பாலாஜி

ம.கா.செந்தில்குமார்

பிக்பாஸின் இந்த சீசனில் தாடி பாலாஜியும் ஒரு போட்டியாளர். கருத்து வேறுபாடு காரணமாக இவரிடம் இருந்து பிரிந்து வாழும் இவரின் மனைவி நித்யாவும் இந்த பிக்பாஸின் போட்டியாளர்களுள் ஒருவர். இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன் பாலாஜி நமக்கு அளித்த பேட்டியிலிருந்து...

" 'பிக்பாக்ஸ்' வீட்ல நித்யாவும் நானும் சமாதானம் ஆகணும்னு ப்ரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!" பாலாஜி
" 'பிக்பாக்ஸ்' வீட்ல நித்யாவும் நானும் சமாதானம் ஆகணும்னு ப்ரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!" பாலாஜி

“பிரச்னை உண்மையா இருந்தா உட்கார்ந்து அழலாம். ஆனா உருவாக்கப்பட்ட பிரச்னைக்காக நாம எதுக்கு முடங்கணும். ‘பிக்பாஸுக்குப் போறேன்டா மச்சான்னு’னு நண்பன்ட்ட சொன்னேன். ‘மத்தவங்க உனக்கு ஏற்படுத்தின பிரச்னைகளை தலைக்கு ஏத்தியிருந்தேன்னா ஒண்ணு மனம் உடைஞ்சு வேறமாதிரி ஆகியிருப்ப. இல்லேனா இந்நேரம் ஆளே இல்லாம போயிருப்ப. ஆனா எல்லாத்தையும் கடந்துவந்து ரசிகர்களை சிரிக்கவெச்சுட்டும் இருக்க. மச்சான் உண்மையிலேயே நீ கிரேட்ரா’னான். இந்தமாதிரியான நண்பர்களும் பாராட்டுக்களும்தான் என்னை இன்னும் இயங்கவெச்சுட்டு இருக்கிற எரிபொருள்!!” ‘பிக் பாஸ்’ வீட்டுக்கு போகும் பரபரப்பிலும் நமக்கு நேரம் ஒதுக்கிப் பேசினார் பாலாஜி. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக இவரும் இவரின் மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால் இந்த பிக்பாஸில் இவர்கள் இருவருமே போட்டியாளர்கள்.

“இந்த ஒரு வருடம் எனக்கு மிகப்பெரிய பாடம். நம்மகூட இருக்கிறவங்கள்ல யார் சரி, யார் தப்புனு தெரிஞ்சுக்கிறதுக்கு இயற்கை ஏற்படுத்தித்த இடைவெளியாதான் இந்த நாள்களை நினைக்கிறேன். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி தந்த பிரபல்யத்தைவிட இந்த ஒரு வருஷம் முழுக்க பெரிய பப்ளிசிட்டியை என் மனைவி எனக்கு ஏற்படுத்தித் தந்தாங்க. கணவனுக்கு மனைவியே பி.ஆர்.ஓவா இருக்கிறது எவ்வளவு பெரிய கொடுப்பினை. ஸ்ஷப்பா... தூங்கி எந்திரிச்சா... கோர்ட் வாசல், போலீஸ் ஸ்டேஷன் வாசல்னு யூ-டியூப் சேனல், டிவி சேனல், நாளிதழ், வாரஇதழ் பேட்டிகள்னு டிசைன் டிசைனா எத்தனை எத்தனை ப்ரமோஷன்ஸ். 

உண்மையைச் சொல்லணும்னா என் மனைவி நித்யாவை பார்த்து ஒரு வருஷமாச்சு. என் மகள் போஷிகாவைப் பார்க்கவும் என்னை அனுமதிக்கலை. ஆனால் அவளோட படிப்புக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் நான்தான் கவனிச்சுட்டு வர்றேன். ஒரு அப்பனா அது என் உரிமை, கடமை. போலீஸ், கோர்ட்னு போய் நின்னாலும் பிரச்னை எனக்கும் நித்யாவுக்கும்தான். நாங்க இருவரும் இன்னைக்கு பிரிஞ்சிருக்கலாம், நாளைக்கே சேரவும் செய்யலாம். அனால் ஃபோஷிகாவைப் பொருத்தவரை நான்தான் அப்பா, நித்யாதான் அம்மா.

