Published:Updated:

'டர்ட்டி' யாஷிகா, 'அமைதி' அனந்த், 'மிஸ்டர் க்ளீன்' சென்றாயன்... பிக்பாஸ் சேட்டை ஆரம்பம்!

சுரேஷ் கண்ணன்
'டர்ட்டி' யாஷிகா, 'அமைதி' அனந்த், 'மிஸ்டர் க்ளீன்' சென்றாயன்... பிக்பாஸ் சேட்டை ஆரம்பம்!
'டர்ட்டி' யாஷிகா, 'அமைதி' அனந்த், 'மிஸ்டர் க்ளீன்' சென்றாயன்... பிக்பாஸ் சேட்டை ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டின் துவக்க நாள்  இன்னமும் விடியவில்லை. மாற்று உடை இல்லாததால் அவரவர்களுக்கான பெட்டிகளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஓவியா மட்டும் ஒரு பெட்டியோடு வந்ததால் சந்தேகம் கொண்ட மற்ற போட்டியாளர்கள், அவர் தற்காலிமாக தங்கவிருப்பதை எளிதில் கண்டுபிடித்து விட்டார்கள். பிக்பாஸிற்கு துவக்கத்திலேயே இத்தனை பெரிய பல்பு கிடைத்திருப்பது சோகம். மட்டுமல்லாமல் இனிமேலும் ஓவியா அங்கு தங்க முடியாதது அதை விடவும் பெரிய சோகம். 

எல்லோரும் உள்ளுக்குள் மறைத்துக் கொண்ட நிம்மதியுடனும் ஆசுவாசத்துடனும் ஓவியாவை வழியனுப்பி வைத்தார்கள். ‘உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு’ என்று தனக்கேயுரிய சிரிப்புடன் அவர்களை கலாய்த்தார் ஓவியா. ‘மூடர் கூடம்’ திரைப்படத்தில் முன்பு இணைந்து நடித்திருந்த காரணத்தினால் ஓவியாவிடம் பாசத்தைக் கொட்டினார், சென்றாயன். ‘இதைச் சாக்கா வைச்சு டச் பண்ணிடுவாங்க” என்றார் யாஷிகா. யம்மாடி, ரொம்ப ஜாக்கிரதைதான். 

‘இங்க வேளா வேளைக்கு சாப்பாடு தந்துடுவாங்கள்ல” என்று ஓவியாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார், சென்றாயன். “டயட் இருந்த மாதிரி ஆயிடும். இங்க வந்த போது அம்பத்தைந்து கிலோவாக இருந்த நான் ஐம்பது கிலோவா குறைஞ்சுட்டேன்” என்றார் ஓவியா. 

அவரவர்களின் பெட்டி வந்து சேர்ந்தவுடன் சந்தைக்கடை மாதிரி ஒரே சத்தம். சிலரது பெட்டிகள் மட்டும் வரவில்லை. ‘மாற்று உள்ளாடை’ இல்லாமல் அவஸ்தைப் பட்டார், டேனியல். சென்றாயன் கேமிராவின் முன் வந்து கொடூரமான ஆங்கிலத்தில் முறையிட்டுக் கொண்டே இருந்தார். இதை அவர் காமெடி என்று நினைத்துக் கொண்டிருந்தால் உடனே கைவிடுவது நல்லது. முடியல!

சிலரின் பெட்டிகளை இன்னமும் தராமல் பிக்பாஸ் விளையாடுவது, வடிவேலு மொழியில் சொன்னால் ‘சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு’. இது என்ன இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டா? கன்வேயரில் பெட்டிகள் காணாமல் போவதற்கு? இதன் மூலம் அவர்கள் வெறுப்பேறி கோபம் அடைவார்கள் என்கிற நோக்கமாக இருக்கும். 

சென்ற சீசனில் ரைஸா , ஆரவ் தவிர எல்லோரும் பெரும்பாலும் தெரிந்த முகங்கள். ஆனால், இந்த சீசனிலோ யார் வைஷ்ணவி, யார் ஐஷ்வர்யா தத்தா , நித்யா போன்றவை கூட இன்னும் தெளிவாக கண்டுபிடிக்காத சூழல் நீடிக்கிறது . இதில் மமதி, ரித்விகா வேறு அவ்வப்போது தலை காட்டுகிறார்கள். கொஞ்சம் தெரிந்த முகங்கள் இருந்திருக்கலாமோ ?

