Published:Updated:

ஜெயில், பெங்காலி - தமிழ், `சிங்கிள்'... முதல் நாளிலேயே கமலின் 7 குறியீடுகள்!

தார்மிக் லீ

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி, போட்டியாளர்களும் உள்ளே சென்றுவிட்டார்கள். பிக் பாஸ் முதல் நாளில் கமல்ஹாசனின் குறியீடுகள் பற்றிய கட்டுரை இது. 

ஜெயில், பெங்காலி - தமிழ், `சிங்கிள்'... முதல் நாளிலேயே கமலின் 7 குறியீடுகள்!
ஜெயில், பெங்காலி - தமிழ், `சிங்கிள்'... முதல் நாளிலேயே கமலின் 7 குறியீடுகள்!

ஏழு கோடி பார்வையாளர்கள்... 80 கோடி வாக்குகள்... காதல்... கலவரங்கள்... கருத்து வேறுபாடுகள்... சர்ச்சைகள் எனக் கலந்துகட்டிய உணர்வாக இருந்தது பிக் பாஸ் முதல் சீஸன். ஆனால், அந்தப் பரபரப்பைத் தாங்கிப் பிடித்தவர்களில், முதன்மையானவர் `தொகுப்பாளர்' கமல். அரசியலுக்கு வரப்போகும் முன் கமல்ஹாசனை கடந்த பிக் பாஸ் சீஸனில் பார்த்தோம். அரசியலுக்கு வந்ததற்குப் பின் கமல்ஹாசனை இந்த சீஸனில் பார்க்கப்போகிறோம். நேற்றைய பிக் பாஸ் எபிசோட் ஒரு சாம்பிள். பிக் பாஸ் முதல் நாளில் கமல்ஹாசனின் குறியீடுகள் பற்றிய கட்டுரை இது. 

`யாரென்று தெரிகிறதா' பாடல் பின்னணியில் ஒலித்தது. ரசிகர்கள் கடலெனத் திரண்டிருக்க, ஒரு கார் கூட்டத்தில் நீந்தி வந்தது. காருக்குள் இருந்த கமல், `கமல் சார்' என்று குறிப்பிடப்பட்டிருந்த கேரவனுக்குள் சென்றார். சற்றுநேரம் கழித்து ரசிகர்களுடன் உரையாடத் தொடங்கினார். `தமிழகமெங்கும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இதேமாதிரி அன்பு எனக்குக் கிடைத்தது' எனப் பேசிக்கொண்டே இருக்கும்போதுதான், `தமிழகத்தின் வருங்கால முதல்வர்' என்ற ஒரு குரல் நடுவில் ஒலித்தது. ஒரு தேர்ந்த அரசியல்வாதி மேடையில் எப்படிப் பேசுவரோ, அப்படித்தான் இருந்தது கமல் பேச்சு. வெல்கம் கமல். வெளியே உரையாடலை முடித்துவிட்டு, பிக் பாஸ் மேடையில் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். 