‘ஏழெட்டு மணிநேரம் இருக்கும்போதே வீட்ல உங்க ரெண்டு பேருக்கும் பிரச்னை வரும். இப்ப பிக்பாஸ் வீட்ல அதுவும் 24 மணிநேரமும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு எப்புடிடா இருக்கப்போறீங்க? நீ எப்புடிடா சமாளிக்கப்போற’னு ஃப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். உண்மை. ரொம்பவே கஷ்டம்தான். ஒரு வருஷத்துக்குப் பிறகு நித்யாவை இப்பதான் பிக்பாஸ் வீட்ல சந்திக்கப்போறேன். அதை நினைச்சா எனக்கே ஒருமாதிரிதான் இருக்கு. முதன்முதல்ல ஒரு பொண்ணைப் பார்த்து லவ் பண்ணுவாங்கள்ல, இது அப்படித்தான் இருக்கு. ஏற்கெனவே லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, புள்ளையும் பெத்தாச்சு. என் வாழ்க்கையில அது மறுபடியும் நடக்குது பாருங்க. வாழ்க்கையை திரும்பத்திரும்ப ஆரம்பிக்கிறோம்னு நினைக்கிறேன். 

‘மாப்ள, கன்டென்ட் எடுக்க உன்னைத்தாண்டா டார்கெட் பண்ணுவாங்க. பலியாயிடாத. ரிலாக்ஸா இரு - இது இன்னொரு நண்பனின் அட்வைஸ். ‘கடந்த ஒரு வருஷமா யூ-டியூப் சேனல்களுக்கே இந்த பாலாஜிதாண்டா சைடீஷ்... துஷ்மான்’னேன். சிரிச்சுட்டான். மத்தவங்களுக்கு சைடிஷ் ஆகிறது நமக்கு புதுசா என்ன? சந்தோஷமா ஆகிட்டுப்போகவேண்டியதுதான். 

இதுக்கிடையில ‘நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ ஷோவோட அடுத்த சீசன் இந்தமாசம் கடைசியில ஆரம்பிக்கிறாங்க. ‘நீங்களும் ஈரோடு மகேஷும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி ஒண்ணாவே இருப்பீங்க. ரெண்டு பேரும் போன சீசனை ஆங்கர் பண்ணினமாதிரி இந்த சீசனையும் பண்ணிக்கொடுத்துடுங்க’னு சொன்னாங்க. யார் கண் பட்டுச்சோ தெரியலை அந்த வைஃபும் இப்ப என்கூட இல்லை. நான் இங்க வந்துட்டேன். இப்ப அவன் அந்த ஷோவை வேற யார்கூடவோ சேர்ந்து பண்ணப்போறான். முகத்துல பதற்றத்தை காட்டினாலும் மனசுக்குள்ள அவேன் சந்தோஷமாதான் இருப்பான் (சிரிக்கிறார்) ஃபன்னுக்காக சொன்னேன். அவன் என் முதுகெழும்பு மாதிரி. நான் தனியா போனா அவனைப்பற்றி கேட்பாங்க. அவனை எங்கயாவது பார்த்தா என்னையப் பற்றி அவன்ட்ட கேட்பாங்க. அந்தளவுக்கு மகேஷ் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்று சிரிக்கிறார் பாலாஜி. 

“பெர்சனலா இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட தூத்துக்குடி மக்களைச் சந்திச்சிட்டு வந்திருக்கீங்க. அப்ப உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?”