திருவிழாவில் தொலைந்து போன சிறுவன் மாதிரி விழித்துக் கொண்டேயிருந்தார் அனந்த் வைத்தியநாதன். பொன்னம்பலம் ‘காவி’ வேட்டிக்கு மாறினார். மனிதர் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார். ஜெய்ஸ்ரீராம்.

சென்றாயனை பிச்சைக்காரன் போல் டான்ஸ் ஆட வைத்து பார்த்து மகிழ்ந்தது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா கூட்டணி. அவரும் வெள்ளந்தியாக அவர்களுடன் உடன்பட்டார், பாவம். 

ஒருவழியாக பிக்பாஸ் வீட்டில் பொழுது விடிந்தது. “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள்தானா, சொல்லுங்கள்” என்ற பாடல் கணீர் என்று ஒலிக்க, முதல் நாள் பாடலிலேயே தன் குறும்பைக் காட்டினார், பிக்பாஸ். அவருமே இதைக் கண்ணாடி முன் பாடிப் பார்ப்பது நல்லது. 

தன் மகளைப் பிரிந்திருக்கும் சோகத்தை முதல் நாளிலேயே கொட்டினார் நித்யா. சமூக சேவகி மற்றும் குடும்பத்தலைவி என்கிற இரண்டு பாத்திரங்களுக்கும் இடையில் இவர் தத்தளிக்கிறார் என்று தோன்றுகிறது. ‘Not in good terms with Balaji’ என்று அந்த வீட்டின் நாய்க்குட்டி உட்பட அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். 

எப்போதாவதுதான் யாஷிகா குளிப்பாராம். சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய ஆர்மியின் சதவீத ரேட் கொஞ்சம் குறைந்திருக்கலாம். அல்லது, இதற்காகவே கூடுமோ என்னமோ. இவரைக் கேமரா காட்டும் போதெல்லாம், பாக்யராஜ் ஒரு திரைப்படத்தில் செய்வது போல சில்லறைக் காசுகளை சிதற விட்டு, வீட்டின் சின்னப்பசங்களை திசை திருப்ப வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. 

தன் உடல் உபாதை காரணமாக ‘கடுகடு’வென்றிருக்கும் மும்தாஜ், முதல் சீஸனின் நமீதாவை நினைவுப்படுத்துகிறார். ‘பாத்ரூம்லாம் க்ளீனா வெச்சுக்கணும். சுத்தம் முக்கியம்’ என்கிற உபதேசத்தின் மூலம் பின்னாலேயே வந்த வைஷ்ணவியிடமிருந்து இன்னொரு ‘நமீதா’வை பார்க்க முடிந்தது. 

அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலத்திற்கு பாடல் நுணுக்கங்களைக் கற்றுத் தந்து கொண்டிருந்தார். கால் கிலோ மட்டன் வாங்கி தின்ற பாவத்திற்காக, கறிக்கடை பாயிடம் ‘நின்னுக்கோரி வர்ணம்’ மிதிபடும் கவுண்டமணி நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வந்தது. வெளியே வரும் போது, ஒன்று, பொன்னம்பலம் ‘சூப்பர் சிங்கருக்கு’ தகுதியாகியிருக்க வேண்டும் அல்லது அனந்த் சண்டைக்கலைஞராகியிருக்க வேண்டும். இரண்டில் ஒரு கொடுமை நடந்தே தீரும் எனத் தோன்றுகிறது. 

பிக்பாஸின் முதல் நாரதர் வேலை துவங்கியது. தலைவர் போட்டிக்கான டாஸ்க். மூன்று உறைகள் பிக்பாஸ் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். கண்டுபிடித்து எடுக்கும் அந்த மூன்று பேர் மட்டும் தேர்தலில் போட்டியிட முடியும். ‘பெண்களின் ஆடைகளில் தேடாதீர்கள்’ என்று ஆண்களை மும்தாஜ் ஆட்சேபித்தது ஒருவகையில் சரியான விஷயம்தான். “ஆனா.. எப்படி தேடுறது?'’ என்ற சென்றாயனின் மெல்லிய எதிர்ப்பையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