புதிதாத அமைக்கப்பட்டிருந்த ஜெயிலைப் பார்த்ததும் ரோலான வசனத்தை அப்படியே சரிகட்டிவிட்டு நீச்சல் குளத்தை விவரித்தார்.`இது பணக்காரங்க எல்லாம் குளோரின் போட்டு குளிக்கும் குட்டை. ஒரு ரிசார்ட்னா இதெல்லாம் வேணுமே. இங்கே 16 பேரை தங்கவெச்சு, மாத்தி மாத்தி தீர்ப்பு சொல்லி, கடைசியில ஒருத்தரை ஜெயிக்க வெச்சு...' என இவர் ஸ்டைலில் பழைய `சம்பவங்களை' கிளப்பிவிட்டார். தொடர்ந்து லிவிங் ரூமுக்குள் நுழைந்த கமல், ஒட்டுமொத்த வீட்டையும் விவரத்துக்கூறி வெளியே வரும்போது, `கமல் சார் கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க' என்று பிக் பாஸின் குரல் ஒலித்தது. கன்ஃபஷன் ரூமுக்குள் நுழைந்த கமல், `பாஸ் நாம மீட் பண்ணவே இல்ல. ரொம்ப நாளாச்சு, நீங்க எப்படி இருக்கீங்க, இதுக்கு நடுவுல நான் வெளியில போய் கட்சியெல்லாம் ஆரம்பிச்சுட்டேன். நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க, ஆர்டர் பண்ண ஆள் இல்ல, சட்ட திட்டங்கள் சொல்ல ஆள் இல்ல, தனியா நீங்களே பேசிட்டு இருப்பீங்களா?' என்று பிக் பாஸிடம் நக்கலாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு, `பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள், நீங்க போகலாம் கமல் சார்!' என்று பல்ப் கொடுத்து அனுப்பினார்கள். அதற்கு, `ஓ... கேள்வியே கேட்கக்கூடாதா, பிக் பாஸ்னா அப்படித்தான்ல!' எனச் சமாளித்துவிட்டு வெளியேறினார்.  

கார்டன் ஏரியாவுக்கு வந்தவுடன் `இந்தப் பக்கம் பாத்ரூம் இந்தப் பக்கம்...' எனச் சொல்லி சர்ப்ரைஸ் ரியாக்‌ஷனோடு ஜெயிலைப் பற்றி விவரித்தார். ``ரொம்ப சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டா, அதுக்குத் தண்டனையும் இருக்குனு நினைவுபடுத்துறதுக்காகவா இது... என்ன சார் அநியாயமா இருக்கு. ஜெயில் தண்டனையும் கொடுத்துட்டு, மத்தவங்களோட சொகுசு வாழ்க்கையையும் இங்கே இருந்து பார்த்துட்டு இருக்கணும்னா எப்படி? இங்கே ஒரு வசதியும் இல்லையே! ஃபேன்கூட இல்ல. அப்போ இது நிஜமான ஜெயில் இல்லையா?" என மீண்டும் இவர் பாணியில் சர்காஸம் செய்தார். சென்ற வருடம் இதே சமயத்தில்தான் சசிகலா ஜெயிலில் உலா வந்த வீடியோ வைரலானது. அதைத் தோண்டியெடுக்கும் வகையில் பாரபட்சம் பார்க்காமல் நக்கலடித்தார். `வெளியில வேறமாதிரி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லாம்கூட இருக்குதுங்க!' என்று கடந்த சீஸனில் சொன்னது நினைவுக்கு வந்தது.  

யாஷிகாவை அறிமுகம் செய்து வைத்தபோது, `இருக்கிறதிலேயே இவர்தான் இள வயது போட்டியாளர், அதுக்குனு ரொம்ப கம்மி கிடையாது. அடுத்த வருடம் ஓட்டுப் போடணும்னாகூட போடலாம்!' என்று ரசிகர்களைப் பார்த்து சிரித்தார். ஆனால், யாஷிகா புது டெல்லியைச் சேர்ந்தவர். அவருக்கு இங்கே ஓட்டுரிமை இருக்காது. அது நமக்கே தெரியும், கமலுக்கா தெரியாது. ஆனா, இது வேற பாஸ். கமலை சிறுவயதிலிருந்தே நடிகராகப் பார்த்து வந்திருந்தாலும், தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருந்தார். பொன்னம்பலத்தை அறிமுகப்படுத்தியபோது, `இவரிடம் ஒரு பிரத்யேக விஷயம் என்னன்னா, வெவ்வேறு உயரங்களிலிருந்து சுத்திக்கிட்டே கீழே விழுவார். அதைச் செய்யக்கூடியவங்க ரொம்பக் குறைவு. ஹீரோக்கள்ல நான் ஒருத்தன்தான் செஞ்சுட்டிருந்தேன்!' எனப் பெருமையாகச் சொன்னார். கமல் பேச்சின் ஸ்பெஷல் என்னவென்றால், ஓர் உண்மையும் கூடவே கொஞ்சம் சர்காஸமும் ஒளிந்திருக்கும். அதாவது, அந்தமாதிரி செய்யக்கூடிய ஃபைட்டர்கள் குறைவு. அதேசமயம், அதில் நானும் ஒருவன் என்கிறார், கமல். அதற்குப் பின் பொன்னம்பலம் அவரைப் பற்றி பேசியதுதான், கமலின் சாதுர்யப் பேச்சுக்குக் கிடைத்த வெற்றி. 