“என் தனிப்பட்ட லைஃப்ல சந்திக்க பிரச்னையை தாண்டி வந்ததையே பலர் பெரிய விஷயமா நினைக்கிறாங்க. ஆனா அந்த மக்கள் பொதுப்பிரச்னைக்காக ஒண்ணா நின்னவங்க. அவங்களுக்கு அடிமேல அடி. அதுவும் அடிச்சது அரசாங்கம். அந்த மக்களோட வலியும் வேதனையும் புரிஞ்சுக்க முடிஞ்சது. அவங்களுக்கு ஆறுதல் சொல்ல போனா பின்னாடியே ஆயிரத்தெட்டு கேமராவுடன் வந்து நிக்கிற அளவுக்கு நாம பெரிய ஆள் கிடையாது. ஆனா அவங்க தினமும் டிவியில என்னைப் பார்த்து சிரிச்சிருக்காங்க. அவங்களோட பார்வைதான் எனக்கான சம்பளம். எந்த கைமாறு செஞ்சும் அதை திருப்பித் தரமுடியாது. ஆனா காமெடியனான நாம போனா நிச்சயம் அவங்க சந்தோஷப்படுவாங்கனு நினைச்சேன். 

‘சினிமாக்காரங்க வந்தாலே விரட்டி அடிக்கிறாங்க மச்சான். வந்து மாட்டிக்காத, ஜாக்கிரதை’னு நண்பன் ஒருத்தன் அங்க இருந்து சொன்னான். ‘போவோம். ‘நீங்களாம் ஏண்டா வர்றீங்க’னு யாராவது கேட்டா ஐம்புலன்களையும் க்ளோஸ் பண்ணிகிட்டு அமைதியா வந்துடுவோம்’னு நினைச்சுதான் போனேன். அந்த ஹாஸ்பிடல் வார்டுக்குள்ள நுழைஞ்சதுமே, ‘‘அண்ணே நீங்களா’னு ஒரு பையன் ஓடிவந்து கட்டிக்கிட்டான். ‘நமக்கு நுழைவு சீட்டு கிடைச்சிடுச்சு’னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு ‘ஓகே... புரசீட்’னு சொல்லிட்டே உள்ளப்போனேன். அந்தப் பையனே சிரிச்சுட்டான். 

அந்த மக்களோட வேதனை, அங்கப் போய் பார்த்தவங்களுக்குத்தான் தெரியும். இரும்பு ராடுல அடிவாங்கின ஒரு பொண்ணுக்கு மண்டையி கட்டுப்போட்டுகிட்டு கிடக்குது. இன்னொரு பையனுக்கு முன் கால்ல பட்ட தோட்டா துளைச்சுகிட்டு பின் கால் வழியா வெளியேறியிருக்கு. இப்படி திரும்பின பக்கமெல்லாம் அவ்வளவு வேதனை. தலையில சுடப்பட்டு இறந்துபோன ஸ்னோலின் வீட்டுக்குப் போயிருந்தேன். துயரத்தின் உச்சம். ‘இது எதேச்சையா நடந்த சம்பவம் இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை’ என்பதுல அந்த மக்கள் உறுதியா இருக்காங்க. பாவம் சார் அந்த மக்கள். இந்தப் பாவத்தையெல்லாம் என்ன செஞ்சு கழுவப்போறாங்கனு தெரியலை. சம்பந்தப்பட்டவங்க இப்ப வேணும்னா நழுவலாம், ஆனா நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரணும். 

ஓகே. சார் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு. அங்க இருந்து திரும்பி வரும்போது நானும் நித்யாவும் பழையபடி ஒற்றுமையா கணவன்-மனைவியா திரும்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. இந்த சீசனோட டைட்டில் வின் பண்றேனோ இல்லையோ, நிச்சயம் ‘நல்லவன்’ங்கிற பட்டத்தோட வெளிய வருவேன். அவ்வளவுதான் சார். என்னை வாழ்த்தி அனுப்பிவைங்க” என்றபடி விடைபெறுகிறார் பாலாஜி. 

வாழ்த்துகள் பாலாஜி.