மஹத், ஜனனி, மும்தாஜ் ஆகியோர், வேட்பாளர் உறைகளைக் கண்டெடுத்த அதிர்ஷ்டசாலிகள். ‘எனக்கு leadership quality’ நிறைய இருக்கு. என்னைத் தேர்ந்தெடுங்க’ என்று எல்.கே.ஜி பொண்ணு மாதிரி எல்லோரிடமும் மல்லாடிக் கொண்டிருந்த ஜனனியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. மும்தாஜூக்கு வாக்குகள் வராது என்பது அப்போதே தெரிந்து போயிற்று. மஹத் பினாமி வேட்பாளர் போல கணக்கிலேயே இல்லை. எனவே, எதிர்பார்த்தது போல் ஜனனி தலைவர் ஆனார். தலைவருக்கான பொறுப்புகளையும் கடமைகளையும் பிக்பாஸ் விவரிக்க, குழந்தைக்கான உற்சாகத்துடன் புரிந்தது போல் அனைத்திற்கும் தலையாட்டினார். வீட்டில் உள்ள அனைவரிடமும் சரியாக வேலை வாங்குவது, காலை வேளைகளில் தூங்கவிடாமல் செய்வது போன்ற சில டாஸ்குகளை ஜனனிக்கு அடுக்கினார் பிக் பாஸ். இதை ஜனனிக்கான சீக்ரெட் டாஸ்க்காம். இதை அவர் செய்துமுடித்தால், அடுத்த வாரமும் ஜனனியை யாரும் நாமினேட் செய்ய முடியாதாம். 

சமையல், பாத்திரம் கழுவுதல், சுத்தம் செய்தல் ஆகிய மூன்று பணிகளுக்காக அணிகள் பிரிக்கப்பட்டன. சென்றாயன் மற்றும் டேனியலுக்கு ‘சுத்தம் செய்யும்’ பணியை ஜனனி தேடித் தந்ததில் அவரே ஒருவேளை உணர்ந்திராத தன்னிச்சையானதொரு ‘அரசியல்’ இருக்கிறது. தோற்றத்திலும் உடல்மொழியிலும் எளிமையாக இருப்பவர்கள், சில பணிகளுக்குத்தான் தகுதியானவர்கள் என்று நம் பொதுப்புத்தி தன்னிச்சையாக கருவதில் சமூக அநீதிக்கான சில அம்சங்கள் இருக்கின்றன. 

இருவரும் உற்சாகத்துடன் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார்கள். அணியில் ஒரு பெண் உறுப்பினர் இருந்தாக வேண்டும் என்று யாஷிகாவையும் இணைத்துக் கொண்டார்கள். சுத்தம் செய்யும் பணியை இப்போதே துவங்கலாம் என்று உடனடி சின்ஸியராக இருந்தார் டேனியல். சில காரணங்களால் ‘எல்லாம் காலைல பார்த்துக்கலாம்’ என்று சென்றாயனும் யாஷிகாவும் கடந்து சென்றார்கள். 

அனந்த் வைத்தியநாதன் ‘பாத்திரம் கழுவும்’ அணியின் தலைவர். மும்தாஜ் ‘சமையல் அணியின்’ தலைவராக இருந்ததால் தன் ஏரியாவிற்கு உட்பட்ட பந்தாவை உடனே துவங்கினார். ‘சும்மா சும்மா அந்த டீ வேணும்.. இந்த காபி வேணும் –ன்னு யாரும் சொல்லக் கூடாது.’ என்று கறார் ஆன குரலில் தெரிவித்தார். ‘ஒரு அண்டால காபித்தண்ணி போட்டு வெச்சிடுவோம். வேணும்ங்கிறவங்க நாள் பூரா மொண்டு குடிங்க’ என்று மட்டும்தான் அவர் சொல்லவில்லை. 

மற்றவர்களின் பெட்டிகள் வந்து சேர்ந்தன. ‘ஜட்டி கிடைச்சிருச்சே’ என்று தன் நீண்ட நேர பிரச்னை தீர்ந்த மகிழ்ச்சியில் கூவினார், டேனியல். ஒரு புறாவிற்கு இத்தனை பெரிய அக்கப்போரா?

நாமினேஷன் படலம் துவங்கியது. நாம் எதிர்பார்த்தது போல் எதிர்பாராத விஷயங்கள் வெளியே வந்தன. சில விநோதமான காரணங்களையும் அறிய முடிந்தது. யூகித்ததைப் போல், சண்டைக்கோழியாக இருந்த மும்தாஜ் நாமினேட் ஆனார். ‘எனக்குத் தெரியும்’ என்பது போல் சிரித்துக் கொண்டார். ‘I will not quit’ என்று ஐஸ்வர்யாவிடம் அவர் வீர சபதம் செய்ததில் ‘காயத்ரி’ சொரூபம் தெரிந்தது. அப்ப… இருக்கு… சண்டை இருக்கு….