வெகுஜன மக்களுக்குப் பிடிக்காத ஒன்று, தற்பெருமை. அதை மக்களுக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கும்பட்சம் கையாளக்கூடியவர், கமல். முதல் எபிசோட் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். எல்லாப் போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தும்போதும், `அவங்க அப்படிச் சொன்னாங்களே, உங்க பாப்புலர் வசனம் ஒண்ணு இருக்காமே, அந்தப் படத்துல சூப்பரா நடிச்சிருந்தீங்களாமே...' எனத் தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பேசுவதுபோல் பேசினார், கமல். பெரிய பின்புலம் கொண்டவர்களை அறிமுகப்படுத்தும்போது, அந்தப் பின்புலங்களின் பெருமை அதிகம் இருக்கும். போட்டியாளர்களின் அறிமுகம் குறைவாகத்தான் இருக்கும். இதுவும் கமல் ஸ்பெஷல்தான். 

அனந்த் வைத்தியநாதன் உள்ளே நுழையும்போது, `வெளியே வரும்போது ஜோடியோட வாங்க சார்!' என்று அவரது மாணவர்கள் அவரைக் கிண்டலடித்தார்கள். `ஏன் உங்களுக்கு ஜோடி இல்லையா?' எனக் கமல் அனந்திடம் கேட்டபோது, `ஆமா. இப்போ எனக்கு ஜோடி இல்ல' எனச் சொல்ல, சிறிய இடைவெளிக்குப் பிறகு, `லக்கிமேன். இவங்களுக்கு இப்போ புரியாது. வயசு வரும்போது புரியும்!' என்று தட்டிக்கொடுத்து அனுப்பினார். ஆனால், அதற்கு சில நிமிடங்கள் முன்புதான், `நாம் எல்லோரும் சிறு குழந்தைகள். தடுக்கி விழுந்துட்டா, சீக்கிரம் எந்திரிச்சிடணும்!' எனச் சொன்னார். சூழலுக்குத் தகுந்த பேச்சும், ரியாக்‌ஷனும் கமலிடம் இருக்கும் அல்டிமேட் விஷயம். 

கடைசியாக அறிமுகமான ஐஷ்வர்யா தத்தா பெங்காலிப் பெண் என்பதைப் பேச்சை வைத்துக் கண்டுபிடித்தார், கமல். அதன்பின் கமல் பேசும்போது, `பெங்காலியும் தமிழும் அவ்ளோ வித்தியாசம் இல்ல' எனக் கூறினார். நக்கலான ஒரு ரியாக்‌ஷனைக் கொடுத்து, `உங்களுக்கு எப்படி ஐந்து வருடமா தமிழ்ப் பேச வருதோ, 70 வருடமா எங்களுக்குப் பெங்காலி பேசவரும். எப்படினு யோசிக்கிறீங்களா... எல்லோரும் தேசிய கீதத்தை பெங்காலியிலதானே பாடிக்கிட்டு இருக்கோம்!' என்றார். கமலைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் சிந்தனை வந்திருக்குமா, தெரியவில்லை.  

ஒரு எபிசோடுக்குள் இத்தனை குறியீடுகள். இன்னும் எத்தனை வருமோ... வீ ஆர் வாட்சிங் யூ கமல்!