பாட்டுப்பாடுவது, சொல்லித் தருவது போன்ற சமயங்களில் தவிர்த்து சிவனே என்று அமைதியாக அமர்ந்திருந்த அனந்த் வைத்தியநாதனும் நாமினேஷன் பட்டியலில் இணைந்தார். மற்றவர்களிடம் சரியாக பேச மாட்டேன்கிறாராம். ஒரு பாட்டுக் கலைஞனை ‘பேசவில்லை’ என்று குறைகாண்பது அபத்தம்தானே?

தான் பரணி போல் ஆக விரும்பவில்லை என்று உள்ளே வந்த ரித்விகாவும் நாமினேஷன் வரிசையில் இணைந்தார். பரணியைப் போலவே, பிக்பாஸ் வீட்டில் அவர் இருக்கிறாரா, என்ன?’ என்று சந்தேகம் வரும்படியாக சந்தடியே இல்லாமல் இருக்கிறார். எனவே நாமினேட் ஆனதில் ஆச்சரியமில்லை. 

நித்யா இந்தப்பட்டியலில் வந்தது சற்று ஆச்சரியம். ‘சுத்தமா இருக்கமாட்டேன்றாங்க’ என்பது போல் மும்தாஜ் இவரை குற்றம் சாட்டினார். சென்றாயன் ‘அண்ணா’ உதவியுடன் ‘கார்ப்பெட்டை’ நித்யா மிகுந்த மெனக்கெடலுடன் சுத்தம் செய்யும் காட்சிகளை நாம் பார்த்தோம். 

நாம் மீண்டும் மீண்டும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஒரு நாள் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை ஏறத்தாழ ஒன்றரை மணி நேரமாகச் சுருக்கி நமக்குப் பார்க்கத் தருகிறார்கள். மட்டுமல்லாமல் பிக்பாஸ் டீம் எடிட் செய்து தரும் காட்சிகள், கோணங்களைத்தான் நாம் பார்க்கிறோம். இவற்றைக் கொண்டு முன்தீர்மானங்களுக்கு, முடிவுகளுக்கு வருவது முறையானதாக இருக்காது. எந்தப் போட்டியாளர் மீதாவது நமக்கு கோபமோ அல்லது பிரியமோ வந்தால் இந்த விஷயங்களை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது.   நினைவிருக்கட்டும் சென்ற சீசனின் முதல் வார லீடர் சிநேகன். நாமினேட் ஆனவர்கள் ஸ்ரீ , அனுயா, ஜூலி .

ஒவ்வொரு போட்டியாளரின் பிளஸ், மைனஸ் என்னவாக இருக்கும், அவற்றைப் பார்க்க இங்கு க்ளிக் செய்க 

பல்வேறு தகுதிகளில், சமூகப் படிநிலைகளில், அந்தஸ்துகளில் உள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுகிறார்கள். தங்களின் அத்தனை தகுதிகளையும், அகங்காரங்களையும் முழுவதுமாக கழற்றி வைத்து விட்டு ஓர் எளிய நபராக இந்த வீட்டிற்குள் இயங்குபவரே புத்திசாலி. அவரே வெற்றியாளர் ஆவதற்கான சாத்தியம் அதிகம். 

‘மனிதர்களின் கூடிவாழும் தன்மையை’ பரிசோதிப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படையான நோக்கம். இதற்குள் நிகழும் முரண்கள், சண்டைகள், விரோத மனப்பான்மைகள் போன்றவை இந்த நிகழ்ச்சிக்கான வணிக தீனியும் கூட. 

அந்த தீனியைத் தராமலிருப்பதில்தான் போட்டியாளர்களின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. மாறாக, வெளியே இருந்த தங்களின் தகுதிகளை மண்டைக்குள் அப்படியே அடக்கி வைத்திருந்து அதே மிதப்புடன் இங்கு உலவினால் வெளியேற்றப்படுவது சீக்கிரம் நடக்கும். உயர்வு மற்றும் தாழ்வுமனப்பான்மைகளை களைந்து விடுவது நல்லது. 

இந்த நோக்கில் மும்தாஜ், ரித்விகா, அனந்த் வைத்தியநாதன் போன்றோர் பிக்பாஸ் வீட்டில் நீடிப்பது சிரமம் என்று தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

கலர்புல்லான கொண்டாட்டங்களுடன் ஆரம்பித்த முதல் எபிசோடைப் படிக்க இங்கு க்ளிக் செய்க